0 1 min 2 mths

முதல் தந்திரம்:

யாத்திராகமம். 8:25வது வசனத்தில் பார்வோனின் முதல் தந்திரத்தை காண முடிகிறது. லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை ஒன்றாக திரட்டி, பல மைல் தூரம் அழைத்துச் சென்று ஆராதனை செய்வது கடினம்.

அதனால் எகிப்திலேயே ஆராதனை செய்யுங்கள் என்பது பார்வோனின் முதல் தந்திர ஆலோசனை. இதன்மூலம் இஸ்ரவேல் மக்களின் பரிசுத்த ஆராதனையை கெடுக்க, பார்வோனுக்குள் இருக்கும் பிசாசு திட்டமிடுகிறான்.

ஏற்கனவே எகிப்தில் வாழ்ந்து வந்த இஸ்ரவேல் மக்கள், எகிப்து தேவர்களை குறித்து நன்கு அறிந்திருப்பார்கள். இந்நிலையில் எகிப்திலேயே பரிசுத்த தேவனை ஆராதிக்க தொடங்கினால், எகிப்திய தலைவர்களும், மக்களும் வந்து கலந்து கொள்ளுவார்கள்.

இதனால் உண்மையான ஆராதனை முறைகள் மாறி, பரிசுத்த தேவன் விரும்பாத தேவையற்ற ஆராதனை முறைகள் அரங்கேற வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஆசீர்வாதத்திற்கு பதிலாக, தேவனுடைய கோபத்தை இஸ்ரவேல் மக்கள் பெற்று கொள்ள நேரிடும்.

மேலும் எகிப்திலேயே ஆராதனை செய்து பழகிவிட்டால், ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு போக இஸ்ரவேல் மக்களுக்கு விருப்பம் இல்லாமல் போய்விடும். இதனால் இஸ்ரவேல் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஆசீர்வாதமான கானான் தேசம் கிடைக்காமல் எகிப்தில் எப்போதும் அடிமைகளாகவே இருக்க பழகி விடுவார்கள்.

இன்றும் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தலையிடும் பிசாசு, “நல்ல ஆலோசனைகள்” என்ற பெயரில் மேற்கண்டது போன்ற பல தந்திரமான ஆலோசனைகளை தந்து கொண்டிருக்கிறான்.

எடுத்துக்காட்டாக, சபையில் நடக்கும் ஆராதனைக்கு போக வேண்டுமா? வீட்டில் இருந்து ஜெபித்தால் கர்த்தர் கேட்கமாட்டாரா? தினமும் ஜெபிக்க வேண்டுமா? நேரம் கிடைக்கும் போது ஜெபித்தால் போதும் போன்ற யோசனைகளை நம் காதுகளில் பிசாசு கூறுவான்.

இவை நல்ல ஆலோசனைகளை போல தெரியும். இவற்றை பின்பற்றினால், கொஞ்ச கொஞ்சமாக நாம் தேவனை விட்டு தூரமாக செல்ல வழிவகுக்கும். ஏனெனில் சபை கூட்டங்களின் மூலம், பல ஆவிக்குரிய சத்தியங்களை நாம் கேட்க முடிகிறது.

பலர் ஒன்று சேர்ந்து ஒருமனத்துடன் ஜெபிக்கும் போது அங்கே தேவ பிரசன்னம் இறங்கி வருகிறது. அதேபோல சபையில் பலரின் ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்து அறிந்து நமது உள்ளான மனிதன் பெலப்படவும், எச்சரிக்கை அடையவும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த அனுபவங்களை வீட்டில் இருந்து கொண்டு தனித்து ஜெபிக்கும் போது பெற முடியாது.

கிறிஸ்துவ வாழ்க்கையில் தனி ஜெபம் முக்கியமான ஒன்றுதான். அதற்காக சபை கூட்டங்களை விட்டுவிட்டால், நமது ஆவிக்குரிய வாழ்க்கை முழுமை அடையாமல் போகும். இதனால் “சபை கூடி வருதலைச் சிலர் விட்டு விடுகிறது போல, நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லக் கடவோம்….” என்று எபிரேயர்.10:25ல் எழுதப்பட்டுள்ள வசனத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பார்வோனின் தந்திரத்தை பகுத்தறிந்து கொண்ட மோசே, அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் பரிசுத்த தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதை பார்வோனுக்கு தெளிவுப்படுத்தினார் மோசே. இதேபோல நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிராக பலரும் “நல்லது போல தோன்றும்” ஆலோசனைகளை பலரும் கூறுவார்கள்.

அவர்கள் நாம் ஆராதிக்க செல்லும் சபை விசுவாசிகளாக கூட இருக்கலாம். அவர்களுக்குள் இருந்து பேசும் பிசாசின் ஆலோசனையை பகுத்தறிந்து, அதை ஜெயிக்க வேண்டும். மேலும் தேவனை எப்படி முழு மனத்தோடு ஆராதிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுக்கவும் மறக்க கூடாது.

பரிசுத்த தேவனை ஆராதிப்பது பற்றி மோசே கூறும் போது, 3 நாட்கள் வனாந்திரத்தில் பயணம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இந்த 3 நாட்கள் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு வைக்கப்பட்டிருக்கிற 1. இரட்சிக்கப்படுதல், 2.ஞானஸ்நானம் எடுத்தல், 3.பரிசுத்தாவியை பெறுதல் என்ற மூன்று படிகளை காட்டுகிறது.
தேவனை ஆராதிக்க வரும் நாம் இந்த மூன்று படிகளை கடந்து வந்திருக்க வேண்டும்.

நமது பாவத்தை குறித்து அறிந்து அதை அறிக்கையிடும் போது இரட்சிக்கப்படுகிறோம். பாவத்தை விட்டு விலகி புதிய மனிதனாக மாற நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம். புதிய மனிதனாக மாற்றப்பட்டு, ஆவியில் ஒவ்வொரு நாளும் வளர ஆவியானவரின் ஆலோசனையை பெற, பரிசுத்தாவின் அபிஷேகத்தை பெறுகிறோம்.

எனவே இந்த மூன்று படிகளும் நம் வாழ்க்கையில் பிசாசின் வல்லமைகளில் இருந்து விடுபட மிக முக்கியமானவை ஆகும். அதன்பிறகு பாவத்தில் இருந்தும், பாவ பழக்க வழக்கத்திலிருந்தும் விலகி வாழ்கிறோம். இதுவே கிறிஸ்துவுக்குள் வாழும் ஜீவியம் எனப்படுகிறது.

1கொரிந்தியர்.6:16ல் “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?…” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே 3 படிகளை கடந்து தேவனுடைய ஆலயமாக உருவாகி வரும் நாம், தேவனுக்கு விரோதமான காரியங்களை நம்மை விட்டு அகற்றி கொண்டே வர வேண்டும்.

அதேபோல தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்து வரும் நபர்களின் ஆலோசனைகளில் இருந்து விலகி, நம்மை பரிசுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். அப்படி விலகாமல் அவர்களின் முறைகளையும், செயல்பாடுகளையும் கேட்டறிந்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக நாமும் அவர்களின் பாவ பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு, தேவனை விட்டு விலக வாய்ப்புள்ளது.

எனவே தேவனை எப்படியும் ஆராதிக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்து, பரிசுத்த வேதாகமம் நமக்கு தந்துள்ள முறைகளின்படி ஆராதிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு பரிசுத்த வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் எந்தொரு தவறான ஆலோசனை, யாரிடம் இருந்து வந்தாலும், அதை மோசேயை போல கண்டறிந்து, வெற்றிக்கரமான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை செய்வோம்.

(2வது தந்திரம் – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *