0 1 min 2 mths

2வது தந்திரம்

யாத்திராகமம்.8:28ல் பார்வோனின் இரண்டாவது தந்திரமான ஆலோசனையை காண்கிறோம். எகிப்தில் இருந்து நீங்கள் தூரமாக செல்லாமல் பக்கத்திலேயே ஆராதனை செய்யுங்கள் என்று பார்வோன் கூறுகிறார்.

பாவத்தில் இருந்து மீட்கப்பட்ட நாம் பரிசுத்த தேவனின் சாயலாக மாற வேண்டும் என்பதே தேவ சித்தம். ஆனால் அதை எப்படியாவது கெடுக்க பிசாசு போராடுகிறான். ஜெபம் செய்தல், வேதம் வாசித்தல், வசனங்களை தியானத்தல், சபைக் கூட்டங்களுக்கு செல்லுதல் என்று தினமும் நாம் கர்த்தரோடு நெருங்கி வாழும் போது, பரிசுத்தத்தில் வளர்ந்து வருகிறோம்.

அப்போது பாவத்தின் வல்லமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மில் இருந்து விலகுகிறது. இதை பிசாசு விரும்புவதில்லை. இதனால் அவன் நம்மிடம் தந்திரமான ஆலோசனையை கூறுகிறான்.

வசனம் கேள், ஜெபம் பண்ணு எல்லாம் சரிதான். ஆனால் பைபிளில் இருப்பது போலவே வாழும் முயற்சியில் ஈடுபடுவது கஷ்டம். இந்த காலத்தில் வேத வசனம் கூறுவது போல வாழ முடியுமா? ஏதோ நம்மால் முடிந்ததை மட்டும் செய்ய வேண்டும் என்று பிசாசு பலரின் மூலம் நம்மிடம் பேசுவான்.

ஆனால் இதை பிசாசின் ஆலோசனை என்று அறியாமல், உலகத்தோடு ஒத்த வேஷம் தரித்து கொண்டு, தேவன் அருளிய விலையேறப்பட்ட இரட்சிப்பை இழந்து விடுகிறோம். தேவன் அளித்த இரட்சிப்பை குறித்த வைராக்கியம் நமக்குள் குறைந்து விடுவதால், ஆவிக்குரிய காரியங்களில் சோம்பேறிகளாக மாறி விடுகிறோம்.

இதனால் கடமைக்காக ஆலயத்திற்கு சென்று வருவது, ஏதோ கிறிஸ்துவர் என்பதற்காக ஜெபிப்பது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதற்காக தேவன் நம்மை இரட்சிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரட்சிக்கப்பட்ட பிறகு, நமக்கு அனுதினமும் பாவத்தோடு போராட்டம் இருக்கும். இதை தேவ பலத்தை பயன்படுத்தி நாம் ஜெயிக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் தோல்வியை தழுவும் போது, உன்னால் இந்த பாவத்தை ஜெயிக்க முடியாது என்ற வார்த்தையை பிசாசு நம் காதுகளில் ஓதுவான்.

ஆனால் நீதிமொழிகள்.24.16ல் “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்…” என்று காண்கிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு தினத்தியானத்தில் நாம் சிந்தித்து இருந்தோம்.

இதனால் ஒரு முறை பாவத்தை ஜெயிப்பதில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்த முறை அதை ஜெயிக்க தேவனுக்குள் இன்னும் அதிகமாக பலப்பட வேண்டும். இனி நம்மால் முடியாது என்று ஒதுங்க கூடாது.

தேவ சந்நிதியில் ஜெபித்து, நம் ஆவிக்குரிய தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டு, அடுத்த முறை அதில் ஜெயிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவ வாழ்க்கையில் தோல்விகளை சந்திப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் அந்த தோல்வியை காரணமாக பயன்படுத்தி, தேவனிடம் இருந்து விலக்க பிசாசு முயற்சி செய்வான் என்பதை நாம் மறக்க கூடாது.

தூரமாக செல்ல வேண்டாம் என்று கூறும் பார்வோனின் யோசனையில், இஸ்ரவேல் மக்கள் எப்போதும் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக பார்வோன் குறிப்பிடுகிறான். எப்போது வேண்டுமானாலும் அவர்களை திரும்ப அழைக்கலாம் என்ற திட்டம்.

பிசாசு நேரடியாக நம்மிடம் வந்து பேசுவதில்லை. நமக்கு நெருங்கிய அல்லது அன்பான மக்களின் மூலமாகவே பேசுகிறான். இதனால் அவர்களின் ஆலோசனையை நம்மால் மறுக்கவும் முடியாமல் போகலாம்.

இன்றும் பிசாசின் திட்டம் நமக்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது. சர்ச்சுக்கு போக வேண்டும் அவ்வளவு தானே, போய் வா. ஆனால் உனக்கு இருக்கிற பொறுப்புகளையும், வேலைகளையும் மறக்காதே என்று நம்மை சுற்றிலும் உள்ள இரட்சிக்கப்படாத பலரிடம் இருந்தும் கேட்க முடிகிறது.

இதனால் நாம் ஆராதனைக்கோ ஜெபிக்கவோ சென்றாலும், முழு மனதோடு தேவனை ஆராதிக்க முடியாது. நம் எண்ணங்களில் அவ்வப்போது, அவர்கள் கூறிய காரியங்கள் வந்து போக, பெயரளவில் தேவ சமூகத்தில் இருக்கும் நிலை உருவாகும்.

எனவே ஆவிக்குரிய விஷயங்களில் பின்னடைவை ஏற்படுத்தும் ஆலோசனை யாரிடம் இருந்து வந்தாலும், அதை ஆராய்ந்து பார்த்து செயல்படுவது முக்கியம். அதேபோல, தேவ சமூகத்தில் வரும் போது எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை நம் மனதில் ஏற்றி கொள்ள கூடாது.

ஏனெனில் தெய்வீகமான காரியங்களில் வைராக்கியம் காட்டி, கேட்கிற வேத வசனங்களுக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்கும் மனிதனை கண்டால் பிசாசு நிச்சயம் பயப்படும். அதே நேரத்தில், பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களை கொண்டு, தேவனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

எனவே வேத வசனங்களுக்கு கீழ்படிந்து கிறிஸ்துவின் அன்பின் ஆழத்திற்கு செல்ல விடாமல் தடுக்கிற மேற்கூறியது போன்ற பிசாசின் தந்திரமான ஆலோசனைகளைப் பகுத்தறிந்து ஜெயம் எடுப்போம்.

(மூன்றாவது தந்திரம் – தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *