0 1 min 4 mths

அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்து போகாது இருக்கிறது என்ன, நான் கிட்டப் போய் இந்த அற்புத காட்சியைப் பார்ப்பேன் என்றான். யாத்திராகமம்: 3.3

ஒவ்வொரு மனிதனையும் ஒரு முக்கிய நோக்கத்தை முன்வைத்தே தேவன் அழைக்கிறார். அந்த நோக்கத்தை உணர்த்த தேவன் அற்புதமான செயல்திட்டத்தை கையாளுகிறார். அந்த வகையில், எகிப்தில் அடிமைகளாக கஷ்டப்பட்டு வந்த இஸ்ரவேல் மக்களை மீட்கும்படி, மோசேயை அனுப்ப தேவன் கையாண்ட ஒரு அற்புதத்தை குறித்தே தியான வசனத்தில் காண்கிறோம்.

ஒரு எகிப்தினை கொலை செய்த குற்றத்திற்காக எகிப்தை விட்டு ஓடிய மோசே, மாமனின் ஆடுகளை மேய்த்து கொண்டு சமாதானமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் மோசேயை குறித்த தேவனின் சித்தம் அதுவாக இருக்கவில்லை.

6 லட்சம் இஸ்ரவேலரை (ஆண்கள் மட்டும்), எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க தகுந்த ஒரு தலைவனாக மோசே விளங்க வேண்டும் என்பது தான் தேவ சித்தம்.

இவ்வளவு பெரிய திட்டத்தை சாதாரணமாக மோசேயிடம் கூறினால், நிச்சயம் அதை அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். எனவே அதற்கு ஏற்ற ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தின் மூலம் மோசேயை தேவன் சந்திக்கிறார்.

நம்மை கூட தேவன் சாதாரணமாக இரட்சிப்பிற்குள் கொண்டு வரவில்லை. அதற்கு பின்னால் தேவனுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. இந்த தேவ நோக்கத்தை நமக்கு உணர்த்தும்படி, நம் வாழ்க்கையில் பல அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார்.

ஆனால் முட்செடியில் எரிந்த அற்புத தீயை கவனித்து, அதை அறிய நினைத்த மோசேயை போல, நாம் தேவனுடைய அற்புத செய்கைகளை குறித்து நிதானித்து பார்ப்பதில்லை.

ஒரு சமாதானமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த மோசே, இஸ்ரவேல் மக்களின் மீட்பை குறித்து யோசித்துக் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த மனிதனை தான், இஸ்ரவேல் மக்களின் மிகப்பெரிய இரட்சிப்பிற்கு தேவன் பயன்படுத்துகிறார்.

அதேபோல நம் மனதில் கூட நினைத்து பார்க்காத பல ஊழியங்களை தேவன் நம்மிடம் ஒப்படைக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாகவும், தயாராகவும் இருக்க வேண்டியுள்ளது.

ஒரு அற்புதத்தை மட்டும் காட்டிவிட்டு, தனது விருப்பத்தை தேவன் மோசேக்கு தெரிவிக்கவில்லை. அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையிலான செயல்திட்டத்தையும் மோசேக்கு முழுமையாக விளக்குகிறார். எனவே தேவனின் திட்டத்திற்காக நாம் அழைக்கப்படும் போது, அதற்கான சரியான ஆலோசனையும் அவரே அளிக்கிறார்.

அன்று முட்செடியில் கண்ட அந்த தீ, மோசேயின் இருதயத்தில் தொடர்ந்து எரியும் தீயாக மாறி, தேவன் மீதான விசுவாசத்தை பெருக்கியது. இதனால் இஸ்ரவேல் மக்களின் எவ்வளவோ முறுமுறுப்புகளின் மத்தியிலும், தேவனோடு உள்ள உறவை மோசே கைவிடவில்லை. இஸ்ரவேல் மக்களை தேவனே கைவிட நினைத்தும், மோசே பரிந்து பேசிய போது அந்த முடிவை தேவன் மாற்றிக் கொண்டார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் இடையே மோசேயை போன்ற ஆட்களை தான் தேவன் தேடுகிறார். அதாவது தேவ திட்டத்திற்கான அழைப்பை சரியாக புரிந்து கொண்டு, அதை நிறைவேற்றுவதில் உறுதியான மனிதனாக இருக்க வேண்டும். ஒரு முறை தேவனின் திட்டத்தை நாம் அறிந்து கொண்டால், அதை மாற்றவோ, பின்மாறி செல்லவோ கூடாது என்று தேவன் விரும்புகிறார்.

மோசேயை போல நாமும் தேவன் விரும்பும் பண்புகளை கொண்டிருக்கும் போது, நாம் எதிர்பார்க்காத பல காரியங்களையும் நம் மூலம் தேவன் செய்வார். அது நமக்கு மட்டுமின்றி, எண்ணற்ற மக்களுக்கு ஆசீர்வாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எங்களை நீர் அழைத்து உமது விலையேறப் பெற்ற இரட்சிப்பை தந்தமைக்காக ஸ்தோத்திரம். உமது அழைப்பின் பின்னணியில் உள்ள மேன்மையான திட்டத்தை எங்களுக்கு வெளிப்படுத்தும் போது, அதை புரிந்து கொண்டு மோசேயை போல செயல்பட கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *