0 1 min 2 weeks

கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். யாத்திராகமம்: 4.2

எகிப்தில் அடிமைத்தனத்தில் சிக்கி தவித்த இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும் மிகப்பெரிய பணிக்கு தகுந்த பொறுப்பாளராக மோசேயை, தேவன் தேர்ந்தெடுக்கிறார். இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள தயங்கும் மோசேயை, தேவன் இணங்க செய்ய சில காரியங்களை கற்றுக் கொடுக்கிறார்.

அதன்படி மோசேயின் கையில் இருக்கும் கோலை கீழே போடுமாறு, தேவன் கட்டளையிடுகிறார். அதை எந்த தயக்கமும் இல்லாமல் கீழே போடும் மோசேக்கு, அது பாம்பாக மாறும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதில் பயந்து ஓடும் மோசேயை திரும்ப அழைக்கும் தேவன், அந்த பாம்பின் வாலை பிடித்து எடுக்குமாறு கூறுகிறார்.

இந்த செயலை மனித மூளையில் யோசித்தால், ஒரு மூட்டாள்தனமான காரியமாக தெரியும். ஏனெனில் விஷம் கொண்ட பாம்பை எப்போதும் தலையை பிடித்து தான் தூக்க வேண்டும். பாம்பை வாலை பிடித்து தூக்கினால், அது தனது தலையை திரும்பிக் கொண்டு வந்து எடுப்பவரை கொத்திவிடும் என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனால் தனது உயிருக்கு சேதம் விளைவிக்க கூடிய காரியம் என்று தெரிந்தாலும், தேவன் மீதான விசுவாசத்தோடு, அந்த கட்டளைக்கு மோசே கீழ்படிந்து பாம்பை கையில் எடுக்கிறார். இதனால் தன்னை பயப்படுத்திய பாம்பு திரும்ப பழையபடி கோலாக மாறுகிறது. அந்த கோல் பிற்காலத்தில் இஸ்ரவேலை வழிநடத்துவதற்கு மோசேக்கு பெரும் உதவியாக இருந்தது என்று வேதத்தில் காண முடிகிறது.

இதில் இருந்து தேவனுடைய திட்டத்திற்கும், மனிதனுடைய கணக்கீடுகளுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு காணப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இன்று தேவனுக்காக பெரிய ஊழியங்களை செய்ய வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கிறது. அதற்காக ஜெபிக்க கூட செய்கிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படையாக இருக்கும் கீழ்படிதல் அவர்களில் காணப்படுவது இல்லை.

அதேபோல மோசேயை கொண்டு பெரிய காரியங்களை செய்த தேவன், இன்று பலரையும் கையில் எடுத்து பயன்படுத்த விரும்புகிறார். அதற்காக தேவன் சில காரியங்களை நாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் தேவன் நமக்கு வெளிப்படுத்தும் அல்லது செய்யுமாறு கூறும் காரியங்களை, நமது மூளையை பயன்படுத்தி யோசித்தால் மூட்டாள்தனமாக தெரியலாம்.

அதே நேரத்தில் அதை தேவ சித்தம் என்று முழுமையாக நம்பி ஒப்புக் கொடுத்து கீழ்படிந்தால், நாம் எதிர்பார்ப்பதை விட மிகப்பெரிய பணிகளை கர்த்தருக்காக செய்யக் கூடிய மனிதனாக நாம் மாற முடியும்.

இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாத வரை, தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க முடியாது. தேவன் நம்மிடம் செய்யுமாறு கூறும் காரியங்கள் அற்பமாகவோ அல்லது பயப்படுத்துவதாகவோ தெரிந்தாலும், கீழ்படிந்து கிரியை செய்வோம். அப்போது தேவனோடு முகமுகமாக பேசிய மோசேயை போல, நம்மையும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமான ஒரு பாத்திரமாக மாற முடியும்.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் நல்ல தேவனே, நீர் பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். தேவரீர் எங்களை கொண்டு செய்ய விரும்பும் காரியங்களை முழுமையாக செய்து முடிக்கும் வகையில், உமது வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்படிய உதவி செய்யும். அதற்கு தடையாக இருக்கும் குறைகளை எங்களுக்கு வெளிப்படுத்தி தாரும். தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில், எழும்பி பிரகாசிக்கும் மக்களாக, எங்களை மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *