0 1 min 6 mths

நினிவே என்ற நகரத்தின் மிஞ்சிய பாவத்தைக் கண்டு, அதை அழிக்க நினைத்த தேவன், அது குறித்து எச்சரிக்க, தீர்க்கத்தரிசி யோனாவை அங்கு செல்லுமாறு கூறுகிறார். ஏனெனில் தான் செய்த பாவத்தில் மனிதன் அழிந்து போவதைத் தேவன் ஒருநாளும் விரும்புவது இல்லை.நம்மிடம் கூட தேவன் பல காரியங்களை ஒப்படைக்கிறார். எடுத்துக்காட்டாக, நம்மோடு வேலைச் செய்யும் ஒரு நண்பருக்கு சுவிசேஷம் கூறுவது அல்லது குடும்பத்தில் உள்ள ஒருவரின் இரட்சிப்பிற்காக ஜெபிப்பது உள்ளிட்ட காரியங்களைச் செய்யுமாறு தேவன் கூறலாம்.

ஆனால் தேவனின் மேலான திட்டத்தைப் புரிந்து கொள்ள தவறும் யோனா, யோப்பா என்ற இடத்திற்கு சென்று, அங்கிருந்து தர்ஷீசுக்கு போகும் கப்பலுக்கு கூலி கொடுத்து தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார்.

இதேபோல சில நேரங்களில், நமது சொந்த புத்தியைப் பயன்படுத்தி, தேவனுக்கே அறிவுரைக் கூறுகிறோம் அல்லவா? இவ்வளவு பாவியான மனிதன் எப்படி இரட்சிக்கப்படுவான்? அல்லது அவரிடம் போய் எப்படி இயேசுவைப் பற்றி கூறுவது? என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு, அந்தப் பணியைச் செய்ய மறுக்கிறோம். மேலும் சில நேரங்களில் தேவ சமூகத்தில் இருந்து யோனாவைப் போல விலகி, நமது சொந்த விருப்பத்திற்கு ஓடி மறைந்து கொள்கிறோம்.

கப்பலின் கீழ்தட்டிற்கு இறங்கிப் போய், தன்னை மறைத்து கொள்ளும் யோனா, அங்கே அயர்ந்து தூங்கியதாக வேதம் கூறுகிறது. ஆனால் அவரை தட்டியெழுப்ப தேவனோ, ஒரு தேவ தூதனோ அங்கு வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல சில நேரங்களில் தேவனை மறந்து அல்லது தேவனுக்கு மறைந்து பயணிக்கும் நம்மை, தேவன் கண்டுகொள்ளாமல் விட்டது போல தெரியலாம்.

யோனாவின் கீழ்படியாமையை உணர்த்துவதற்காக, கடலின் மீது பெரிய காற்றை அனுப்பிய போது, கப்பலே உடையும் வகையிலான பெரிய கொந்தளிப்பு உண்டானதாக (யோனா:1.4) காண்கிறோம்.

நமக்கு கொடுக்கப்பட்ட தேவ ஊழியங்களை விட்டுவிட்டு, தேவையில்லாத செலவுகளைச் செய்து கொண்டு, தேவனுக்கு மறைவாக பதுங்க நினைத்தாலும், அங்கே எல்லாருக்கும் முன்பாக நம்மை வெளியே கொண்டு வர வல்லமையுள்ள தேவனை தான் நாம் ஆராதிக்கிறோம். எனவே அவரை ஏமாற்றலாம் என்ற நமது எந்தத் திட்டமும் தோல்வியைத் தான் சந்திக்கும்.

எனவே தேவன் அளிக்கும் ஊழியங்களை உண்மையும் உத்தமமுமான முறையில் செய்து முடிப்போம். அப்போது நமக்கு மட்டுமின்றி, நம்மைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும், அது ஆசீர்வாதமாக இருக்கும். நமது கீழ்படியாமையை உணர்த்த மற்றவர்களைச் சேர்த்து தண்டனையில் வீழ்த்துவதைத் தவிர்ப்போம்.

யோனா கூறும் சத்தியங்கள் -3 பாகம் (தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *