
…எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக் கடவன்… மாற்கு: 9.35
இயேசு உலகில் வாழ்ந்திருந்த காலத்திலேயே அவரது சீஷர்கள் இடையே யார் சிறந்தவர்கள் அல்லது முதன்மையானவன் என்ற பேச்சு எழுந்துள்ளது. இன்றும் இந்த பேச்சு கிறிஸ்தவ மக்கள் இடையே உள்ளது என்பதை மறுக்க முடியாது.
எங்கள் சபை தான் சிறந்த சபை, நான் செய்யும் ஊழியத்தை யாராலும் செய்ய முடியாது. நான் பட்ட கஷ்டங்கள் இதுவரை யாருக்கும் வந்தது இல்லை என்று பேசும் இரட்சிக்கப்பட்ட மக்கள் இன்று அநேகர்.
ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, தாங்களே சிறந்தவர்கள் என்று காட்டி கொள்ளும் மக்களுக்கு இயேசு கூறும் ஒரே பதில் எல்லாருக்கும் ஊழியக்காரனாக இருக்க வேண்டும் என்பதே. ஏனெனில் ஒரு சரியான ஊழியனுக்கு மட்டுமே தனக்கு கீழே ஒரு சிறந்த ஊழியனை உருவாக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் புதிதாக ஒரு காய்கறி கடை ஆரம்பிக்கிறார் என்று வைத்து கொள்வோம். ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்தாலும், சில ஆண்டுகளில் அது பெரிய அளவில் வளர வேண்டுமானால், அவர் அந்த வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்று கொள்ள வேண்டும்.
அதாவது யாரிடம், எங்கே, எவ்வளவு விலைக்கு வாங்கி, வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசி, லாபகரமான விலைக்கு எப்படி விற்பனை செய்வது என்பதை அவர் அனுபவத்தின் மூலமே கற்று கொள்ள முடியும்.
ஒரு கட்டத்தில் அவர் வியாபாரம் பெரிய அளவில் வளர்த்த பிறகு, மேற்கூறியதை பற்றி எதுவும் தெரியாத தனது மகனிடம் கடையை திடீரென ஒப்படைத்தால், அவனால் அதை நடத்த முடியாது. மேலும் கடும் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.
இதேபோல தேவனிடமும் மனிதர்களிடமும் தாழ்மையாக நடந்து கொண்டு, தேவ கிருபையும் மனிதர்களிடம் தயவையும் பெற்று ஊழியம் செய்யும் ஒருவரால் மட்டுமே, தன்னிடம் வரும் ஒருவருக்கு அதை விளக்கி கூற முடியும். மேலும் அவரிடம் கற்று கொள்ளும் போது ஏற்படும் எல்லா கஷ்டங்களையும் பாடுகளையும் சந்தோஷமாக ஏற்று கொள்வார்கள்.
அப்படிப்பட்ட ஊழியக்காரனுக்கு மட்டுமே, அனுபவத்தில் குருவாக மாற முடியும். ஆனால் இன்று முன்னோர்கள் கஷ்டப்பட்டு ஆரம்பித்த பல ஊழியங்களில், எந்த கஷ்டமும் இல்லாமல் வசதியும் வாய்ப்பும் கிடைப்பதால், பலருக்கும் பெருமையான பேச்சுகள் மட்டுமே பேச தெரிகிறது.
இதனால் தங்களையும், தாங்கள் சார்ந்துள்ள சபைகளையும் மேன்மையாகவும் உயர்த்தியும் பேசி கொள்கிறார்கள். இதே நேரத்தில் சபைக்கு தலையாக உள்ள இயேசுவை மறந்து விடுகிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம், மற்ற சபைகளுடன் ஒப்பிட்டு பேசும் பழக்கம் தான். வேதத்தின்படி, இந்த உலகில் எந்த சபையும், தலையான இயேசுவுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை மட்டுமே ஒப்பிட்டு சிந்திக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
உலகில் வாழ்ந்த போது, இயேசு தன்னை எங்கேயும் மேன்மைப்படுத்தி பேசவில்லை. எல்லாவற்றிலும் பிதாவை மேன்மைப்படுத்தினார். தன் சீஷர்களின் கால்களை கழுவி, அவர்களை கணப்படுத்தினார். அவரது சீஷர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் இயேசு காட்டிய தாழ்மையும் உண்மையான ஊழியமும் மறைந்து, நாங்களே சிறந்தவர்கள், முதன்மையானவர்கள், மேன்மையானவர்கள் என்று தாங்களாகவே கூறி கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள்.
இதனால் சரியான இயேசுவின் சீஷனாக மாறவும் முடிவதில்லை, அவர்களால் சரியான சீஷர்களை உருவாக்கவும் தெரியவதில்லை. பெயரளவில் முன்னோர்களின் பெயர்களை கூறி கொண்டு காலத்தை தள்ள வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது.
எனவே இயேசுவின் உண்மையான சீஷர்களாக நாம் மாற முடிவு செய்வோம். நம்மை சுற்றிலும் உள்ள மனிதர்களை மேன்மையானவர்களாக நினைத்து, அவர்களுக்கு நன்மையும் மரியாதையும் செலுத்துவோம்.
எங்க சபை, எங்க சொந்தக்காரர் என்ற எண்ணத்தை கைவிட்டு, நன்மை செய்வதில் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் என்றில்லாமல், எல்லாரையும் நேசிக்கும் இயேசுவின் குணத்தை வளர்த்து கொள்வோம். அப்போது தேவனால் நாம் உயர்த்தப்படுவோம், எல்லாருக்கும் முன்பாக முதன்மையான இடத்தில் உட்கார வைக்கப்படுவோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே, உண்மையான சீஷர்களின் பண்புகளைக் குறித்து எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். நீர் எல்லாருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தது போல, நாங்களும் நன்மை செய்து உமது நாமத்தை எல்லா இடத்திலும் உயர்த்த கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.