யோனா கூறும் சத்தியங்கள் -8

யோனா புத்தகத்தை வாசிக்கும் போது, நினிவே மற்றும் தர்ஷீசு என்ற இரு நகரங்களைச் சாதாரணமாக காண்கிறோம். ஆனால் நினிவே நகரத்திற்கு போக வேண்டிய யோனா, அதற்கு மறுத்துவிட்டு, தர்ஷீசு பட்டணத்திற்கு போக முயற்சி செய்தது ஏன்? என்ற கேள்வி நமக்கு ஏற்படுகிறது.எனவே இவ்விரு நகரங்களின் பின்னணியைக் குறித்து அறிந்தால், நமது கேள்விக்கான பதிலை எளிதாக கண்டறிய முடியும். முதலில் யோனா செல்லுமாறு அனுப்பப்பட்ட நினிவே நகரத்தைக் குறித்து காண்போம்.

நினிவே:
யோனா:1.2 வசனத்தில் மகா நகரமாகிய நினிவே என்று தேவன் கூறுவதில் இருந்து அது ஒரு பெரிய நகரம் என்பதை நாம் அறியலாம். யோனா புத்தகத்தின் கடைசி வசனத்தை (யோனா:4.11) வாசித்தால், இலட்சத்து இருபதினாயிரம் (1,20,000) பேருக்கும் அதிகமான மனிதரும், மிருகங்களும், நினிவே நகரில் வசித்து வந்ததாக தெரிகிறது.

வரலாற்று ரீதியாக நினிவே ஒரு பழமையான அசீரிய நகரமாகும். இன்றைய ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மோசூல் என்ற நகரமே, நினிவே என்று வரலாற்றில் அறியப்பட்டதாக, சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது டைகிரிஸ் நதியோரத்தில் அமைந்துள்ளது.

பல சாம்ராஜ்ஜியங்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்ட நினிவே நகரம், உலகின் பெயர்பெற்ற துறைமுக நகரமாக விளங்கி வந்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதியில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை தீவிரவாதிகளின் பிடியில் இந்த பகுதி சிக்கியுள்ளது.

மேற்கூறிய வரலாற்று சிறப்புகளைக் கொண்ட நகரமான நினிவே, இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக பல முறை போர் தொடுத்துள்ளது. இஸ்ரவேல் மக்கள், அசீரியர்களால் தாக்கப்பட்டதாக வேதத்திலும் அநேக இடங்களில் காண முடிகிறது. இதனால் பொதுவாக, அசீரியர்களின் மீது இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு வெறுப்பு காணப்பட்டது. அவர்களோடு பேசவோ, பழக்கவோ இஸ்ரவேல் மக்கள் விரும்பவில்லை.

மேலும் அந்தக் காலத்தில் பெரிய வியாபார நகரமாக இருந்த நினிவே, அசீரிய பெண் கடவுளான இஸ்தாரின் பெயரால் அறியப்பட்டது. நினிவே என்பதற்கு சரியான அர்த்தம் கண்டறிய முடியவில்லை என்றாலும், அது ஒரு மீன்களின் நகரம் அல்லது மீன்களைக் கொண்ட ஒரு வீடு, இடம் என்று பொருள் அளிப்பதாக உள்ளது.

நீரோ-அசீரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கிய நினிவே, இந்திய பெருங்கடலுக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த நிலப்பகுதியாக இருந்ததால், அந்த வழியாக செல்லும் எல்லா வணிக கப்பல்களும் இந்த நகரத்திற்கு வந்து சென்றுள்ளன.

இதனால் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்த நகரம் என்பதோடு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், நினிவே நகரத்திற்கு வந்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் உலகில் உள்ள எல்லா பாவ பழக்கங்களும், அங்கே நடந்தெறியுள்ளது.

இப்படி பாவத்தில் திளைத்த நினிவே நகரத்தைத் தான் அழிக்கப் போவதாக எச்சரிக்க, தேவன் யோனாவை அனுப்புகிறார். யோனா போன்ற தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளைக் கேட்டு, நினிவே நகர மக்கள் மட்டுமின்றி, அங்கு வரும் மற்ற நாட்டு வணிகர்கள் கூட மனந்திரும்ப வேண்டும் என்பதே தேவ சித்தமாக இருந்தது. ஆனால் அந்தத் திட்டத்திற்கு, யோனா ஒப்புக் கொள்ளவில்லை.

இன்னும் தெளிவாக கூறினால், உலகின் மிக விறுவிறுப்பான வியாபார சந்தையைக் கொண்ட மிகப்பெரிய நகரத்திற்கு வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்து தீர்க்கத்தரிசனம் உரைக்கும் பொறுப்பு, யோனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இஸ்ரவேலின் எதிரிகளாக கருதப்பட்ட அசீரியர்களின் தலைநகரத்திற்கு போக யோனா விரும்பவில்லை.

இதன்மூலம் தேவனுடைய கண்ணோட்டத்திற்கும், மனிதனுடைய கண்ணோட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். நம் வாழ்க்கையில் கூட தேவன், இது போன்ற பல திட்டங்களை வைத்துள்ளார். ஆனால் அதன் பின்னணி மற்றும் அதன் மூலம் அடைய போகும் மாற்றங்கள் ஆகியவற்றை யோனாவைப் போல நமக்கும் தெரிவதில்லை.

தேவன் கூறும் காரியங்களை வெளியோட்டமாக பார்த்துவிட்டு, அதற்கு ஒப்புக் கொடுக்க தயங்குகிறோம். இதன்மூலம் தேவனுடைய திட்டங்கள் தோல்வி அடைகின்றன என்பதை விட, நமக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

ஏனெனில் மேற்கூறிய சிறப்புகளைப் பெற்ற நினிவே நகரத்திற்கு வரவுள்ள நியாயத்தீர்ப்பைக் குறித்து யோனா முதலிலேயே சென்று கூறியிருந்தால், தேவனுக்கு கீழ்படிந்த தீர்க்கத்தரிசி என்ற பெயர் கிடைத்திருக்கும். மேலும் அந்த நகரத்தில் வாழ்ந்த பலருக்கும் முன்பாக, ஜீவனுள்ள தேவனுடைய தீர்க்கத்தரிசி என்ற பெயர் யோனாவிற்கு கிடைத்திருக்கும்.

ஆனால் தனது கீழ்படியாமை மூலம் தேவ திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, மறுஅழைப்பைப் பெற்ற பிறகு சென்றதால், அந்த அளவிற்கு யோனா பிரபலம் அடையவில்லை. மேலும் வேதத்தில் இவ்வளவு பெரிய நகரத்தை இரட்சிப்பில் நடத்திய தீர்க்கத்தரிசிக்கு வெறும் 4 அதிகாரங்கள் மட்டுமே கிடைத்தது.

இது யோனா தீர்க்கத்தரிசிக்கு பெரிய இழப்பு தானே? நாமும் தேவத் திட்டத்திற்கு விரோதமாக நமது சொந்த விருப்பத்தைச் செய்யும் போது, இது போன்ற இழப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே எப்போதும் தேவன் கூறும் காரியங்களை, நமது கண்ணோட்டத்தில் வைத்து பார்ப்பதைத் தவிர்த்து, அதற்கு ஒப்புக் கொடுப்போம். அப்போது மனிதரின் புத்திக்கு எட்டாத பெரிய காரியங்களைச் செய்யும் தேவன், சகலத்தையும் மேன்மையாக முடிப்பார்.

யோனா கூறும் சத்தியங்கள் -9 பாகம் (தொடரும்)

Spread the Gospel