0 1 min 3 mths

இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா.19:10

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எதற்காக உலகிற்கு வந்தார் என்ற கேள்விக்கு, பதிலாக இந்த வசனத்தை எடுத்து கொள்ளலாம். இயேசு கிறிஸ்து உலகிற்கு வந்த நோக்கம், நம்மை ஆசீர்வதித்து பெரிய பணக்காரனாக மாற்றுவதற்கே என்று பலரும் எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் மனுஷகுமாரன் என்று தன்னையே அழைத்துக் கொண்ட இயேசு, மனிதன் இழந்து போனதை திரும்ப அளிப்பதற்காகவே உலகிற்கு வந்தார்.

அப்படியென்றால் மனிதன் எதை இழந்தான்? ஆதி மனிதனாகிய ஆதாம் பாவம் செய்த போது, தேவனோடு உள்ள உறவு, தேவ மகிமை, தெய்வீக ஞானம், தேவ சாயல் என்று பல காரியங்களை இழந்தான். ஆதாமின் பின்சந்ததியான நம்மால் கூட மனித ஞானத்தை பயன்படுத்தி மேற்கூறிய காரியங்களை திரும்ப பெற முடியாது.

மனிதன் பிசாசிடம் இழந்த போன காரியங்களை, மீட்கவே இயேசு உலகிற்கு வந்தார். நம் பாவத்தை முற்றிலுமாக கழுவி சுத்தம் செய்ய, சிலுவை மரணத்திற்கு இயேசு ஒப்புக் கொடுத்தார். இதன்மூலம் நாம் செய்ய வேண்டிய பிராயசித்த கிரியைகளை அவர் செய்து, நமக்கு இரட்சிப்பை அளித்தார்.

பண செலவோ, பொருட்செலவோ இல்லாமல் இந்த இரட்சிப்பு, நமக்கு இலவசமாக அளிக்கப்பட்டது. இதனால் இன்று இரட்சிப்பின் மேன்மை குறித்து நமக்கு தெரிவதில்லை. ஆனால் வேதத்தில் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பை, விலையேறப்பட்டது காண்கிறோம்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்வதன் மூலம் மண்ணுலக வாசிகளான நாம், பரலோக வாசிகளாக மாறுகிறோம். மாமிச சரீரத்தில் தவிக்கும் நம் ஆவிக்கு, மகிமையின் சரீரம் கிடைக்கிறது. இயேசுவின் வருகையில் சேர்க்கப்பட உள்ள நாம், அவரோடு சேர்ந்து யுகாயுகமாக அரசாள போகிறோம்.

இயேசுவோடு கூட மகிமையின் சிங்காசனத்தில் உட்காரும் தகுதியை பெற்றுள்ளோம்.
இதையெல்லாம் உணர்ந்தால், உலகில் நாம் படும் கஷ்டங்களும், நெருக்கடிகளும் ஒரு பெரிய விஷயமாக தெரியாது. முன் காலங்களில் வாழ்ந்த பரிசுத்தவான்கள், உலக காரியங்களை குப்பை என்று எண்ணி வாழ இதுவே காரணம்.

எனவே முற்பிதாவான ஆதாம் மூலம் இழந்த போன எல்லாவற்றை நமக்கு திரும்ப அளித்துள்ள இயேசுவின் அன்பினால், ஒவ்வொரு நாளும் நிரப்பப்படுவோம். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்த அந்த அன்பின் நேசரை நன்றியுள்ள இதயத்தோடு துதிப்போம். அவரது பிள்ளைகளாக வாழ்ந்து அவருக்காக, நம்மால் முடிந்த ஊழியங்களை செய்வோம்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, எங்களுக்கு அளித்த விலையேறப்பட்ட இரட்சிப்பிற்காக ஸ்தோத்திரம். அதை அறியாமல் உலகத்தின் மேன்மையையும், எங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்து வாழ்ந்த எங்கள் குறைகளை மன்னியும். தேவனே, நீர் எங்களுக்காக எல்லாவற்றையும் செய்தது போல, நாங்களும் உமக்காக ஊழியம் செய்ய வாஞ்சிக்கிறோம். எங்களை அதற்குரிய பாதைகளில் வழி நடத்தும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *