0 1 min 6 mths

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே, உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு:6.8

நாம் எவ்வளவோ காலமாக ஜெபிக்கும் காரியங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நம்மிடம் இன்று, தேவன் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார். இந்த வார்த்தைகளை இயேசு கூறுவதற்கு ஏதாவது பின்னணி இருக்கிறதா? என்றால், அநேக சம்பவங்களை வேதத்தில் காணலாம்.

இதற்கு எடுத்துக்காட்டாக, ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். விசுவாசத்தின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிராகமின் 100வது வயதில் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஈசாக்கை பெறுகிறார். ஆனால் அவன் வாலிப வயதை எட்டும் நேரத்தில், ஈசாக்கை பலியாக செலுத்துமாறு தேவன் கேட்கிறார்.

நம் வாழ்க்கையில் கூட இது போன்ற சில சோதனைகளை தேவன் அனுமதிப்பார். நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு, ஜெபித்து போராடி பெற்ற பொக்கிஷமாக வைத்துள்ள ஒரு காரியத்தை தேவன் கேட்பார் அல்லது அதை இழக்குமாறு செய்வார். ஆனால் அந்தச் சூழ்நிலையில் நாம் பதறிப் போகிறோமா? என்பது யோசிக்க வேண்டியுள்ளது.

ஈசாக்கை பலியாக கொடுப்பதில் வந்த எல்லா தடைகளையும் தகர்த்து முன்னேறிய ஆபிரகாமின் வார்த்தைகளில் விசுவாசம் குறையவே இல்லை. ஈசாக்கை பலியாக கொடுக்க, வெட்டி துண்டாக்க கத்தியை ஓங்கும் வரை, விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.

விசுவாச சோதனையில் ஆபிரகாம் ஜெயிக்கும் போது, அவரது வார்த்தைகளைக் கணம் பண்ண தேவன் பின்னணியில் கிரியை செய்வதை காண முடிகிறது. ஈசாக்கை பலி செலுத்த வேண்டாம் என்று கூறிய பிறகு, ஆபிரகாம் கண்களை ஏறெடுத்து பார்த்த போது, ஒரு ஆட்டுக்கடா புதரில் சிக்கிக் கொண்டிருந்ததை காண முடிந்தது என்று வாசிக்கிறோம்.

தேவன் ஆபிரகாமை தடுத்து நிறுத்திய பிறகு, ஆட்டுக்குட்டியை மலைக்கு கொண்டு வந்திருக்கமாட்டார். சிக்கியிருந்த ஆடு என்றால், அது ஏற்கனவே அங்கு வந்திருக்க வேண்டும். அப்படியென்றால், குறைந்தபட்சம் ஆபிரகாம் மலைக்கு ஏறிச்செல்லும் போதே, அது அங்கு இருந்திருக்க வேண்டும் அல்லது ஏறி வந்திருக்க வேண்டும். அப்படியென்றால், ஆபிரகாமின் கண்களில் அது படாமல் போனது எப்படி? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

நாம் ஒரு காரியத்தில் அதிக கவனம் செலுத்தும் போது, நம்மை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தவறுவது இயற்கை. அதேபோல, தேவனுடைய கட்டளையை கீழ்படிய ஆபிரகாம் கவனமாக செயல்பட்டதால், மலையின் மேல் சிக்கி கொண்டிருந்த ஆடு கூட ஆபிரகாமின் கண்களுக்கு தெரியவில்லை.

மேலும் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு ஆடு சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்திருக்கும். அந்த சத்தம் கூட ஆபிரகாமிற்கு கேட்கவில்லை. தேவனுடைய கட்டளையை கீழ்படிய நாம் விசுவாசத்தை மட்டுமின்றி, அதிக கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்போது தேவனும் நாம் பார்த்திராத மற்றும் கேட்டிராத அற்புதங்களை நமக்காக செய்வார்.

ஆபிரகாம் விசுவாசத்தோடு மலையில் பலிக் கொடுக்க ஏறிய போதே, ஈசாக்கிற்கு பதிலாக பலிக் கொடுக்க வேண்டிய ஆட்டுக்கடாவை தேவன் மலையில் ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் ஆபிரகாமின் விசுவாசம் முழுமை அடையும் வகையில், அது அவர் கண்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது என்றும் கூறலாம்.

இதேபோல நமது தேவைகளுக்காக நாம் போராடி ஜெபிக்கும் முன்பே, அதற்கான பதிலை அளிப்பதற்கு தேவன் தயாராகி விடுகிறார். ஆனால் அதை பெறுவதற்கு ஏற்ற விசுவாசத்தை நாம் முழுமைப்படுத்த வேண்டும். ஒரு காரியத்திற்காக சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் ஜெபித்துவிட்டேன்.

தேவ சித்தம் இருந்தால் கிடைக்கட்டும் என்று இருப்பது விசுவாசம் அல்ல. அந்த காரியத்தை பெறுவதற்கான விசுவாசத்தை நம் செயலில் காட்ட வேண்டும். அப்போது நாம் நினைத்திராத மற்றும் எதிர்பாராத அற்புதமான காரியங்களை தேவன் நம் வாழ்க்கையில் செய்கிறார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் எந்தக் காரியத்திற்காக ஜெபிக்கிறோமே, அதற்கான பதிலை நீர் ஏற்கனவே தயாராக வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். அதை பெற்று கொள்ள தேவையான விசுவாசத்தை வளர்த்து கொள்ள உதவி செய்யும். விசுவாசத்தை பேச்சில் மட்டும் கொண்டிராமல், செயலிலும் காட்ட கிருபை தாரும். அதற்கான தடைகளை தேவ ஞானத்தினால் மேற்கொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *