யோனா கூறும் சத்தியங்கள் -6

யோனா:1.9-10 வசனங்களில் தீர்க்கத்தரிசி யோனாவின் அறிக்கையை காண்கிறோம். அதைக் கேட்டு கப்பலில் உள்ள அனைவரும் பயந்து, அதற்கானத் தீர்வையும் யோனாவிடமே கேட்கிறார்கள்.இதில் கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பயபக்தியுள்ளவன் என்று யோனா பொய் சொல்லுகிறார். ஏனெனில் பயபக்தியுள்ளவராக இருந்திருந்தால், தேவனுடைய கட்டளையின்படி அவர் செய்திருப்பார்.

ஏனெனில் நீதிமொழிகள்:16.6-ல் கர்த்தருக்கு பயப்படுகிறவன் தீமை விட்டு விலகுவான் என்றும், ஏசாயா:57.11-ல் தேவனை மனதில் வைக்காதவர்கள், பொய்யர்கள் என்றும் வேதம் கூறுகிறது.

சில சூழ்நிலைகளில் நாம் கையும் களவுமாக உலக மக்களின் முன்னால் மாட்டிக் கொண்டாலும், நமது உண்மையான நிலவரத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக, நான் ஒரு கிறிஸ்தவன்; நானும் சர்ச்சுக்கு போகிறேன்; பைபிள் படிக்கிறேன் என்றெல்லாம் பெருமையாக கூறுகிறோம்.

ஆனால் தேவ நாமத்தை மகிமைப்படுத்தக் கூடிய சாட்சியுள்ள ஜீவியம், நமக்குள் இல்லாமல் இப்படி வெளியோட்டமாக கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. நம்மை காண்பவர்கள் இயேசுவைக் காணாத நிலையில், கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் கூறுவதில் அர்த்தமில்லை. எனவே கிறிஸ்துவின் அன்பு, தாழ்மை, கருணை, தயவு, மன்னிக்கும் தன்மை ஆகியவை மற்றவர்களுக்கு முன்பாக வெளிக்காட்ட வேண்டியுள்ளது.

யோனாவின் அறிக்கை மூலம் எல்லாருக்கும் முன்பாக தன்னை பக்தியுள்ள மனிதனாக காட்டி கொள்வதற்கான முயற்சி நடைபெற்றதாக மட்டுமே தோன்றுகிறது. இதனால் மற்றவர்களுக்கு பயம் ஏற்பட்டதே தவிர, தேவன் மீது பக்தி ஏற்படவில்லை.

நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் பெரியப் பிரச்சனைகளின் வழியாக செல்லும் போது, அவர்களுக்கு முன்பாக நம்மை நாமே உயர்த்தி காட்டக் கூடாது. அது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கு பதிலாக, பயத்தை மட்டுமே ஏற்படுத்தும். மேலும் ஜீவனுள்ள தேவனை நோக்கிப் பார்த்து, தங்களின் பாவத்தில் இருந்து விடுதலைப் பெறலாம் என்ற எண்ணமும் ஏற்படாது.

தனது அறிக்கையில், தேவனுக்கு முன்பாக மறைந்து ஓடி வந்ததால் இப்படி வந்தது என்று கூறும் யோனா, அதற்காக தேவ சமூகத்தில் மன்னிப்பு கேட்டு, ஜெபிக்கவில்லை.

சில நேரங்களில் நாம் செய்யும் அறிக்கைகள் கூட இந்த மாதிரி தான் உள்ளன. நான் செய்த தப்பு மூலம் தான் இப்படி நடக்கிறது என்பது உண்மை தான். ஆனால் என்ன செய்வது, எல்லாரும் செய்யக்கூடிய தவறு தானே… என்று பொதுவாக கூறுகிறோமே தவிர, தேவன் என் குறைகளை மன்னிக்க வேண்டும் என்ற வார்த்தைகள் நம்மில் இருந்து வருவதில்லை.

தேவ சமூகத்தில் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருந்தால், தேவன் மனமிறங்கி மற்றவர்களுக்கு இளைபாறுதலை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் யோனா அப்படி செய்யவில்லை. இது போன்ற தவறு நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் வராமல் பாதுகாக்க வேண்டும்.

மற்றவர்களின் பிரச்சனைகளைப் பார்த்து நாம் ஜெபித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறுவோம். அப்போது நமக்குள் இருக்கும் தேவ அன்பு, அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு முன்பாக, கிறிஸ்தவர்கள் என்று பெருமையான வார்த்தைகளை பேசாமல், தேவனை உயர்த்துவோம். அப்போது அவர்களுக்கு பிரச்சனைகளின் மீதான பயம் மறைந்து, தேவனுக்கு பயப்படுகிற பயம் ஏற்படும்.

யோனாவின் அறிக்கையைக் கேட்கும் கப்பலில் இருந்தவர்கள், இதைச் செய்தற்கான காரணத்தைக் கேட்கிறார்கள்? ஆனால் அதற்கு யோனாவிடம் எந்தப் பதிலும் இல்லை (யோனா:1.10). நம் செய்யும் தவறுகளுக்கு, நம்மைச் சார்ந்தவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது, அவர்கள் பல கேள்விகளை நம்மிடம் கேட்கிறார்கள்.

ஆனால் தவறு நம் பட்சத்தில் இருப்பதால், எந்தப் பதிலையும் கூற முடியாமல் திணறுகிறோம். தேவ ஊழியங்களில் ஈடுபடும் பலருக்கும் இந்த நிலைமை உண்டாகிறது. ஒரு காரியத்தைக் குறித்த தெளிவான தேவ சித்தத்தை அறியாமல், சொந்த விருப்பத்திற்கு ஏதாவது செய்து விடுகிறார்கள்.

ஆனால் பின்நாட்களில் ஏதாவது பிரச்சனை வரும் போது, அதற்கு விடை தெரியாமல் திணறுகிறார்கள். எனவே எந்தக் காரியத்திற்கும் தாவீதைப் போல தேவ சித்தத்தை அறிந்து செய்தால், நமக்கு தோல்விகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேவ சித்தத்தின்படி நாம் செய்யும் போது, இந்த உலகில் எத்தனைப் பேர் வந்து நமக்கு எதிராக நின்றாலும், அதை எளிதாக மேற்கொள்ள முடியும்.

Spread the Gospel