0 1 min 3 weeks

நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. மல்கியா: 3.6

தேவன் மாறாதவர் என்பதோடு, அவரால் படைக்கப்பட்ட எல்லா காரியங்களும் மாறாதவைகளாக இருக்கின்றன. பூமியில் மனிதனை படைக்கும் முன்பே, அவனுக்கு தேவையான சகலத்தையும் தேவன் படைத்து வைத்திருந்தார். மேலும் எல்லா காரியங்களுக்கும், குறிப்பிட்ட கால அளவை தேவன் நியமித்து வைத்திருக்கிறார்.

எடுத்துக்காட்டாக, ஒரு தாயின் கருவறையில் உருவாகும் கரு, குழந்தையாக வளர்ச்சி பெற ஏறக்குறைய 10 மாதங்கள் தேவை என்பதில், இன்று வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று எவ்வளவோ அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும், ஒரு கருவை இன்று உருவாக்கி, நாளை அதை குழந்தையாக வெளியே எடுக்க முடியவில்லை.

ஆனால் ஆதிகாலத்தில் மனிதன் உடுத்தியிருந்த உடையில் இருந்து அவனுடைய எந்த காரியங்களும், இன்றைய மனிதனோடு ஒப்பிட முடியாதவைகளாக உள்ளன. இதில் இருந்து காலத்திற்கு ஏற்ப, மனிதன் எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவன் என்பதை அறியலாம். ஆனால் மனிதனின் மாற்றங்களுக்கு ஏற்ப, தேவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மாற்றங்களுக்கு உட்பட்ட நம்மை, யாக்கோபின் புத்திரர் என்று தேவன் குறிப்பிடுகிறார். அதில் இருந்து யாக்கோபை போன்ற ஏமாற்றும் பழக்கமும் நம்மிடம் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். யோசித்து பாருங்கள், தேவனுக்கு முன்பாக நாம் எவ்வளவோ தீர்மானங்கள் எடுக்கிறோம். ஆனால் அதில் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறோம்?

நாம் எடுக்கும் தீர்மானங்களை குறித்து ஏற்கனவே ஒரு செய்தியை, நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால், அதை குறித்து மீண்டும் விளக்க விரும்பவில்லை. தேவ சமூகத்தில் நாம் உண்மையில்லாமல் இருந்த பாவங்களுக்கு ஏற்ப, தேவன் நம்மை தண்டிக்கவில்லை. அப்படி தண்டித்திருந்தால், நாம் இன்று உயிரோடு இருந்திருக்க முடியாது என்பது நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆதியில் இருந்தே நம் தேவன் இரக்கமுள்ளவராக இருப்பதால், நாம் நிர்மூலமாகவில்லை.

எனவே நாம் உண்மையில்லாமல் ஏமாற்றுகிறவர்களாக இருந்தும், அவர் மாறாதவராக, இரக்கமுள்ளவராக, நம்மை அழியாமல் பாதுகாக்கிறார் என்பதற்காக, நாம் இப்படியே பாவத்தில் தொடரலாம் என்று தைரியம் கொள்ளக் கூடாது. நமது குறைகளை நினைக்காமல் விட்ட தேவனிடம், அவற்றை அறிக்கையிடுவோம். மனந்திரும்பி, தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்களை செய்வோம்.

அப்போது அவர் விரும்பும் இஸ்ரவேலாக, நாம் மாற முடியும். நாம் ஏமாற்றுகிறவர்கள் என்று அறிந்தும் நம்மை நேசித்த தேவனுடைய சமூகத்தில் நம்மையே தாழ்த்துவோம். அப்போது நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக மாறுவதோடு, தேவனிடம் இருந்து பரிபூரண ஆசீர்வாதங்களையும் பெற்று கொள்ள முடியும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, மனிதர்களாகிய நாங்கள் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் மாறுகிறவர்களாகவும், ஏமாற்றுகிறார்களாகவும் இருந்திருக்கிறோம். ஆனால் நீர் மாறாத தேவனாக, எங்களை அழியாமல் பாதுகாத்த கிருபைக்காக ஸ்தோத்திரம். எங்கள் குற்றம், குறைகளையெல்லாம் மன்னியும். எங்களை நீர் விரும்பும் இஸ்ரவேலாக மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *