யோனா கூறும் சத்தியங்கள் – 3

தனது கீழ்படியாமை யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தான், யோனாவும் அயர்ந்து தூங்கினார். ஆனால் யோனாவிற்கு நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும், அவருடன் பயணித்த மற்ற அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டதாக காண்கிறோம்.

ஏனெனில் கப்பலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க, தங்களிடம் இருந்த சரக்குகளை கடலில் ஏறிந்துவிட்டு, ஒவ்வொருவரும் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டுதல் செய்கிறார்கள் (யோனா:1.5).

தேவனால் அளிக்கப்பட்ட பணியை நாம் செய்ய தவறும் போது, அது நமக்கு மட்டுமின்றி, நாம் சார்ந்துள்ள சபை, தெரு, ஊர், நகரம் என்று எல்லா தரப்பிலும் பாதிப்பு உண்டாகும். நமது சபையில் சரியான எழுப்புதல் இல்லை அல்லது தேவனுடைய அதிசய கரத்தை காண முடியவில்லை என்றால், அதற்கு நம்முடைய கீழ்படியாமைக் கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனவே நமது குறைகளை தேவன் உணர்த்தினால், உடனடியாக நம்மையே தேவ சமூகத்தில் தாழ்த்துவது நல்லது.

இந்தக் காலத்தில் பொதுவாக சபையில் எழுப்புதல் இல்லை என்றால், தேவ ஊழியர்களையும் மற்ற விசுவாசிகளையும் மட்டுமே குறைக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நம்முடைய ஆவிக்குரிய நிலை எப்படி இருக்கிறது அல்லது நம்மிடம் தேவன் ஒப்படைத்தப் பணிகளை அல்லது ஊழியங்களை நாம் சரியான முறையில் செய்கிறோமா? என்று ஆராய்ந்து பார்க்க தவறுகிறார்கள். இதனால் தேவனுக்கு முன்பாக நாம் குற்றவாளிகளாக மாறுகிறோம். மேலும் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் அதிகமாகிறதே தவிர, குறைவதில்லை.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால், தான் பயணிக்கும் கப்பலுக்கு எதிராக அவ்வளவு பெரிய காற்றும், கடல் கொந்தளிப்பும் உண்டானச் சூழ்நிலையிலும், யோனா எந்தக் கவலையும் இல்லாமல் அயர்ந்த நித்திரை செய்ததாக வேதம் கூறுகிறது.

நம்மில் பலருக்கும் இது போன்ற மனநிலைக் காணப்படுகிறது. சபையில் எழுப்புதல் வரவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? அல்லது நான் வசிக்கும் ஊரில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைக்கு யார் காரணம் என்று கண்டுபிடியுங்கள் என்று மற்றவர்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இல்லாவிட்டால், தேவ கிருபையில் எனக்கு எந்த குறையும் இல்லை, என்னை தேவன் ஆசீர்வதித்து இருக்கிறார் என்று கூறி, எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் இது கூட தேவனுடைய பார்வையில் சரியான நடத்தை அல்ல என்பதை யோனாவின் வாழ்க்கையின் மூலம் தேவன் விளக்குகிறார்.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கப்பலில் ஏறி, தர்ஷீசுக்கு சென்று விடலாம் என்ற எண்ணம் கொண்ட யோனாவின் திட்டத்தைத் தேவன் தோல்வியடைய செய்தார். மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்பாக, தனது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை யோனாவுக்கு உண்டானது.

இதேபோல நம்மிடம் ஒப்படைத்த தேவனுடைய பணியை நாம் செய்ய தவறும் போது, இதுவரை நாம் அறியாத பலருக்கு முன்பாக நமது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தேவனால் நம்மிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை, எந்தக் குறையும் இல்லாமல் செய்து முடிப்போம். இதுவரை ஏதாவது தேவப் பணிகளைச் செய்ய தவறியிருந்தால், உடனடியாக தேவ சமூகத்தில் மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புவது தான் சிறந்த வழி.

யோனா கூறும் சத்தியங்கள் – 4வது பாகம் (தொடரும்)