யாத்திராகமம்:32.26

“கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?…” யாத்திராகமம்:32.26

இன்று இந்த கேள்வியை வேத வசனம் நம்மிடம் கேட்கிறது. கர்த்தரின் பட்சத்தில் இருப்பது என்றால் என்ன? சபைக்கு போவது, தினமும் குடும்ப ஜெபம் பண்ணுவது, அவ்வப்போது சில கிறிஸ்துவ பாடல்களை பாடுவது – இதெல்லாம் செய்தால் கர்த்தரின் பட்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்ள முடியுமா? இல்லை என்பதே பதில்.

அப்படியென்றால், கர்த்தருடைய பட்சத்தில் எப்படி சேருவது? நமது தியான வசனத்திற்கு முன்னே வரும் சில வசனங்களை படித்தால், அங்கே இஸ்ரவேல் மக்கள், தேவனுக்கு எதிராக பாவம் செய்ததாக காணலாம். இதனால் தேவனுடைய மனிதன் மோசேக்கு கடும் கோபம் ஏற்பட்டு, கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்ற கேள்வியை கேட்கிறார்.

எனவே பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. நமக்குள் பாவம் இருக்கும் வரை நாம் தேவனுடைய பட்சத்தில் சேர முடியாது. இதற்கு பதிலாக தேவனுக்கு எதிரான பட்சத்தில் சேர்த்து விடுவோம். இதனால் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகி, நமக்காக வைக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்களை இழந்து, சாபத்தை பெற்றுக் கொள்கிறோம்.

நம் தேவன் பாவத்தை வெறுத்தாலும், பாவிகளை நேசிக்கிறார். பாவிகளை, பாவத்தில் இருந்து விடுவிக்க விரும்புகிறார். எனவே அவருடைய பட்சத்தில் நாம் இருக்கும் வரை, பாவத்தின் எண்ணங்கள் தோன்றினாலே அதை நமக்கு உணர்த்தி விடுவார்.

தேவன் ஒரு காரியத்தை குறித்து உணர்த்தும் போது, உடனே அதற்கு கீழ்படிந்துவிட வேண்டும். தேவனுக்கு பிடித்த காரியங்களில் கீழ்படிதல் முதல் இடத்தை பெறுகிறது. எனவே நாம், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியும் போது, அவரிடமாக சேர்ந்து கொள்ள முடிகிறது. மேலும் அவரும் நம்மிடமாக சேர்ந்து வந்து நமக்காக யுத்தம் செய்ய ஆரம்பிக்கிறார். இதனால் நமக்கு வரும் போராட்டங்களில் எளிதாக ஜெயத்தை பெற முடிகிறது.

பாவத்திற்கு எதிராக போராடுவதில் தேவனும் நமக்கு துணை புரிகிறார். மேலும் அநேக பாவிகளை, பாவத்தில் இருந்து மீட்டு, பரிசுத்தப்படுத்த நம்மை கருவியாக பயன்படுத்துகிறார். இதனால் தேவனுடைய பட்சத்தில் நாம் இருக்கிறோமா? என்பதை அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும்.

நாம் கர்த்தருடைய பட்சத்தில் இருக்கும் போது, பாவத்தின் மீது நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் தேவனுடைய சுபாவத்தை பெறும் நமக்கு, பாவிகளின் மீது பரிதாபமும், அன்பும் ஏற்படுகிறது. நம் சுபாவமே முற்றி மாறி, இயேசுவை போல மாறி விடுகிறது.

எனவே கர்த்தரின் பட்சத்தில் சேர்ந்து பாவத்திற்கு எதிராக போராட நமக்கு கர்த்தர் தாமே உதவி செய்வாராக.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற பரலோக பிதாவே, எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். ஆண்டவரே, நாங்கள் உமது பட்சத்தில் சேர வாஞ்சிக்கிறோம். உம்மை விட்டு பிரிக்கிற எங்கள் பாவங்களை மன்னியும், எங்களை பரிசுத்தப்படுத்தி உம்மை போல மாற்றும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel