0 1 yr

நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனைவிடும் என்றாள். யோபு.2:9

இந்த காலத்தில் நீதிமான் யோபை போல சோதனைகளை கடந்து, வெற்றி பெறுகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. யோபை சோதிக்க தேவனிடம் அனுமதி பெற்ற பிசாசு, அவரது மனைவியின் மூலம் வீழ்த்த முயற்சி செய்கிறான்.

யோபின் மனைவியின் பேச்சு அன்பானது போல தோன்றினாலும், அதில் பிசாசின் தந்திரம் மறைந்திருப்பதை காணலாம். யோபின் மீது உண்மையான அன்பு உடையவராக இருந்திருந்தால், நீங்கள் இப்படி கஷ்டப்படுவதை பார்க்கிலும், செத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருப்பார்.

ஆனால் “தேவனை தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறுகிறாள். இதிலிருந்து யோபின் மனைவியின் உள்ளேயிருந்து பேசும் பிசாசின் குறளை கேட்க முடிகிறது.

இதேபோல தேவனை அதிகமாக நேசிக்கும் நம்மை வீழ்த்த சுற்றியுள்ள உற்ற தோழர்கள், உறவினர்கள், அன்பான குடும்பத்தினர் என்று பலரையும், பிசாசு கருவியாக பயன்படுத்தலாம். நீதிமானாகிய யோபு, பிசாசின் ஆலோசனையை சரியாக கண்டறிந்து ஜெயமெடுத்தார். ஆனால் இன்று நாம் எப்படி கண்டறிவது?

பிசாசு எப்படி வேண்டுமானாலும், யார் மூலமாகவும் பேசுவான். ஆனால் அவன் பேச்சு பரிசுத்தத்திற்கு விரோதமாகவும், தேவனை நிந்திப்பதாகவும் இருக்கும். இதன் மூலம் பேசுவது நமக்கு அன்பான நபர் அல்ல. பிசாசு என்பதை புரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, “இந்த நவீன காலத்தில் தண்ணி அடிக்காத வாலிபனா? தியேட்டருக்கு போகாத வாலிப பெண்ணா? இயேசு நாதர் என்ன சினிமாவிற்கு போக வேண்டாம் என்று சொன்னாரா?” என்று நம் பரிசுத்தத்திற்கு விரோதமான கேள்விகளை நம் நண்பர்கள் கேட்பதை தினமும் கேட்கிறோம்.

மேற்கூறிய கேள்விகளின் மூலம், நீங்கள் இயேசுவை பின்பற்றியதால் ஒரு கேவலமான நிலையில் இருக்கிறீர்கள் என்பதாக ஒரு மறைமுக கருத்தை நம் மனதில் பதிவு செய்ய பிசாசு முயற்சி செய்கிறான்.

ஆனால் அது உண்மையல்ல, இப்படி கூறும் நம் நண்பர்களை விட பரலோகத்திற்கு அழைக்கப்பட்ட நாம் உயர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. நண்பர்களின் உள்ளே இருந்து கொண்டு வற்புறுத்தினால், நாம் இணங்கி விட வாய்ப்பு உண்டு என்பது பிசாசின் ஒரு தந்திரம்.

இதற்காக நம் நண்பர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் மூலமாக பேசும் பிசாசை உங்கள் மனதில் இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்களுடன் நிதானமாக பேசி, அந்த சந்தர்ப்பத்தில் வெற்றி பெற முயற்சி செய்யலாம் அல்லது விலகி செல்லலாம்.

இந்த பிசாசின் தந்திரத்தை அறியாமல், பலரும் நண்பர்களின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நம் தேவனையும், அவர் அளித்த விலையேறப்பட்ட இரட்சிப்பையும் இழந்து விடுகின்றனர்.

உலக நண்பர்கள் நமக்கு தேவைதான். ஆனால் அவர்கள் நம் தேவனை விடவோ, தேவன் அருளிய அவரது கட்டளைகளை விடவோ முக்கியமானதாக மாறிவிட கூடாது. அப்படி மாறினால், பிசாசின் சோதனையில் சிக்கி தோல்வியை சந்திக்க தொடங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

யோபின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு இருந்த போது, அதன் மீது அவன் மனம் செலுத்தவில்லை. நண்பர்கள் இருந்த போதும், அவர்களின் வார்த்தைகளையும், அறிவுரைகளையும், வேத வாக்கு என்று நினைக்கவில்லை. இதனால் முடிவில் தேவனே இறங்கி வந்து, யோபுடன் பேசுகிறார்.

யோபிற்கு கிடைத்த வெற்றி அவருக்கு மட்டும் உரியது அல்ல, தேவனுக்கும் உரியது. இது போன்ற வெற்றி நமது வாழ்க்கையிலும் உண்டாக கிடைக்க தேவன் உதவி செய்வாராக.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, எங்களுக்கு தந்த உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்களுக்கு அன்பவர்களை பிசாசு, தனது ஆயுதமாக பயன்படுத்துவதை அறிய உதவி செய்தீர். அவற்றை மேற்கொள்ள தேவையான தேவ கிருபையும், பரிசுத்தாவியின் அபிஷேகமும் தாரும். ஜெயம் பெற்று உமது ராஜ்ஜியத்தில் வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *