
அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். லூக்கா:19.4
இயேசு மண்ணுலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், அவர் எண்ணற்ற அற்புதங்களை செய்து, உபதேசித்து வந்ததால், அவரை காண வேண்டும் என்ற ஆர்வம் ஒரு கூட்டம் மக்களுக்கு இருந்தது. அந்த கூட்டத்தை சேர்ந்த ஒரு மனிதனாக சகேயுவும் இருந்தார்.
குள்ளமான உடல் அமைப்பை கொண்டிருந்த சகேயுவிற்கு, இயேசுவை காண வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், மக்கள் திரள் அதற்கு தடையாக இருந்தது. இதேபோல இன்றைய கிறிஸ்தவ மக்கள் இடையே, இயேசுவை காண வேண்டும் என்ற ஆர்வத்தை தடுப்பதாக, அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையின் குன்றிய வளர்ச்சி காணப்படுகிறது.
ஆனால் அதை குறித்து அவர்களுக்கே தெரியாமலோ அல்லது மற்றவர்கள் அறியக் கூடாது என்று எண்ணத்திலோ, சகேயுவை போல காட்டத்தி மரத்தில் ஏறிக் கொள்கிறார்கள்.
அதற்காக சபையில் ஒரு உயர்ந்த பதவியோ, நல்லவர் என்ற பெயரோ, தேவ ஊழியர்களுக்கு உதவி செய்தல் போன்ற காரியங்களை செய்து, இயேசுவை காணலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் அதில் தோல்வியை தான் சந்திக்கிறார்கள்.
காட்டத்தி மரத்தில் ஏறிய சகேயு, எத்தனை மணிநேரம் காத்திருத்தார் என்பதை வேதம் குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரை கண்ட பலரும், கேலி, கிண்டல் செய்திருக்க கூடும். இதேபோல மேற்கண்ட முயற்சிகளின் மூலம் இயேசுவை காண முயற்சி செய்தால் தோல்வியை சந்திப்பதோடு, பலரது கேலி, கிண்டலுக்கும் ஆளாக நேரிடலாம்.
சகேயுவிற்கு தடையாக இருந்த அவரது குள்ளமான வளர்ச்சியை, அவராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் விளைவாக தான் அவர் காட்டத்தி மரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதேபோல இயேசுவை காண தடையாக இருக்கும் பரிசுத்தத்திற்கு விரோதமான பாவங்களை ஏற்றுக் கொள்ள நாம் தயங்கக் கூடாது.
தேவ சமூகத்தில் நமது பாவங்களை அறிக்கையிட்டு, நமது குன்றிய ஆவிக்குரிய வளர்ச்சியை ஒத்துக் கொள்ளும் போது, இயேசுவை நிச்சயம் காண முடியும். அதற்கு முதலாவதாக நமக்குள் தாழ்மை தேவைப்படுகிறது. கர்த்தருக்கு முன்பாக நாம் தாழ்மைப்படும் போது, அவர் நம்மை உயர்த்துகிறார்.
அதனால் தேவனை காண்பது எளிதாகிறது. அதை விட்டுவிட்டு நம்மை நாமே உயர்த்த முயற்சி செய்யும் போது, தேவனை காண முடியாமல் தோல்வியை சந்திக்கிறோம்.
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் வகையில் காட்டத்தி மரத்தின் மீது ஏறிய சகேயுவை, இயேசு தள்ளி விடவில்லை. அந்த மரத்திற்கு கீழே வந்த போது, இயேசு அண்ணார்ந்து பார்த்து, சகேயுவை அழைப்பதாக வேதத்தில் காண்கிறோம்.
இதேபோல, இயேசுவை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் இதுவரை நாம் தவறான அணுகுமுறையை பின்பற்றி இருந்தாலும், இன்று நம்மிடமாக வரும் இயேசு, நம்மை விரைவாக இறங்கி வருமாறு அழைக்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்ற சகேயு, அவருக்கு விருந்து அளித்து, தன்னில் இருந்த குறை, குற்றங்களுக்கு தகுந்த பரிகாரத்தை செய்கிறார்.
அதுபோல இயேசுவின் அழைப்பை ஏற்று, இன்றே அவரை நம் இருதயம் என்ற வீட்டிற்குள் ஏற்றுக் கொள்வோம். அவரது வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, பிறருக்கு விரோதமாக நாம் செய்த குற்றங்களுக்கு பரிகாரம் செய்வோம். அப்போது சகேயுவிற்கு இயேசு கூறியது போல, ‘உன் (ஆவிக்குரிய) வீட்டிற்கு இன்று இரட்சிப்பு வந்தது’ என்று நம்மிடமும் கூறுவார்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் பரலோக பிதாவே, இத்தனை நாளாக உம்மை காண வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தாலும், அதற்கான சரியான வழியை பின்பற்ற தவறினோம். ஆனாலும் நீர் எங்களை நோக்கி தேடி வந்து, எங்களுக்கு இரட்சிப்பை அளிக்கும்படியாக அழைக்கிறீர் என்பதால் உம்மை துதிக்கிறோம். நீர் தரும் இரட்சிப்பை பெற்று, உம்மோடு வாழ கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.