0 1 min 1 mth

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுது கொண்டிருந்தாள்; யோவான்: 20.11

சிலுவையில் மரித்த இயேசுவின் சரீரம், ஒரு தோட்டத்தில் இதுவரை யாரையும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையில் வைக்கப்படுகிறது. வாரத்தின் முதல் நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த கல்லறைக்கு இயேசுவின் சரீரத்தை பார்க்க மகதலேனா மரியாள் வருகிறார்.

நாமும் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆராதனைக்கு ஆலயத்திற்கு போகிறோம். ஆனால் நமக்குள் இயேசுவை காண வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லது என் ஆசைகளையும் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் பெரிய பட்டியலாக இயேசுவிடம் தெரிவிக்கலாம் என்று போகிறோமா?

இயேசு மரித்த பிறகும், அவர் மீதான அன்பு குறையாத மரியாளுக்கு, அவரது சரீரத்திற்கு வாசனை திரவியம் தேய்த்து, அதை பல நாட்களுக்கு காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையில் கல்லறைக்கு வருகிறார். அந்த கல்லறையை மூடி வைக்கப்பட்ட பெரிய கல் பற்றி மரியாளுக்கு ஞாபகம் வரவில்லை அல்லது அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

இயேசுவிடம் நல்ல சாப்பாடும், தங்களின் வியாதிக்கான சுகத்தையும் எதிர்பார்த்து வந்தவர்கள் யாரும், இப்போது இயேசுவை தேடி வரவில்லை. ஏனெனில் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் மரித்துவிட்டார். இனி அவரால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமே இதற்கு காரணம்.

நம் வாழ்க்கையின் தேவைகளை மட்டுமே முன்னுறுத்தி இயேசுவை தேடினால், சில குறிப்பிட்ட சோதனைகளின் மத்தியில் தேவன் மௌனமாக இருந்தால், அவரிடம் இருந்து பின்வாங்கி கொள்வோம். உலக மக்களின் உதவியை நாடி, அவர்களிடம் திரும்பி விடுவோம். தேவன் அளித்த இரட்சிப்பில் இருந்து பின்மாற்றம் அடைவும் வாய்ப்புள்ளது.

கல்லறையை மூடி வைக்கப்பட்ட பெரிய கல் நீக்கப்பட்டதை கண்டு ஆச்சரியப்படுகிறார் மரியாள். ஏனெனில், அதை யார் தனக்காக அகற்றுவார்கள் என்ற எண்ணம் மரியாளின் மனதில் ஒரு ஓரத்தில் ஓடியிருக்கலாம். ஆனால் மரியாள் செல்லும் முன்பே, அந்த கல் நீக்கப்பட்டிருந்தது.

தேவ சமூகத்திற்கு செல்ல உள்ள தடைகள் நீங்க, யார் நமக்கு உதவுவார்கள் என்ற எண்ணம் நமக்குள் பல சந்தர்ப்பங்களில் ஏற்படலாம். அதை எண்ணி மேற்கொண்டு எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், நாம் மனதில் சோர்ந்து போய், அப்படியே முடங்கி கூட போயிருக்கலாம். ஆனால் அப்படி முடங்கி இருந்தால், தேவன் கிரியை செய்யமாட்டார்.

தன்னால் கல்லறை கல்லை அகற்ற முடியாது என்பதை அறிந்தாலும், அங்கே போய் பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மரியாள் சென்றது போல, நாமும் தேவ சமூகத்திற்கு தைரியமாக செல்லும் போது, தேவனும் நமக்கு எதிராக உள்ள எல்லா தடைகளையும் நீக்குகிறார்.

கல்லறை திறந்து கிடப்பதை கண்டு ஆச்சரியப்படும் மரியாள், அதை மற்ற சீஷர்களுக்கு கூற செல்கிறார். விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடிவரும் இரண்டு சீஷர்கள், கல்லறையை பார்த்துவிட்டு சோகமாக சென்று விடுகிறார்கள். ஆனால் மரியாள் அங்கிருந்து திரும்பி செல்லவில்லை. அழுது கொண்டே நின்று, கடைசியில் இயேசுவை கண்ட பிறகு சந்தோஷத்தோடு சீஷர்களிடம் திரும்பி போகிறார்.

அந்த சீஷர்கள் போல, பலரும் நம்மோடு ஆலயத்திற்கு வரலாம். நம்மோடு சேர்ந்து ஜெபிக்கலாம். வசனத்தை கேட்கலாம். ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக நாமும் தேவ செயல்களை சாதாரணமாக எடுத்து கொண்டு வீடு திரும்பக் கூடாது.

இயேசுவின் மகிமையின் பிரசன்னத்தையும் அவரது அதிசயமான வார்த்தைகளையும் பெற வேண்டும். மேலும் நமக்குள் இருக்கும் எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவான பதிலையும் பெற்ற பிறகே வீடு திரும்ப வேண்டும்.

மரியாளை போல நாம் இயேசுவை கண்டு, அவரது வார்த்தைகளை கேட்டு வீடு திரும்பினால், மற்றவர்களுக்கு எடுத்து கூறும் வகையில், பல அதிசயமான அற்புதமான காரியங்கள் நம்மிடம் இருக்கும். இல்லாவிட்டால், எப்படி ஆலயத்திற்கு சென்றமோ, அதே மனநிலையுடன் வீடு திரும்புவோம்.

ஜெபம்:

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் அன்புள்ள பிதாவே, உயிர்ந்தெழுந்த இயேசுவை கண்டு மகிழ்ச்சி அடைந்த மரியாளை போல, நாங்களும் எல்லா கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலோடு உம் சமூகத்தில் இருந்து திரும்ப எங்களுக்கு உதவும். ஒரு சாதாரண கிறிஸ்துவ வாழ்க்கையை அல்ல, அனுதினமும் உமது அதிசயங்களையும் அற்புதங்களையும் காண கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *