0 1 min 1 mth

இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும், அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். யோவான்: 20.14

மரித்த இயேசுவின் சரீரத்தை தேடி கல்லறைக்கு வரும் மரியாள், கல்லறை திறந்து கிடப்பதை கண்டு சீஷர்களிடம் அறிவிக்கிறார். ஆனால் அவர்களும் வந்து பார்த்துவிட்டு, மற்ற சீஷர்களிடம் திரும்பி செல்ல, மரியாள் மட்டும் அங்கே நின்று அழுகிறார்.

தேவ தூதர்கள் விசாரித்த போதும் ஆறுதல் அடையாத மரியாளை, இயேசுவே நேரில் வந்து விசாரிக்கிறார். ஆனாலும் அவரை அறியாதிருந்தாள் என்று தியான வசனத்தில் காண்கிறோம். இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ள மரியாளுக்கு, அவரை அடையாளம் தெரியாமல் போனது ஏன்?

அவர் மரித்து 3 நாட்கள் கழித்து உயிரோடு எழுந்து வந்ததால், அவரை அடையாளம் காண முடியவில்லை என்று நாம் கருதலாம். அப்படியென்றால், 3 நாட்களுக்கு பிறகு இயேசுவால் எழுப்பப்பட்ட லாசரை, அவரது சகோதரிகள் உட்பட எல்லாரும் சரியாக அடையாளம் கண்டது எப்படி?

மேலும் மரித்த பலரையும் இயேசு உயிரோடு எழுப்பி உள்ளார்கள். அவர்கள் எல்லாரும், மற்றவர்களால் சரியாக அடையாளம் காணப்பட்டார்கள். ஆனால் உயிர்த்தெழுந்த இயேசுவை மட்டும் அடையாளம் காண முடியவில்லை.

லாசரை பெயர் சொல்லி இயேசு அழைத்ததால், அவரை அடையாளம் கண்டார்கள் என்று கருதலாம். இயேசுவின் சரீரத்தை காண வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் மரியாளும், கல்லறைக்கு வருகிறாள். இதனால் தேவ தூதர்கள் கூறிய சமாதானத்தை கூட மரியாள் கவனிக்கவில்லை.

இயேசு தனது வழக்கமான தொனியில் மரியாளே என கூப்பிடும் வரை, இயேசுவை மரியாள் அறியவில்லை. அப்படியென்றால், இயேசுவின் உருவத்திற்கு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பது உறுதியாகிறது. உயிர்ந்தெழுந்த இயேசு, சீஷர்கள் கூடியிருந்த அறையில் வந்த போதும், உங்களுக்கு சமாதானம் என்று முதலில் கூறுகிறார்.

ஏனெனில் இயேசுவின் உருவத்தை பார்த்த அவர்கள் பயந்து மிரண்டு போயிருக்கலாம். அதாவது வழக்கமான இயேசுவின் உருவம் அல்ல. ஒரு மகிமையான உருவம். ஆம். உயிர்ந்தெழுந்த இயேசு மகிமையின் சரீரத்தோடு இருந்தார்.

இதனால் தான் நான் இன்னும் பிதாவிடம் போகவில்லை என்று மரியாளிடம் கூறுகிறார். நம்பிக்கை இல்லாமல் பார்த்த சீஷர்களிடம், தன் காயங்களை தொட்டு பார்த்து உறுதி செய்து கொள்ள கூறுகிறார்.

இயேசு இந்த உலகில் வாழ்ந்த போது, எல்லாவற்றையும் நமக்கு எடுத்துக்காட்டாக செய்தது போல, இந்த காரியமும் நமக்கு மாதிரியாக செய்து காட்டினார். அதாவது இயேசுவின் இரண்டாம் வருகையின் போது, நாம் உயிரோடு இருந்தாலும் சரி, மரணம் அடைந்திருந்தாலும் சரி, நமது மண்ணான சரீரம், மகிமையின் சரீரமாக மாறி, அவரோடு போகும்.

இதனால் தான் யோவான் எழுதிய நிருபத்தில், அவர் வெளிப்படும் போது, நாம் அவரை போலவே இருப்போம் என்று 1யோவான்.3.2ல் குறிப்பிடுகிறார். அப்போது நம்மை மண்ணான சரீரத்தில் பார்த்தவர்களால், அடையாளம் காண முடியாமல் போகலாம்.
எனவே நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவராக வாழ்ந்தால், மரணத்தை எண்ணி பயம் வராது. மாறாக, தேவனோடு ஐக்கியமாகி அவரை போல ஒரு நாள் மாறுவேன் என்று எதிர்பார்ப்பு தான் அதிகரிக்கும். அந்த நம்பிக்கையையும் வருகையின் எதிர்பார்ப்பையும் வளர்த்து கொள்வோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, எல்லா காரியங்களையும் நீர் எங்களுக்கு எடுத்துக்காட்டாக செய்தது போல, உம்மை நம்பிய எங்களின் மரணத்திற்கு பிறகு உள்ள மகிமையான மாற்றத்தை குறித்தும் வெளிப்படுத்திய கிருபைக்காக ஸ்தோத்திரம். அதற்காக எங்களை தகுதிப்படுத்தும், ஆயத்தப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *