
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். யோவான்:14.1
மனித வாழ்க்கையில் ஒரு காரியத்தைக் குறித்து எப்போது கவலையும் பயமும் வருகிறதோ, அப்போது மனம் கலங்க ஆரம்பிக்கிறது. அது உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த கலக்கம் அதிகமாகி, முடிவில் பல விபரீத விளைவுகளை உண்டாக்குகிறது.
இந்நிலையில் தேவன் இன்று நமது இருதயம் கலங்காதிருப்பதாக என்று கூறுகிறார். ஏனெனில் பல காரியங்களை எண்ணி நாம் கலங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவருக்குத் தெரியும். அப்படி கலக்கம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், தேவனிடத்திலும், அவரிடத்திலும் விசுவாசமாயிருக்க வேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார்.
ஏனெனில் கலங்கிய மனதைக் கொண்ட ஒரு மனிதனால், சந்தோஷமான அல்லது சமாதானமான வாழ்க்கையை வாழ முடியாது. யோவான்: 13ம் அதிகாரத்தில், தனது சீஷர்களிடம் இருந்து தான் பிரிந்து செல்ல வேண்டிய தருணத்தைக் குறித்து இயேசு குறிப்பிட்ட போது, அவர்களுக்கு அது பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான், நமது தியான வசனத்தை இயேசு குறிப்பிடுகிறார்.
இதேபோல நாம் நம்பிய பல காரியங்களும் மனிதர்களும், நம்மை விட்டு பிரிந்து சென்ற ஒரு தருணத்தில் நாம் இன்று தவித்து கொண்டிருக்கலாம். எதிர்பார்த்த காரியங்களில் தோல்வியைச் சந்தித்து துக்கித்து கொண்டிருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் தேவன் மீதான விசுவாசத்தை இழக்க வேண்டாம். ஏனெனில் அவர் சகலத்தையும் நன்மையாக மாற்றுகிறவர் என்று வேதம் கூறுகிறது. எனவே அவர் மீதான விசுவாசத்தில் உறுதியாக இருங்கள். அப்போது நீங்கள் எந்த மாதிரியான கஷ்டமான, நெருக்கமான சூழ்நிலையில் சென்றாலும், உங்களுக்குள் கலக்கம் ஏற்படாது.
ஒரு குளத்தில் உள்ள நீர் தெளிவாக இருந்தால், ஏறக்குறைய 20 அடி ஆழத்தில் இருக்கும் காரியங்களைக் கூட நம்மால் தெளிவாக பார்க்க முடியும். ஆனால் ஒரு கலங்கிய நிலையில் உள்ள நீரைக் கொண்ட ஒரு குளத்தில், 3 அடி ஆழத்தில் உள்ள காரியங்களைக் கூட காண்பது கடினமே.
இதேபோல மனகுழப்பத்தில் உள்ளவர்கள் தான் பெரிய அளவிலான தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால் தெளிந்த மனம் உள்ளவர்கள் தவறுகளை கண்டறிந்து எளிதாக தவிர்க்கிறார்கள். எனவே நம்மை நேசிக்கும் அன்புள்ள தேவன் மீது விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். பாவத்தில் இருந்து மீட்டெடுத்த இயேசு, மற்ற எல்லா காரியங்களில் இருந்தும் நம்மை நீங்கலாக்கி இரட்சிக்க வல்லமையுள்ளவர் என்று விசுவாசிப்போம்.
தேவன் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் போது, நம்மில் ஏற்படும் மனகலக்கம் நீங்குகிறது. தேவ சமாதானம் நம்மை ஆளுகை செய்கிறது. இதனால் நாம் நடக்க வேண்டிய வழிகளிலும் செய்ய வேண்டிய காரியங்களிலும், எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை. இருதயத்தில் ஏற்படும் கலக்கங்களைத் தவிர்த்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, தேவ ஞானத்தில் வளர்ந்தவர்களாக விளங்குவோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, பல காரியங்களைக் குறித்து எண்ணி கலங்கிய அனுபவத்தில் இருந்த எங்களோடு, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக என்று பேசிய உமது வார்த்தைக்காக ஸ்தோத்திரம். நாங்கள் கலங்கி தவிக்காத வகையில், உம் மீதான விசுவாசத்தில் பெருக கிருபைத் தாரும். எங்கள் தேவைகள் எல்லாவற்றிற்கும் உம்மையே சார்ந்து வாழ உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.