யோனா கூறும் சத்தியங்கள் -13

மீனின் வயிற்றில் அனுபவித்த கஷ்டத்தில் மனதிரும்பிய யோனா, தேவனுடைய திட்டத்தின்படி நினிவேக்கு சென்று பிரசங்கித்தார். அப்போது அந்த நகரில் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்து இந்தச் செய்தியில் காண்போம்.யோனா:3.3 வசனத்தின் மூலம் நினிவே மூன்று நாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது என்று அறிய முடிகிறது. பண்டைய கால மனிதர்களின் பயண முறையின்படி, நாள் ஒன்றுக்கு 18 முதல் 20 மைல் தூரம் வரை நடப்பார்கள். அதற்கு மேல் ஓய்வெடுத்து கொள்வார்கள். அந்த கணக்கில் பார்த்தால், யோனா சென்ற நினிவே நகரம் ஏறக்குறைய 50 மைல் சுற்றளவு கொண்டதாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் யோனா:3.4 வசனத்தை கவனித்து வாசித்தால், நினிவே நகரத்திற்குள் பிரவேசித்த யோனா, 40 நாட்களுக்குள் அந்த நகரம் கவிழ்க்கப்பட்டு போகும் என்று ஒரே ஒரு நாள் மட்டுமே பிரசங்கித்ததாக காணலாம். அதாவது நினிவே நகரம் முழுவதும் பிரயாணம் செய்து, தேவனுடைய கோபத்தைக் குறித்து, யோனா பிரசங்கிக்கவில்லை.

தேவனுடைய திட்டத்திற்கு விலகியோடி, இவ்வளவு தண்டனைகளை அனுபவித்து, கட்டாய மனந்திரும்புதல் அடைந்து பிறகும், யோனாவிற்கு தேவ சித்தத்தை முழுமையான செய்ய இன்னும் விருப்பம் இல்லை.

இந்த வேதப்பாடத்தில் நாம் ஏற்கனவே கண்டது போல, தேவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள பணி, நமது விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனாலும் அதைத் தயக்கத்தோடும் அரைக்குறை மனதோடும் செய்வது ஒரு தவறான நடவடிக்கையாகும்.

இப்படி செய்வது தேவனுடைய கோபத்தில் இருந்து தப்பிக்க, நாம் செய்யும் தந்திரமான நடவடிக்கை என்று கூட கூறலாம். நினிவே மக்கள் மனந்திருந்த வேண்டும் என்பது தேவ சித்தம்.

இந்நிலையில் தேவ சித்தம் செய்யாமல் இருந்தால், யோனாவிற்கு தண்டனையின் அளவு அதிகரித்து கொண்டே போகிறது. அதற்காக நினிவே மக்களின் மீதான தனது வெறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. இதனால் தேவ சித்தத்தை எப்படியோ, அரைக்குறையாக செய்கிறார் யோனா.

இதேபோல பல விசுவாசிகளும், ஊழியர்களும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். நான் மட்டும் இரட்சிக்கப்படாமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா?, என்ன செய்வது ஞானஸ்நானம் எடுத்துவிட்டேனே!, இன்று ஞாயிற்றுக்கிழமையா,

தேவாலயத்திற்கு போக வேண்டுமே! என்றெல்லாம் கூறுகிறார்கள்.
தேவனுடைய பணிகளை நாம் விருப்பம் இல்லாமல் செய்வதால், எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை என்பதோடு, அதை அரைக்குறை மனதோடு செய்துவிட்டு சிலர் பெருமையும் பாராட்டுகிறார்கள். தேவனால் அளிக்கப்பட்ட ஊழியங்களைத் தாழ்மையோடும் முழுமனதோடும் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் நினிவே நகரத்தில், யோனாவின் எச்சரிப்பு சத்தம் பெரிய அளவிலான மனமாற்றத்தை ஏற்படுத்துவதாக, யோனா:3.5-8 வசனங்கள் கூறுகிறது. ராஜாவின் உத்தரவு வரும் முன்னரே, பாவத்தில் இருந்த நகர மக்கள் தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால், யோனாவின் பிரசங்கத்தில், உங்களை தாழ்த்தினால் தேவன் மனமிரங்குவார் என்ற வார்த்தையே வரவில்லை.

ஆனாலும் தேவனுக்கு முன்பாக தங்களை தாழ்த்தி, அவரது இரக்கத்தைப் பெறும் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இங்கே முயற்சி என்று நான் குறிப்பிட காரணம், தங்களைத் தாழ்த்தினால் தேவன் மனமிரங்குவார் என்பதில் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இருக்கவில்லை என்பது ராஜாவின் பேச்சில் தெரிகிறது (யோனா:3.9).

இதேபோல திருந்தவேமாட்டான் என்று நாம் நினைக்கும் பலரையும், தேவனுடைய எச்சரிப்பின் வசனம் திருத்த வல்லது. எனவே நம்மிடம் அளிக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தை, மற்றவர்களுக்கு கூற நாம் தயங்கக் கூடாது.

40 நாட்களில் நினிவே நகரை அழிக்க நினைத்த தேவன், அவர்களின் மனந்திரும்புதலை கண்டு, அந்த முடிவை கைவிட்டார். இதுபோல மனந்திரும்பும் ஒவ்வொரு பாவியையும் எண்ணி, தேவன் தேசத்திற்கு நியமித்துள்ள நியாயதீர்ப்புத் திட்டத்தை கைவிடுவார்.

யோனா கூறும் சத்தியங்கள் -14 பாகம் (தொடரும்)

Spread the Gospel