
கேரள மாநிலம், மூணாறு பகுதியை சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…
பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் தேவனுடைய ஊழியத்தை செய்து வந்த ஒரு ஊழியரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. கேரளாவில் மலைப்பாங்கான பகுதியில் தேவனுடைய அழைப்பை ஏற்று தேவ ஊழியர் ஒருவர் ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
கர்த்தருக்காக ஊழியத்தில் பல பாடுகளை சகித்து வந்த அவர், திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் தனது வீட்டை ஒட்டி உள்ள நிலத்தில், சில காய்கறிகளை பயிரிட்டு வந்தார். அவற்றை அவ்வப்போது பராமரிக்க செல்வது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, காய்கறி தோட்டத்திற்குள் பணியில் ஈடுபட்ட போது, கொடும் விஷம் மிகுந்த இரத்த விரியன் பாம்பு அவரை தீண்டியது. இந்தியாவில் கேரளாவில் அதிகமாக காணப்படும் இந்த இரத்த விரியன் பாம்பு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அது கடித்து உயிர் பிழைப்பது அபூர்வம்.
ஏனெனில் அந்த பாம்பு கடித்த சில நிமிடங்களில் விஷம் தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள நரம்புகளில் பாய்ந்து சென்று, அங்குள்ள ரத்த நாளங்கள் அனைத்தையும் வெடிக்க செய்து, ஒரு சில நிமிடங்களில் உடலில் உள்ள வேர்வை துளைகள் வழியாக ரத்தம் வெளியேறி இறப்பை அளிக்கும் தன்மை கொண்டது.
காய்கறி தோட்டத்தில் தனியாக இருந்த தேவ ஊழியரை கடித்தவுடன், அவருக்கு உதவி செய்ய கூட அருகில் யாரும் இருக்கவில்லை. இருப்பினும் கர்த்தருக்குள் தன்னை பலப்படுத்தி கொண்ட அவர், அங்கேயே முழங்கால் படியிட்டு ஜெபித்தார். இந்த சந்தர்ப்பத்தில் தேவனால் மட்டுமே அவரை விடுவிக்க என்று அவர் உணர்ந்திருந்தார்.
அப்போது பரிசுத்தாவியின் பெரிய ஒரு வல்லமை அவரை நிரப்பியது. வேத
வசனங்களை கூறி அந்நிய பாஷையில் பேசிய அவருக்குள் ஒரு புது பலன் உண்டானது. அவரை கடித்த பாம்பு, அப்பகுதியிலேயே இருக்க, அதனிடம் ஓடி சென்ற தேவ ஊழியர், அதை காலால் சக்தியுடன் பல முறை மிதித்தார். இதில் பாம்பு அந்த இடத்திலேயே செத்து போனது.
தேவ ஊழியர் திரும்பவும் வந்து முழுங்காலில் நின்று, ஆவியில் நிரம்பி ஜெபித்தார். ஒரு சில நிமிடங்களில் அவரது உடலில் இருந்து வேர்வைத் துளிகள் வந்தது. அது இரத்த துளிகளாக இருக்குமோ என்ற பார்த்த அவருக்கு, ஒரே ஆச்சரியம். அந்த பாம்பின் விஷம் முழுமையாக வேர்வை வடிவில் அவரது உடலில் இருந்து வெளியேறி இருந்தது.
கொடும் விஷம் கொண்ட பாம்பு கடித்து ஒரு சில நிமிடங்களில் மரித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த தேவ ஊழியர், அதன்பிறகு மேலும் 25 ஆண்டுகள் ஜீவன் தந்த தேவனுக்காக ஊழியம் செய்து தனது விசுவாச ஓட்டத்தை ஓடி முடித்தார்.
இந்த சாட்சியை படிக்கும் அன்பானவர்களே, நம் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நம்மை காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் பயப்படாதீர்கள், சோர்ந்து போகாதீர்கள். தேவனை விசுவாசித்து கர்த்தருக்குள் பலப்பட்டு பரிசுத்தாவியில் நிரம்புங்கள். அப்போது நீங்கள் இருப்பது ஒரு மரணகரமான சந்தர்ப்பமாக இருந்தாலும், அதில் இருந்து உங்களை தேவன் விடுவிப்பார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.