
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு:7.2
மற்றவர்களை விட நமது நிலை எப்போதும் ஒருபடி மேலே தான் இருக்க வேண்டும் என்பது தற்கால மனிதர்களின் பொதுவான எண்ணம். இந்த காரியத்தில் கிறிஸ்தவ சமூகமும் சளைத்து அல்ல. தாங்கள் செய்யும் கிறிஸ்தவ வாழ்க்கை, அனுபவம், ஊழியம் என்று எல்லாமே அருமையானவை என்று பலரும் சுயமாக புகழ்ந்து பேசுவதை நாம் கேட்க முடியும்.
இந்நிலையில் நம் செயல்பாடுகளை பெருமையாக கூறும் போது, மற்றவர்களை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தரம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக மற்றவர்களின் செயல்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து அறிந்து, அவர்களில் வரும் குற்றம், குறைகளை மட்டுமே எடுத்து காட்டுகிறோம்.
மேலும் நம்மில் உள்ள நல்ல காரியங்கள் மட்டுமே மேன்மையாக எடுத்து காட்டி, நமது குறைகளுக்கு தகுந்த முறையில் சாக்குப்போக்குகளையும் கண்டுபிடிக்கிறோம். ஆனால் இது தேவனுடைய பார்வையில் ஒரு தவறான நடவடிக்கை என நமது தியான வசனம் குறிப்பிடுகிறது.
ஏனெனில் நாம் மற்றவர்களை எப்படி தீர்க்கிறோமோ, அதேபோலவே தேவன் நம்மை தீர்ப்பதாக கூறுகிறது. அப்படியானால் மற்றவர்களை குற்றம் கூறும் போது, நமது குறைகளுக்கான தண்டனையை தேவன் நமக்கு அளிக்கிறார் என்று பொருள் கொள்ள முடியும்.
அதேபோல நமக்கு மட்டும் சிறந்ததை எடுத்து வைத்து கொண்டு, தரம் குறைந்ததை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, தேவனும் நமக்கு நல்ல காரியங்களை அளிக்க மறுக்கிறார் என்கிறது தியான வசனம்.
எனவே மற்றவர்களுக்கு நாம் நல்ல காரியங்களை அளிப்போம். மற்றவர்களின் நன்மையை கண்டு பொறாமைப்படுவதற்கு பதிலாக, அதற்காக மகிழ்ச்சி அடைவோம்.
அப்போது நமது செயல்பாடுகளை அந்தரங்கத்தில் பார்க்கிற நமது பரம பிதா, அதற்கான பலனை வெளியரங்கமாக அளிப்பார் (மத்தேயு:6.18). நாமாக நமது செயல்களை பெருமையாக கூறி கொள்ளும் நடவடிக்கையை கைவிடுவோம்.
மற்றவர்களின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை கண்டுபிடிப்பதை தவிர்த்து, அவர்களிடம் உள்ள நல்ல காரியங்களை எடுத்துக் காட்டுவோம். அப்போது நம்மை குறித்தும் மற்றவர்கள் நன்மையாக பேசுவார்கள். தேவனுடைய மனதிற்கும் அது ஏற்றதாக இருக்கும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். மற்றவர்களை எப்போதும் குறைக் கூறிக் கொண்டு, எங்கள் செயல்களை மேன்மைப்படுத்தி கொள்ளும் எங்கள் செயல்பாட்டை மன்னியும். மற்றவர்களில் உள்ள நல்ல காரியங்களை எடுத்துக் காட்டி, அவர்களை மேன்மையாக எண்ண உதவி செய்யும். எங்களின் செயல்பாட்டை பார்த்து பலன் அளிக்கிற தேவனே, உமது கரங்களில் எங்களையே ஒப்புக் கொடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.