0 1 min 3 mths

கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கான காரணத்தைக் குறித்து யோனாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், கப்பலில் உள்ள மற்றவர்கள் செய்வது அறியாமல் திணறுகிறார்கள். எனவே யோனாவின் மூலம் உண்டான பிரச்சனைக்கு என்ன பரிகாரம் செய்வது என்று அவரிடமே கேட்கிறார்கள் (யோனா:1.11). இதேபோல நாம் செய்யும் தவறுகளுக்கு தேவனிடம் இருந்து எப்படி மன்னிப்பு கிடைக்கும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.இதன்படி, தன்னால் ஏற்பட்ட பிரச்சனைக்கு, தானே ஒரு தீர்வாக அமையும் வகையில், தன்னை கடலில் எறிந்து விடுமாறு யோனா கூறுகிறார். இதன்மூலம் தான் இறந்தாலும் பரவாயில்லை, கப்பலில் உள்ள மற்றவர்கள் பிழைக்கட்டும் என்று யோனா நினைக்கிறார் என்று நாம் கருதியினால், அது முற்றிலும் தவறு என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஏனெனில் ஒரு தீர்க்கத்தரிசியான யோனாவிற்கு, தனது கீழ்படியாமையின் மூலம் ஏற்பட இருந்த பின்விளைவுகள் என்ன என்பது நன்றாக தெரிந்திருக்கும். இருந்தாலும், தேவ சித்தத்தை விட தனது விருப்பம் தான் நடைபெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் யோனா செயல்பட்டுள்ளார்.

தனது விருப்பம் தோல்வி அடைந்ததால், மற்றவர்களுக்கு முன்னால் யோனாவிற்கு நிமிர்ந்து நிற்க முடியவில்லை. ஆனாலும் தனது செயல்பாட்டை யாரும் குற்றப்படுத்திவிட கூடாது என்ற எண்ணத்தில் யோனா செயல்படுகிறார்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் இருக்கும் போது, மற்றவர்களிடம் கூறும் காரியங்கள் சுயநலம் கொண்டதாக இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், அது நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரிய இடறலை உண்டாக்கும். ஏனெனில் யோனா கூறும் காரியங்கள், சுயநலம் கொண்டதாக மட்டுமே இருந்தது என்று யோனா:1.12 வசனத்தைப் படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

யோனா கூறிய காரியத்தில் அப்படி என்ன சுயநலம் இருக்கிறது என்று நமக்கு தோன்றலாம். ஆனால் யோனா கடந்து வந்த பாதைகளை முன்னிறுத்தி சிந்தித்தால், அவரது சுயநலத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

நினிவே நகரத்திற்கு செல்லுமாறு அனுப்பப்பட்ட யோனா, கர்த்தருடைய பார்வைக்கு விலகி, தர்ஷீசுக்கு போகும் கப்பலில் ஏறிச் செல்கிறார். ஆனால் கர்த்தரால் தடுக்கப்பட்டதால், உடன் பயணித்தவர்களிடம் தனது தவறை அறிக்கையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் எந்தக் குற்ற உணர்வும் கொள்ளாத யோனா, சொந்த விருப்பத்தின் தோல்வியை தாங்க முடியாமல் எப்படியாவது சாக வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால் சொந்தமாக அதற்கு முயற்சி செய்தால், ஜீவனுள்ள தேவனுடைய ஊழியக்காரனாகிய யோனா தற்கொலைச் செய்து கொண்டார் என்ற அவப்பெயர் ஏற்படும். அதை தடுக்கும் வகையில், தன்னைக் கடலில் தூக்கி எறிந்து விடுமாறு கூறுகிறார். இதன்மூலம் கப்பலில் இருந்தவர்களால் கொல்லப்பட்டார் என்று அதை மாற்ற விரும்புகிறார்.

தேவ கட்டளைகளைச் செய்ய நாம் தவறிவிட்டு, மற்றவர்களுக்கு முன்பாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் போது, யோனாவைப் போல நம்மில் பலரும் செயல்படுகிறோம். எடுத்துக்காட்டாக, தேவாலயத்தில் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு ஊழியத்தை ஒழுங்காக செய்ய தவறும் பட்சத்தில், அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை. அந்த ஊழியத்தில் இருந்தே என்னை நீக்கி விடுங்கள் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் தங்களின் மீது எந்த அவதூறான பேச்சு வராமல் பாதுகாக்கிறார்கள். இது குறித்து யாராவது கேட்டால், நான் நன்றாகத் தான் செய்து கொண்டிருந்தேன். என்ன செய்வது என்னை அந்த ஊழியத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள் என்பார்கள்.

மேலும் தாங்கள் வகித்த பொறுப்பை ஏற்கும் மற்றவர்கள் அதில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, அவர்கள் செய்யும் காரியங்களைக் குற்றப்படுத்துகிறார்கள். இதன்மூலம் தங்களின் சிறப்பான செயல்பாட்டை நிரூபிக்க விரும்புகிறார்கள்.

மேற்கண்ட இந்தச் செயல்பாடு மனிதர்களுக்கு புரியாமல் இருக்கலாம். அதைச் செய்பவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் தேவன் அந்த செயல்பாட்டைத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார். இது போன்ற நடவடிக்கையின் மூலம் நம்மைக் கொண்டு தேவன் செய்ய நினைத்த காரியங்கள் தடைப்படுகிறது என்பதோடு, அதற்கான காரணத்தை மற்றவர்கள் மீது சுமத்துகிறோம். மேலும் சுயவிருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இது தேவனுடைய பார்வையில் தவறாகவே கணக்கிடப்படுகிறது.

தேவன் நம்மிடம் ஒப்படைத்த காரியங்களைச் செய்ய தவறும் போது, மற்றவர்களால் உணர்த்தப்படுகிறோம். அப்போதே நம்மை தாழ்த்திவிட வேண்டும். அந்த சந்தர்ப்பத்தை தவறவிடும் பட்சத்தில், அந்த தவறு ஏற்பட்டதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, மற்றவர்களின் மீது அதை சுமத்த திட்டமிடக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட காரியத்தை தேவன் நம்மிடம் ஒப்படைத்தால், அதற்கு ஏற்ற கிருபையையும் அளிக்கிறார். எனவே எந்த ஊழியத்தில் நாம் தோல்வி அடைந்தோமோ, அதே ஊழியத்தை பரிசுத்தாவியின் புதிய பலத்துடன் செய்ய வேண்டும். அதை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

யோனா கூறும் சத்தியங்கள் -8 பாகம் (தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *