0 1 min 1 mth

…நான் உங்களைச் சிநேகிதர் என்றேன். ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான்:15.15

இந்த உலகில் நட்பு என்பதற்கு எதுவும் நிகரில்லை. உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் கூறுகிறேன் என்று உலகத்தில் ஒரு கூற்று உண்டு. அந்த அளவிற்கு உலகில் நட்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெற்ற தாயைவிட, வளர்த்த தந்தையைவிட, தோள் கொடுத்து உதவும் தோழனாக இருப்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்.

உலகில் ஒரு மனிதனாக வாழ வந்த இயேசுவும், நட்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பதைத் தியான வசனத்தில் காணலாம். தன்னைப் பின்பற்றியவர்களுக்கு, தான் ஒரு குருவாக அல்லது அவர்களை விட உயர்ந்தவராக காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராக, ஒரு நண்பனாக இருக்க விரும்புவதாக கூறுகிறார்.

தங்களின் நட்பு வட்டாரம் மூலம் வாழ்க்கையில் மேன்மையான இடத்தை அடைந்த ஏராளமானோர் உள்ளார்கள். அதேபோல தீய நண்பர்களால் தவறான வழிக்கு அழைத்து செல்லப்பட்டு, தங்களின் நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் இயேசுவோடு உள்ள நட்பு, முதல் வகையைச் சேர்ந்ததாக மட்டுமே அமையும். ஏனெனில் யோவான்:15.13 வசனத்தில் நண்பனுக்காக அளிக்கும் அன்பைவிட மேலான அன்பு எதுவுமில்லை என்று இயேசு குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைகளைக் கூறியதோடு நில்லாமல், அதேபோல செய்தும் காட்டியவர் இயேசு.

நண்பா, உனக்காக என் உயிரையே கொடுப்பேன் என்று கூறும் நம் நண்பர்களால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் நமக்கு உதவ முடியாது. ஆனால் எந்தத் தகுதியும் இல்லாமல் பாவத்தில் அழிந்து போக இருந்த நம் மீது இயேசு உண்மையான அன்பைச் செலுத்தினார்.

அந்த நட்பின் பயனாக, நாம் தண்டிக்கப்பட வேண்டிய இடத்தில், நமது பாவங்களையும் அக்கிரமங்களையும் அவர் சுமந்தார். அதனால் இன்று ஒரு புதிய வாழ்க்கையை நாம் வாழ முடிகிறது. மேலும் அவர் இருக்கும் பரலோகத்திற்கு சென்றுடையும்படி, நமக்கு தேவையான ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்.

இந்த உலகில் நமது நண்பர்கள் கூறும் காரியங்களை ஒப்புக் கொள்கிறோம். அவர்களின் வார்த்தைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதன் மூலம் அவர்களின் மீதான அன்பையும் மரியாதையையும் காண்பிக்கிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த நண்பராகிய இயேசுவிற்கு ஒரு உண்மையான நண்பராக நாம் இருக்கிறோமா?

இயேசுவின் உண்மையான நண்பர்கள், அவரது வசனத்திற்கு கீழ்படிந்து நடப்பார்கள் என்று யோவான்:15.14 வசனத்தில் காண்கிறோம். எனவே வேத வசனத்திற்கு கீழ்படிந்து நடப்போம், இயேசுவின் நட்பை இந்த உலகில் மட்டுமின்றி, நித்தியமாக பரலோகத்திலும் தொடரவோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான ஆண்டவரே, இந்த உலகில் எத்தனையோ நண்பர்கள் இருக்கும் போது, பாவத்தில் இருந்து எங்களை மீட்கும் ஒரே நண்பராக நீர் அவதரித்தீர் என்பதை எண்ணி, நன்றியுள்ள இருதயதோடு உம்மைத் துதிக்கிறோம். மேன்மையான உமது நட்பை நாங்கள் தொடர, இன்று முதல் உமது வசனத்தைக் கீழ்படிந்து நடக்க தீர்மானிக்கிறோம். எங்கள் நண்பராக இருந்து, எங்களை வழிநடத்தும், ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *