யோனா கூறும் சத்தியங்கள் -5

கடல் கொந்தளிப்பைக் கண்டு பயந்து கப்பலில் இருந்த மற்ற மதத்தினர் தங்கள் தெய்வங்களை நோக்கி முறையிடும் போதும், யோனா தூங்கினார் என்று கண்டோம். இதிலிருந்து மற்றவர்களோடு சேர்ந்து நான் அழிந்தாலும் பரவாயில்லை, தேவனிடம் இருந்து மறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் யோனாவிற்கு இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.இதனால் தான் அவ்வளவு கொந்தளிப்பின் நேரத்திலும், யோனா பதட்டம் இல்லாமல் தூங்குகிறார். யோனா:1.6-ல் எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிய யோனாவை, கப்பல் மாலுமி வந்த எழுப்பி, ஜெபிக்க கூறியதாக காண்கிறோம்.

இந்த நிலை நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. தேசத்தில் நடக்கும் பிரச்சனைகளைப் பெரிய பொருட்டாக எண்ணாத நாம், அதற்காக ஜெபிக்க தவறும் போது, நம்மைச் சுற்றிலும் உள்ள மற்ற மதத்தினரால் உணர்த்தப்படுகிறோம். ஆனால் அந்த உணர்த்துதலை நாம், எந்த அளவிற்கு மதிக்கிறோம் என்பது ஆராயத்தக்கது.

கப்பல் மாலுமி வந்து எழுப்பிய பிறகும், யோனா ஜெபித்ததாக வேதத்தில் குறிப்பிடவில்லை. ஏனெனில் தன்னால் தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பது யோனாவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆனாலும் யோனா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்து, தனது குற்றத்தை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார்.

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பிரச்சனைகளுக்காக ஜெபிக்குமாறு, மற்ற மதத்தினர் வந்து நம்மை கேட்கும் போது, நம்மை தேவ சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, என்னை ஜெபிக்குமாறு கூற இவர்கள் யார்? இவர்களே பிசாசை வணங்குகிறவர்கள்! என்றெல்லாம் கூறுவது தவறு.

ஏனெனில் ஒரு தவறான பாதையில் சென்ற தீர்க்கத்தரிசியை கழுதை கூட உபதேசித்து உள்ளதை வேதத்தில் காண்கிறோம். இது குறித்து ஏற்கனவே வேதத்தில் உள்ள கழுதைகள் என்ற வேதப்பாடத்தில் நாம் படித்திருக்கிறோம். எனவே இது போன்ற சூழ்நிலையில், நம்மை தாழ்த்தி தேவ சமூகத்தில் மன்றாடும் போது, தேசத்தின் மீது தேவன் மனமிறங்குவார்.

தேவ சமூகத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாமல், ஜெபிக்காமல் இருந்த யோனாவை, சீட்டுப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற பயணிகள், மாலுமி என்று எல்லாரும் சேர்ந்து, யோனாவைப் பிடிக்கும் வரை, யோனா தனது தவறைக் குறித்து எதுவும் பேசவில்லை.

நமக்கு அளிக்கப்பட்ட தேவப் பணியைச் செய்யாமல், தேவ சமூகத்தை விட்டு மறைந்து வாழும் போது, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களால் உணர்த்தப்படுகிறோம். அப்படியும் நாம் நம்மை தாழ்த்தி ஜெபிக்க மறுக்கும் போது, மற்ற எல்லாருடைய பார்வையும் நமக்கு நேராக திரும்பும் வகையில், தேவன் கிரியை செய்வார். அதன்பிறகு நமது குற்றத்தைப் பலருக்கு முன்பாக அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்படும்.

பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்பாக தனது குற்றத்தை அறிக்கையிட வேண்டிய நிலை வந்த போதும், யோனாவின் பேச்சில் எந்தொரு மனந்திரும்புதலுக்குரிய வார்த்தையும் காணப்படவில்லை. அந்தச் சூழ்நிலையிலும் யோனா, தேவனை நோக்கி ஜெபிக்கவோ, மன்னிப்புக் கேட்கவோ செய்யவில்லை.

நமது அழைப்பை தெளிவாக புரிந்து கொண்டு, தேவ கட்டளைகளுக்கு கீழ்படிவோம். தேவனை விட்டு மறைந்து போகும் முயற்சியில் நாம் ஈடுபடும் போது, மற்றவர்களின் மூலம் தேவன் உணர்த்தினால், அந்தச் சந்தர்ப்பத்தில் நம்மையே தாழ்த்தி, குற்றத்தை ஒப்புக்கொள்வோம். தேவ சமூகத்தில் மன்னிப்பு கேட்போம்.

யோனா கூறும் சத்தியங்கள் -6 பாகம் (தொடரும்)

Spread the Gospel