
அவர்களெல்லாரும் போக்குச் சொல்லத் தொடங்கினார்கள். லூக்கா. 14:18
இயேசு கூறிய ஒரு உவமையில், ஒரு மனிதன் பெரிய விருந்தை தயார் செய்து, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் வராததை கண்டு ஏமாற்றம் அடைகிறான். தனது பணியாளர்களை அனுப்பி, விருந்திற்கு வர வேண்டியவர்களை வருந்தி அழைத்து வரும்படி கூறுகிறான். ஆனால் “அவர்களெல்லாரும் போக்குச் சொல்லத் தொடங்கினார்கள்” என காண்கிறோம்.
தன்னை விருந்திற்காக அழைத்த ஒருவரிடம், விருந்திற்கு யாரை அழைக்க வேண்டும் என்று கூறிய பிறகு, மேற்கண்ட தொடர் அமைந்த உவமையை இயேசு கூறுகிறார்.
லூக்கா.14:18-20 வசனங்களில் விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கூறும் காரணங்களை காணலாம். ஒருவனுக்கு புதிய வயலை வாங்கியது காரணம்.
இன்னொருவனுக்கு ஐந்து ஏர் மாடு வாங்கியது காரணம். மற்றொருவனுக்கு திருமணமாகிவிட்டதாம். இந்த மூன்று காரணங்களும் தவிர்க்க கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உவமை, சில ஆவிக்குரிய உண்மைகளை நமக்கு போதிக்கின்றன.
வயல்:
இன்றைய அவசர உலகில் பணத்தை சம்பாதிக்க மனிதன் ஓடுகிறான். அதற்கு தடையாக நிற்கும் பலவற்றையும் அவன் தியாகம் செய்கிறார்கள். இதில் சில நேரங்களில் தேவனும் உட்படுகிறார். சபைக்கு செல்லுதல், குடும்ப ஜெபம், தனி ஜெபம் ஆகியவற்றை தவிர்த்து, வேலை செய்து சம்பாதிக்கும் நபர்கள் இன்றைய உலகில் ஏராளம்.
மனிதனுக்கு பணமும், வேலையும் அவசியம் தான். ஆனால் அந்த பணமோ, வேலையோ நம்மை தேவனை விட்டு பிரிக்கும் பிசாசின் ஆயுதமாக மாறிவிட கூடாது. இதனால் உலகில் செல்வ செழிப்பாக வாழ முடியுமே தவிர, ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றத்தையும், தேவன் இல்லாத வெற்றிடத்தையும் மட்டுமே அடைய முடியும். எனவே இன்று முதல் தேவனுக்குரிய நேரத்தை அவருக்காக மட்டுமே செலவிடுவோம்.
ஐந்தேர் மாடு:
நம்மை சுற்றியுள்ள பொருட்களே சில நேரங்களில் நம்மை தேவனை விட்டு பிரிக்கின்றன. இந்த பட்டியலில் மொபைல்போன், டிவி, சமையல் பணிகள் என பல பொருட்களை சேர்க்கலாம்.
எடுத்துக்காட்டாக, டிவியில் வரும் சீரியலுக்காகவும், கிரிக்கெட் போட்டியை பார்க்கவும் விரும்பி, வீட்டு ஜெபத்திற்கு லீவு விடும் கிறிஸ்தவர்கள் உண்டு. சபை ஆராதனைகளில் தேவனுடைய பிரசன்னம் உணரும் நேரங்களில், மொபைல்போனில் சாட் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள்.
தேவன் நமக்காக பரலோக ஆசீர்வாதங்களை வைத்திருக்கும் போது, அதை தடுக்கும், இது போன்ற ஐந்தேர் மாடுகளைச் சோதிக்கும் பணிகளை நிறுத்தி விட்டு தேவனுக்கு முதலிடம் கொடுப்போம்.
திருமணம் செய்தது:
இன்று நம் வாழ்க்கையில் நண்பர்கள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என ஒரு பெரிய கும்பலை சார்ந்து வாழ்கிறோம். ஆனால் அவர்களை, தேவனுக்கும் மேலாக வைத்து நாம் கனப்படுத்தி, மதிப்பு அளிக்கிறோமா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நாம் அப்படி செய்கிறவர்களாக இருந்தால், நிச்சயம் அதை மாற்றி கொள்ள வேண்டும்.
ஏனெனில் தேவனுக்கு எப்போதும் நம் வாழ்க்கையில் முதல் இடத்தை கொடுக்க வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஊழியத்திற்காக செல்ல நாம் செல்ல திட்டமிட்டிருக்கும் போது, அதே நேரத்தில் நம்மை சந்திக்க வரும் குடும்ப நபர்களின் பேச்சை கேட்டு பின்வாங்குகிறோமா? அல்லது அவர்களுக்கு ஊழியத்தை குறித்து எடுத்து கூறி தேவனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா?
இயேசு கூறிய மேற்கண்ட உவமையில் வரும் அந்த மனிதனை போல, நம் தேவன் விலையேறப்பட்ட பரலோக மற்றும் பூலோக ஆசீர்வாதங்களை, நமக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ளார். அதை பெற்று கொள்ள நம்மை அழைக்கிறார்.
மேற்கண்ட 3 நபர்களைப் போல, அவரது சமூகத்திற்கு செல்ல தடையாக பல காரணங்களைக் கூறி கொண்டிருக்காமல், தேவனுடைய விருந்தில் பங்கேற்க தயாராவோம்.
ஜெபம்:
அன்புள்ள பரலோக பிதாவே, நீர் எங்களுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மேலாக விருந்திற்காக ஸ்தோத்திரம். அதன் மேன்மையை அறிந்து கொள்ளாமல் இருந்த எங்கள் குறைகளை மன்னியும். இனி வரும் நாட்களில் தேவனுடைய காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உதவி செய்யும். உமக்கு அளிக்க வேண்டிய நேரத்தையும், முக்கியத்துவத்தையும் உமக்கு மட்டுமே அளித்து வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமென்.