0 1 min 3 mths

கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். யாத்திராகமம்: 7.1

எகிப்தில் இருந்து இஸ்ரவேல் மக்களை மீட்க மோசேயை இரட்சகராக எழுப்புகிறார் கர்த்தர். ஆனால் அந்த பணியை தயங்கி ஏற்கும் மோசேக்கு, தேவன் பல காரியங்களை வெளிப்படுத்தி கொடுக்கிறார். அதில் ஒரு காரியத்தை பற்றி தான், தியான வசனத்தில் காண்கிறோம்.

எகிப்தியர்களை பொறுத்த வரை ராஜாவாக இருந்த பார்வோன், மண்ணுலகில் உள்ள தேவனாக கருதப்படுகிறார். அவர் கூறிய எல்லா காரியங்களும் அப்படியே நடக்க வேண்டும் என்பதில் பார்வோனும் எகிப்து மக்களும் உறுதியாகி இருப்பார்கள்.

இப்படியிருக்க அந்த பார்வோனுக்கு மோசேயை தேவனாக்கி விடுகிறார். ஆரோனை மோசேக்கு தீர்க்கதரிசியாக ஆரோனையும் தேவன் நியமிக்கிறார். அதன் பின்னணியில், தேவனுடைய திட்டத்திற்கும் மனிதனுடைய யோசனைக்கும் உள்ள வித்தியாசத்தை காண முடிகிறது.

பார்வோனின் பார்வையில் இஸ்ரவேல் மக்கள் அடிமைகள். ஆனால் கர்த்தருடைய பார்வையில் அவர்கள் அனைவரும் ராஜகுலத்தை சேர்ந்தவர்கள். இஸ்ரவேலின் விடுதலைக்காக பேசும் மோசேயும் ஆரோனும் எகிப்தில் அடிமைகளாகவே கருதப்பட்டார்கள்.

இதனால் மோசேயின் செயல்களுக்கும் பேச்சுக்கும் பார்வோன் மரியாதை தராமல் இதயத்தை கடினப்படுத்துகிறார். மேலும் இஸ்ரவேல் மக்களின் வேலையை மிகவும் கடினமாக மாற்றுகிறார். எகிப்து மக்கள் மட்டுமே முதல் தரமாக இருக்க வேண்டும் என்று பார்வோன் திட்டமிடுகிறார்.

இப்படியெல்லாம் திட்டமிட்ட பார்வோனுக்கு மோசேயை தேவனாக்கி விடுகிறார் கர்த்தர். இன்னும் தெளிவாக கூறினால், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்த மோசேயை, தனக்கு நிகராக மாற்றுகிறார் தேவன். இதனால் பார்வோன் தொடர்ந்து மோசேயின் முன் தோல்விகளைச் சந்திக்கிறார்.

தேவன் எல்லா காரியங்களையும் மோசேக்கு கூற, அதை பார்வோனிடம் ஆரோன் தான் கூறுகிறார். அதாவது தேவன் தீர்க்கத்தரிசியின் மூலமாக தனது மக்களிடம் பேசுவது போல.

அடுத்தடுத்த 10 வாதைகள் வந்த போதும், கடைசி வரை பார்வோன் நினைத்த எந்த காரியமும் நடக்காமல் போகிறது. கோபமாக, தந்திரமாக, அன்பாக என்று பல விதமாக பேசும் பார்வோன், தொடர்ந்து மோசேயிடம் தோல்வியை மட்டுமே சந்திக்கிறார்.

நாம் வேலை செய்யும் இடம், நாம் போகும் சபை, நம் சுற்றத்தாருக்கு முன்பாக, நாம் தாழ்ந்தவர்களாகவோ அல்லது அப்படி பிறரால் கருதப்படவோ வாய்ப்புள்ளது. ஆனால் மோசேயை போல தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய நாம் தயாராகும் போது, எல்லாருக்கும் மேலாக நம்மை உயர்த்த தேவன் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

நம் மீதான பலரின் தவறான திட்டங்களையும் யோசனைகளையும் கவிழ்த்து போட்டு, நம்முடைய வார்த்தைகளை மதிப்பு மிகுந்தவையாகவும் உறுதியானதாகவும் தேவன் மாற்றுகிறார். மேலும் மோசேக்கு இருந்த திக்குவாய் பிரச்சனை போல, நமக்கு உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தேவன் தீர்வை உண்டாக்கி வெற்றிகளை தருகிறார்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, பிறருக்கு முன்பாக நாங்கள் தாழ்த்தப்படும் போது, அதற்காக மனதில் துக்கப்படாமல், உமது வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க உதவி செய்யும். அதன்மூலம் தேவனுடைய அதிசயங்களையும் அற்புதங்களையும் எங்கள் வாழ்க்கையில் காண கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *