0 1 min 1 yr

நினிவே மற்றும் தர்ஷீசு நகரங்களின் சிறப்புகளைக் குறித்து கடந்த செய்திகளில் கண்டோம். இந்நிலையில் நினிவேக்கு செல்ல யோனா தயக்கம் காட்டியதற்கான மற்ற சில காரணங்களையும், அதன் பின்னணிகளைக் குறித்தும் இந்தச் செய்தியில் காண்போம்.முதலாவதாக நினிவே மற்றும் தர்ஷீசு ஆகிய இரு நகரங்களும், இஸ்ரவேல் நாட்டின் இருபுறத்தில் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இஸ்ரவேல் நாட்டின் கிழக்கு பகுதியில் டைகிரிஸ் நதியை ஒட்டி நினிவே நகரம் அமைந்திருந்தது. யோனாவின் சொந்த ஊரில் இருந்து ஏறக்குறைய 600 மைல்கள் கிழக்காக நினிவே அமைந்திருந்தது. மேலும் நினிவேக்கு செல்ல யோனா கடல் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதிலிருந்து தேவனுடைய வார்த்தையைப் பெற்ற யோனா, அப்போதே அதை செய்யக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் யோனாவின் ஊரில் இருந்து நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டிய அவர், 30 மைல்கள் தொலைவில் இருந்த யோப்பா என்ற துறைமுகத்திற்கு செல்கிறார்.

அங்கிருந்து மேற்கு நோக்கி, அதாவது அவர் செல்ல வேண்டிய திசைக்கு எதிர்திசையில் 2200 மைல்கள் தூரத்தில் இருந்த தர்ஷீசுக்கு செல்ல முயன்றார். அதற்கான கட்டணத்தையும் யோனா செலுத்துகிறார். அதிலிருந்து தேவனுடைய திட்டத்தில் இருந்து, தன்னை விலக்கி கொள்ள யோனா விரும்பியுள்ளார். மேலும் நினிவே என்ற ஊருக்கும் அங்கு வசித்த அசீரியர்களுக்கும் என்ன நேர்ந்தாலும், தனக்கு அது தெரியவே கூடாது என்று யோனா நினைத்துள்ளார்.

இதற்கான காரணம், அசீரியர்கள் விக்கிரங்களை வணங்குபவர்கள் என்பதோடு, இஸ்ரவேல் மக்களுக்கு எதிரிகள் என்ற சிந்தனை யோனாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது என்று நாம் ஏற்கனவே கண்டோம். மேலும் அவர்கள் பெருமையுள்ளவர்கள் என்பதோடு, மற்ற மக்களின் மீது கருணைக் காட்டாதவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திருந்த ஒரு வாய்ப்பு அளிக்க தேவன் விரும்பிய போதும், யோனாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனெனில் யோனாவைப் பொறுத்த வரை, அந்த மக்கள் செய்த பாவத்திலேயே அழிந்து போக வேண்டும் என்று விரும்பினார். அவர்களுக்கு எச்சரிப்பின் வார்த்தை அளிக்கப்பட்டு, மனந்திருந்தி தேவனை நோக்கி கூப்பிட்டால், அதை தேவன் மன்னிப்பார் என்று யோனா நன்கு அறிந்திருந்தார்.

எனவே தனது எதிரிகளுக்கு தேவன் கருணைக் காட்டக் கூடாது என்று யோனா எண்ணம் கொண்டார். இதை தேவனோடு பேசும் போது, அவர் கூறும் காரணத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். யோனா:4.2 வசனத்தில், முதல் முறையாக நினிவேக்கு அழைப்பு கிடைத்த போது ஏன் போகவில்லை என்பதை யோனா கூறுகிறார்.

எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், அவர்கள் திருந்தி நல்ல மனிதனாக வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆனால் யோனாவிற்கு அது பிடிக்கவில்லை. தேவன் இரக்கம் நிறைந்தவராக எனக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இதே தவறை சில நேரங்களில் நாமும் செய்கிறோம். நாம் சந்திக்கும் சிலரை நம்மால் ஏற்றுக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடிவதில்லை. இதனால் அவர்களிடம் நாம் பேசுவது குறைவு என்பதோடு, இரட்சிப்பின் சுவிஷேசமும் அவர்களுக்கு அறிவிப்பது இல்லை. ஆனால் ஒருவராகிலும் கெட்டுப் போவது தேவனுக்கு சித்தமில்லை என்று வேதம் கூறுகிறது.

நாம் வெறுக்கும் நபர் கொடும் பாவியாக இருக்கக் கூடும். ஆனால் அவருக்கும் திருந்தி தேவ பிள்ளையாக வாழ, தேவன் வாய்ப்பு அளிக்க விரும்பும் போது, நாம் அதற்கு தடையாக இருக்க முடியுமா? எனவே அதை யோனாவைப் போல தடுக்க முயற்சிக்க கூடாது.

தேவனுக்கு கீழ்படிய மறுத்த யோனாவை, தேவன் தண்டிக்கவில்லை. மாறாக, அவன் செய்த தவறைக் குறித்து உணர்ந்து மனந்திருந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தார். யோனாவைப் போல கீழ்படியாமை காட்டிய பலரும், தேவனுடைய தண்டனையைப் பெற்றதாக, வேதத்தில் நாம் காண்கிறோம்.

மேலும் அவருக்கு இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்ற தேவன் திட்டமிடுகிறார். ஆனால் யோனா புத்தகத்தின் கடைசி வாக்கியம் வரை, நாம் கவனித்து வாசித்தாலும், அந்த திட்டம் நிறைவேறவில்லை என்பதை அறியலாம்.

திருந்தவேமாட்டார்கள் என்று நம்முடைய மனித மூளையில் நினைக்கும் பலரையும், தேவனால் திருத்த முடியும். அவர் திருத்தியும் இருக்கிறார் என்பதற்கு எவ்வளவோ சாட்சிகளை நாம் அனுதினமும் கேட்கிறோம். எனவே நாம் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

பாவத்தில் அழிய இருந்த நினிவே பட்டணத்திற்கு தேவனுடைய எச்சரிப்பின் வார்த்தை, தேவ பயத்தையும் தாழ்மையையும் அளித்தது. ஆனால் தேவனுடைய தீர்க்கத்தரிசியாகிய யோனாவிற்குள் இருந்த கோபமும், வைராக்கியமும் எவ்வளவேயினும் குறையவே இல்லை. இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டில் நாம் வாழக் கூடாது.

தேவன் பாவத்தை மட்டுமே வெறுக்கிறாரே தவிர, பாவியை அல்ல. பாவத்தில் மரித்து போன ஒவ்வொரு மனிதனும் திருந்தி, புதிய மனிதனாக வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

எனவே தேவனுடைய அந்தத் திட்டத்தை அறிவிக்குமாறு நாம் அறிவுறுத்தப்படும் போது, அது யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கொடும் பாவியாக இருந்தாலும், அவருக்கு சுவிஷேசம் அறிவிக்க தயங்க கூடாது. யாருக்கு தெரியும், யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு, நினிவே மக்கள் தேவனிடத்திற்கு திரும்பியது போல, நாம் அறிவிக்கும் சுவிஷேசத்தைக் கேட்டு, நம்மால் வெறுத்து தள்ளப்பட்ட கொடும் பாவியும் மனந்திருந்தலாமே!

யோனா கூறும் சத்தியங்கள் -11 பாகம் (தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *