
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்…
இயேசு கிறிஸ்துவை குறித்து அறியாத ஒரு குடும்பத்தை சேர்ந்த என்னை, தேவன் தனது அநாதி அன்பினால் அழைத்து, விலையேறப்பட்ட இரட்சிப்பை தந்து, இதுவரை கர்த்தருக்கு சாட்சியாக நிறுத்தி வருவதை எண்ணி கர்த்தரை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறேன்.
என் வாழ்க்கையில் தேவன் எண்ணிலடங்கா நன்மைகளையும், அதிசயங்களையும் செய்து இருந்தாலும், நாம் விசுவாசத்தோடு கூடிய ஜெபத்தை ஏறெடுக்கும் போது, நம் தேவன் பதில் அளிக்கிறார் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மட்டும் உங்களோடு பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.
பிற மதத்தினர் அதிகமாக வாழும் பகுதியில், நான் குடும்பமாக வசித்து வருகிறேன். எங்கள் வீட்டில் காலையிலும், இரவிலும் குடும்பமாக அமர்ந்து ஜெபிப்பது வழக்கம். இதனால் எங்கள் பகுதிகளில் வசிக்கும் சிலர், என்னிடம் வந்து அவர்களின் கஷ்டங்களை கூறி, ஜெபிக்குமாறு கேட்பார்கள். நாங்களும் ஜெபத்தில் அவர்களுக்கு உதவி செய்து வந்தோம்.
இந்நிலையில், எங்கள் பகுதியில் வசித்து வந்த ஒரு வீட்டில் உள்ள சகோதரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த வீட்டை சேர்ந்தவர்கள், ஒரு நாள் காலை நேரத்தில் என்னிடம் வந்து, அந்த சகோதரனுக்காக ஜெபிக்குமாறு கேட்டு கொண்டார்கள்.
நானும் தேவ சமூகத்தில் அவர்களுக்காக ஜெபித்தேன். ஆனால் மாலையில் பார்த்த போது, அந்த சகோதரன் மரித்து விட்டதாக செய்தி வந்தது. இதனால் என் மனதில் பெரிய ஒரு பாரம் ஏற்பட்டது. ஏனெனில் நம் தேவன் ஜீவனுள்ள தேவன், அவரிடம் ஜெபித்தால் நிச்சயம் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் என்னிடம் ஜெபிக்க கூறினார்கள்.
ஆனால் அந்த சகோதரனோ இப்போது மரித்துவிட்டார். அப்படியென்றால் எங்கள் பகுதியில், நம் தேவனின் நாமம் தூஷிக்கப்படுமே என்று வருந்தினேன். மரித்து போன சகோதரனை பார்க்க செல்ல விரும்பாத நான், தேவ சமூகத்தில், என் மன கஷ்டத்தை ஊற்றி ஜெபித்தேன். ஆண்டவரே, உமது நாமம் தூஷிக்கப்பட கூடாது. நீர் எப்படியாவது ஒரு அதிசயத்தை செய்யும் என்று ஜெபித்தேன். நேரம் கடந்தது.
இறந்த உடலுக்கு செய்ய வேண்டிய ஈமக் கிரியைகளை செய்து முடிந்துவிட்டது. எல்லா உறவினர்களும் வந்து பார்த்து ஆயிற்று. எனவே உடலை எரிப்பதற்காக எடுத்துச் சென்றனர். ஆனால் என் மனதில் இன்னும் அந்த தேவனுக்கேற்ற வைராக்கியம் உள்ள ஜெபம் மட்டும் நிற்கவில்லை.
தேவனிடம் போராடி ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு உள்ள விசுவாசத்தை இழக்கச் செய்யும் வகையில், பல சிந்தைகள் மனதில் தோன்றின. அது பிசாசின் ஆலோசனையோ, என் மனதின் ஆலோசனையோ என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எது எப்படியானாலும், அந்த சம்பவத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனது ஜெபம் தொடர்ந்தது. பிணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் பயணமும் தொடர்ந்தது. கட்டைகளை அடக்கி, பிணத்தை கடத்தி, அங்கே செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்தார்கள். கடைசியாக பிணத்திற்கு தீ மூட்டுவதற்கான நேரத்தில், தேவன் அந்த மரித்த உடலுக்குள் மீண்டும் உயிரை அனுப்பினார். அந்த சகோதரன் தீடீரென எழுந்து அமர்ந்தார். இதை கண்ட அங்கே இருந்தவர்கள் எல்லாரும் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையெல்லாம் அறியாத நான் தொடர்ந்து ஜெபித்து கொண்டு இருந்தேன். அங்கிருந்து ஓடி வந்தவர்களின் சத்தம் வீதியில் கேட்டு, வெளியே வந்து பார்த்த போது, வந்தவர்கள் நடந்த காரியங்களை கூறினார்கள். அப்போது தான் தேவன் செய்த வல்லமையான அற்புதத்தை எண்ணி, சத்தமாக துதித்தேன்.
மரித்த லாசரை உயிர்ப்பித்த இயேசு, இன்றும் ஜீவிக்கிறார். அவர் இன்றும் அதிசயங்களை செய்கிறார் என்று எங்கள் பகுதியில் உள்ள எல்லாருக்கும் தெரிந்தது. பலரும் இயேசுவை ஏற்றுக் கொண்டு, ஒரு பெரிய எழுப்புதலை காண முடிந்தது.
இன்றும் எங்கள் பகுதியில் வசிப்பவர்களுக்கு உள்ளே, அந்த அதிசயத்திற்கு பிறகு ஒரு தேவ பயம் காணப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து நாம் விசுவாசத்தோடு கூடிய ஜெபத்தில், தேவ மகிமைக்காக போராடும் போது, தேவன் நிச்சயம் அதற்கு பதில் வருவார் என்பது தெரிய வருகிறது. தேவனுக்கு ஸ்தோத்திரம்.