
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். மத்தேயு: 5.9
இன்று உலகில் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ‘சமாதானம்’ என்ற வார்த்தையும் ஒன்றாக உள்ளது. நாடுகள் இடையே சண்டை, பிரிவுகள், இனக் கலவரங்கள், தனி மனித போராட்டங்கள் என்று மனித வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும், சமாதானம் இல்லாத நிலையை நாம் காண முடிகிறது. இதனால் மக்கள் இடையே ஒருபுறம் பகையும், வெறியும் நிலவுகிறது. மற்றொருபுறம் பயமும், திகிலும் சூழ்ந்து உள்ளது.
உலகில் நிலவி வரும் இந்த சமாதானமற்ற நிலையில், சமாதானம் அளிப்பவர்களாக தேவனுடைய புத்திரரை தேவன் வைத்துள்ளார். இதை கூறும் போது, நம்மில் பலரின் மனதிலும் எழும் ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், பிரதர், எனக்கே சமாதானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். இந்த நிலையில் நான் மற்றவர்களுக்கு எப்படி சமாதானத்தை அளிக்க முடியும் என்பதே.
இது குறித்து இயேசு கூறுகையில், என் சமாதானத்தையே உங்களுக்கு வைத்து போகிறேன், அது உலகம் அளிப்பது போன்றது அல்ல (யோவான்:14.27) என்கிறார். இயேசு தேவனுடைய குமாரன் இதனால் அவரது வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று நாம் கருத முடியாது. நான்கு சுவிசேஷங்களையும் ஆழ்ந்து சிந்தித்தால், அவர் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் விரோதிகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆயினும் அவருக்குள் பெரிய சமாதானம் இருந்தது. எப்படி என்றால், அவர் பிதாவோடு எப்போதும் பேசுகிறவராக இருந்தார். அதாவது ஜெபிக்கிறவராக இருந்தார். இயேசுவை பின்பற்றும் நமக்கு அந்த சமாதானத்தை வைத்து போயுள்ளார்.
எனவே இயேசுவோடு தொடர்ந்து ஐக்கிய கொள்ளும் போது, அவருக்குள் இருக்கும் அந்த சமாதானத்தை நாம் பெற்று கொள்ளலாம். அப்போது உலகில் உள்ள எந்த துக்கப்படுத்தும் வல்லமையை எளிதாக மேற்கொள்ள முடியும்.
இயேசுவின் சமாதானம் நமக்குள் இருக்கும் போது, துன்பத்தோடு, துக்கத்தோடு வருகிறவர்கள் நம்மிடம் பேசும் போது, பெரிய ஆறுதலும் சமாதானமும் பெறுவார்கள். இதன் மூலம் நாம் இந்த உலகில் சமாதானம் பண்ணுகிறவர்களாக திகழ்ந்து, வேத வசனம் கூறுவது போல பாக்கியவான்களாக மாற முடியும்.
மேலும் உங்களோடு பேசினால் பெரிய சமாதானம் கிடைக்கிறது என்று சமாதானம் அற்றவர்கள் நம்மிடம் கூறும் போது, நமக்குள் இருக்கும் சமாதான பிரபுவை (ஏசாயா:9.6) அவர்களுக்கு அறிமுகப்படுத்த அது ஒரு வாய்ப்பாக அமையும். எனவே இயேசுவோடு நெருங்கிய உறவை உண்டாக்கும் ஜெபத்தில் அதிக கவனத்தை செலுத்துவோம். தேவனுடைய சமாதானத்தை பெற்று, மற்றவர்களுக்கு சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவோம்.
இதன் மறுபுறம், நமது செயல்பாடுகளின் மூலம் மற்றவர்களுக்கு சமாதான கேடு ஏற்படுகிறது என்றால், நாம் பாக்கியம் அற்றவர்களாக மாறுவதோடு, தேவனுக்கு எதிரான பிசாசின் பிள்ளைகளாக மாறி விடுவோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நமது வார்த்தைகள், சிந்தைகள், கிரியைகள் ஆகியவை மூலம் மற்றவர்களுக்கு சமாதானக் கேடு உண்டாகிறதா? என்று அவ்வப்போது ஆராய்ந்து கொள்வது நல்லது.
அப்படி யாருக்காவது நாம் சமாதானக் கேடு உண்டாக்கி இருந்தால், உடனடியாக தேவ சமூகத்தில் நம்மையே தாழ்த்தி, குறிப்பிட்ட நபர்களிடம் விரைவில் மன்னிப்புக் கேட்பது மிக சிறந்த நடவடிக்கையாக இருக்கும். அப்போது தேவனுடைய புத்திரராக மாறுவோடு, தேவ சமாதானம் நம் இருதயத்தை ஆளுகை செய்யும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இந்த உலகில் சமாதானத்தை அளிக்கிறவர்களாக நீர் எங்களை வைத்திருக்க, அதை உணர்ந்து வாழ கிருபை தாரும். உம்மிடத்தில் இருந்து சமாதானத்தை பெற்று, மற்றவர்களுக்கு அளிக்கும் மக்களாக எங்களை மாற்றும். மற்றவர்களின் சமாதானத்தை கெடுக்கிற எங்கள் நடவடிக்கைகளை மன்னித்து, பரிசுத்தப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.