0 1 min 12 mths

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். லூக்கா:4.3

இந்த உலகத்தில் ஒரு மனிதன் அனுபவிக்கும் எல்லா கஷ்டங்களையும் அறிந்தவராக வாழ்ந்து, அவர்கள் சிக்கிக் கொண்டிருந்த பாவத்தின் பிடியில் மீட்கும்படி, இயேசு ஒரு மனித பிறவியாக அவதரித்தார். இதனால் ஒரு மனிதனுக்கு உண்டாகும் எல்லா கஷ்டங்களின் வழியாகவும் அவர் கடந்து சென்றார்.

புதிய ஏற்பாட்டின் 4 சுவிஷேசங்களையும் கவனித்து வாசித்தால், இயேசு கடந்து சென்ற எந்தொரு கஷ்டமான சூழ்நிலையிலும், தனது தெய்வீகமான வல்லமையைச் சொந்த லாபத்திற்காக அவர் பயன்படுத்தவில்லை என்பதை அறியலாம். இந்நிலையில் தனது ஊழியத்தைத் துவங்கும் முன் 40 நாட்கள் உபவாசம் இருந்த போது, அவருக்கு கடும்பசி உண்டானது.

அந்த நேரத்தில் அவரைச் சோதிக்கும்படி, பிசாசு வருகிறான். பசியில் வாடிப் போன இயேசுவிற்கு உதவும் வகையில், அங்கிருக்கும் கல்லை அப்பமாக மாற்றி, சாப்பிடும்படி ஆலோசனைக் கூறுகிறான். அந்தச் சூழ்நிலைக்கு தகுந்த ஆலோசனையாக தெரிந்தாலும், அதற்கு இயேசு மறுத்துவிட்டார். ஏனெனில் இது தெய்வீகத் தன்மையைத் தவறாக பயன்படுத்துவது போலாகி, அவர் இந்த உலகிற்கு வந்த நோக்கத்திற்கு விரோதமாகவும் அமையும்.

இதேபோல இன்று தேவ ஊழியங்களில் இருக்கும் பல ஊழியர்களையும் விசுவாசிகளையும், பிசாசு அணுகுகிறான். நமக்கு ஏற்படும் பணத் தேவைகளை முன்னுறுத்தி, நம்மை தேவ சித்தமில்லாத பாதையில் செல்லும்படி ஆலோசனைகளை வழங்குகிறான்.

இதனால் ஆதியில் தேவனை மட்டுமே நம்பி, வைராக்கியமாக ஊழியங்களைச் செய்த எவ்வளவோ தேவ ஊழியர்கள், இன்று பணத்திற்கும் பொருட்களுக்கும் ஆசைப்பட்டு பெயரைக் கெடுத்துள்ளார்கள். பணஆசை, பொருளாசை ஆகியவற்றின் பலனாக தேவனை விட்டு பின்வாங்கி சென்றுவிட்டார்கள்.

இன்னும் சில தேவ பிள்ளைகளின் மனதைக் கெடுக்கும் வகையில், எதிர்பாலரிடம் இருந்து கிடைக்கும் தவறான அன்பை முன்னுறுத்தி, பிசாசு போராடுகிறான். துவக்கத்தில் சாதாரணமாக துவங்கும் இந்த பழக்கம், பிற்காலத்தில் முழு ஆவிக்குரிய வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.

இதில் இளம் தலைமுறையினர் மட்டும் இரையாகிறார்கள் என்றில்லை. குடும்பமாக ஊழியம் செய்யும் பலரையும், இது போன்ற சிற்றின்பங்களைக் காட்டி பிசாசு எளிதாக வீழ்த்தி விடுகிறான். இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்படாவிட்டால், நமது பெயரையும் தேவனுடைய நாமத்தையும் கெடுத்து கொள்ள நேரிடும்.

இன்று தேவாலயம் கட்டுவதற்கும் ஊழியங்களின் தேவைகளுக்கும் உதவுகிறோம் என்ற போர்வையில் வரும் பலரும், ஒரு கட்டத்தில் ஊழியர்களை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் தேவனுக்காக பணியாற்ற வேண்டிய பல ஊழியர்களும் விசுவாசிகளும், மனிதர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது தேவையை முன்னுறுத்தி மட்டுமே, பிசாசு நம்மை அணுகுகிறான். நமக்கு இருக்கும் தேவைகளுக்கு இடையில், அந்த யோசனை மிக சரியானதாக நமக்கு தெரியும். எனவே எந்தத் தேவைகளின் மத்தியிலும், தேவ சித்தமில்லாத காரியங்கள் மற்றும் ஆட்கள் மூலம் கிடைக்கும் லாபகரமான காரியங்களுக்கு நாம் ஒத்துக் கொள்ளக் கூடாது.

நமது வாழ்க்கையின் தேவைகளின் போது, மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் எல்லா யோசனைகளும் போக்குவழிகளும், தேவனிடம் இருந்து மட்டுமே அருளப்படுபவை என்ற தவறான சிந்தனையை மாற்றிக் கொள்வோம். உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்க வந்த இயேசுவிற்கே தேவையை முன்நிறுத்தி ஆலோசனைக் கூறிய பிசாசு, நம்மிடம் வராமல் இருப்பானா? எனவே தேவைகளின் போது, விழிப்புடன் செயல்படுவோம்.

பிசாசு கூறிய ஆலோசனைக்கு இயேசு செவிச் சாய்த்திருந்தால், இன்று பிதாவின் வலதுபாரிசத்தில் அமரும் தகுதியை அவர் பெற்றிருக்க முடியாது. அதுபோல நம் வாழ்க்கையில் மேன்மையான ஆசீர்வாதங்களை அடையவிடாமல் தடுத்து நிறுத்த, இது போன்ற சந்தர்ப்பங்களைப் பிசாசு பயன்படுத்துவான் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, இந்த உலகில் நாங்கள் நடக்க வேண்டிய மார்க்கத்தைத் தெளிவாக நீர் வாழ்ந்து காட்டியிருப்பதால், உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் தேவைகளின் மத்தியில், உம்மை மட்டுமே சார்ந்து, நன்மையான ஈவுகளை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ள உதவி செய்யும். எங்களை விழப் பண்ணும், எல்லா பிசாசின் ஆலோசனைகளையும் தரம் பிரித்து அறிய தேவ ஞானத்தை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *