மல்கியா.1:2

நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு நீங்கள் எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்;” மல்கியா.1:2

உலகில் அன்பிற்காக ஏங்காத எந்த மனிதனும் இல்லை. அன்பு கிடைக்காத காரணத்தினால் எவ்வளவோ பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் இந்த உலகில் உள்ளவர்கள் எவ்வளவுதான் அன்பு காட்டினாலும், அதற்கு ஒரு எல்லை உண்டு. அதிகபட்சம் அவர்களின் மரணம் வரை நம் மீது அன்பு காட்ட முடியும். அதன்பிறகு அவர்கள் நம்மை விட்டு பிரிந்துதான் ஆக வேண்டும். ஆனால் தேவனுடைய அன்பிற்கு அளவும் இல்லை, பிரிவும் இல்லை.நாம் இந்த உலகில் பிறப்பதற்கு முன்பே, நமக்காக இயேசு தனது இரத்தம் சிந்தி ஜீவனை அளித்து சென்றார். நாம் நல்ல வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக, அவரே சிறந்த மாதிரியாக வாழ்ந்து காட்டினார். இன்னும் எவ்வளவோ காரியங்களை நம் அன்றாட வாழ்க்கையில் செய்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியை பார்க்க சென்ற போது, அவருக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் பொறுத்தப்பட்டு படுகையில் படுத்திருந்தார். அவரை சுற்றிலும் அநேக மிஷன்கள் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை சுட்டி காட்டிக் கொண்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட ஆக்ஸிஜனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அப்போது தேவன் ஒரு காரியத்தை எனக்கு உணர்த்தினார்.

உலகில் இவ்வளவு கோடி மக்கள் வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜனையும் தேவன் எந்த பணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்திருக்கிறாரே? அவர்களுக்கு உடல்நலம் பாதிக்காத வகையில் காலநிலையை சீராக வைத்துள்ளார். ஒரு மனிதனை பார்த்துக் கொள்ள இன்னொரு மனிதனுக்கு இவ்வளவு பணம் தேவையென்றால், தேவன் நம்மிடம் கணக்கு கேட்டால் நாம் என்ன செய்வோம்? என்று யோசித்தேன்.

தேவன் நம் மீது வைத்த அன்பினால், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியிலும் எவ்வளவோ நன்மைகளை பெற்று வருகிறோம். அன்பான சகோதர, சகோதரியே இன்று நீங்கள் உலகில் உயிரோடு வாழ்கின்றீர்கள் என்றால் அதற்கு முழுக் காரணம், தேவன் உங்கள் மீது வைத்துள்ள அன்பு தான்.

சிலர் தேவன் தந்த நன்மைகளை அனுபவித்துக் கொண்டே, அவர் எனக்கு எதுவும் செய்யவில்லையே? என்று கூறக் கேட்டிருக்கிறேன். நம் வாழ்க்கையில் சில துன்பங்களும், கஷ்டங்களும் வருவது உண்மைதான். அதற்காக தேவன் என்னை மறந்துவிட்டார். அவருக்கு என் மீது அன்பே இல்லை என்று நாம் கூறக் கூடாது.

தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைக்கு தகுந்தது போல நாம் அவர் மீது அன்பு செலுத்துகிறோமா? இயேசு தனது சீஷன் பேதுருவிடம் கேட்டது போல, இன்று நம்மிடம் கேட்டால், நம்மால், ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்று கூற முடியுமா?

இந்த உலகில் உள்ளவர்கள் வாயால் உன்னை நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு, இருதயத்தில் பகைப்பார்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நம்மை நேசிக்கும் இயேசு, இன்று நாம் அவர் மீது அன்பாக இருக்க விரும்புகிறார். இன்று உங்கள் முழு இருதயத்தையும் இயேசுவிற்கு கொடுப்பீர்களா? இந்த ஜெபத்தை செய்து இயேசுவிற்கு உங்கள் ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

அன்பாக இயேசுவே, நீர் எங்கள் மீது வைத்த அன்பு பெரியது. எங்கள் வாழ்க்கையில் தேவையான நன்மைகளை அனுதினமும் செய்து வருகிறீர். ஆனால் இதற்கெல்லாம் காரணமான உமது அன்பை நாங்கள் மறந்த சந்தர்ப்பங்கள் உண்டு. இயேசுவே, எங்களை மன்னியும். மாறி போகும் மனிதர்களின் அன்பை நாடி சென்ற நாங்கள், இனி உம்மை நேசிக்கிறோம். உமக்கு எங்களின் முழு இருதயத்தையும் அளிக்க விரும்புகிறோம். எங்களை ஏற்றுக் கொண்டு வழி நடத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமென்.

Spread the Gospel