லூக்கா.8:39

இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார்.” லூக்கா.8:39

இயேசுவின் ஊழியத்தில் அநேகர் பயனடைந்து வந்த நிலையில், சிலரை தம்மை பின்பற்றி வரும்படி அழைத்தார். ஆனால் சிலர் அவரை பின்பற்றி வருவதாக கூறிய போதும், அவர்களை அவர் அனுமதிக்கவில்லை. இரண்டாவது வகையில் சேர்ந்தவர் தான் இந்த வசனத்தில் வரும் மனிதன்.கதரேனருடைய தேசத்திற்கு புயல் காற்றையும், கடல் கொந்தளிப்பையும் அடக்கினவராக இயேசு வந்த போது, பார்க்கும் முதல் மனிதன் தான் இவர். லேகியோன் என்று தனது பேரை கூறும் இவனுக்குள் அநேகம் பிசாசுகள் இருந்தபடியால் அவனால் வீட்டில் தங்க முடியவில்லை, ஆடை அணிய முடியவில்லை. யாராலும், எந்த கட்டுகளினாலும் இவனை அடக்க முடியவில்லை.

இந்த நிலையில் இவனை சந்திக்கும் இயேசு, விடுதலையை கொடுக்கிறார். இதில் மகிழ்ச்சியடையாத அந்த ஊர் மக்கள், இயேசுவை கண்டு பயப்பட்டு தங்களை விட்டு செல்லும்படி கூறுகிறார்கள். அப்போது தனக்கு பாதுகாப்பு கிறிஸ்துவினிடத்தில் மட்டுமே என்று அவரை பின்பற்ற தயாராகும் அந்த மனிதனை பார்த்து இயேசு, “நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி ”என்கிறார்.

இயேசு ஏன் அப்படி கூறுகிறார்? இயேசுவினால் அவனுக்கு செய்யப்பட்ட இரட்சிப்பு, விடுதலை, மீட்பு ஆகியவை குறித்து அந்த மனிதன் புரிந்து கொண்டான். ஆனால் அந்த ஊர் மக்களோ, அவன் வீட்டாரோ புரிந்து கொள்ளவில்லை. இதனால் தான் இயேசுவை உடனடியாக தங்கள் ஊரிலிருந்து வெளியேறும்படி கூறுகிறார்கள்.

பல நேரங்களில் தேவன் நம்மை குறிப்பிட்ட மனிதர், சந்தர்ப்பம், இடங்கள், சோதனைகள் ஆகியவை வழியாக கடந்து சொல்ல அனுமதிக்கும் போது, அதை பாதுகாப்பற்ற சூழ்நிலை என்று முடிவு செய்து விடுகிறோம்.

ஆனால் நம்மை அங்கே வைத்திருக்கும் நோக்கம் என்ன என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். அங்கே நமது சாட்சியின் ஜீவியம் பாதுகாக்கப்பட வேண்டும். நமக்கு தேவன் செய்த நன்மைகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். நம்மை பாவத்தில் இருந்து இரட்சித்த தேவன் நம்முள் அளித்திருக்கும் தேவ சமாதானம், சந்தோஷத்தை எடுத்துரைக்க வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அந்த சூழ்நிலைகளை – பிசாசின் போராட்டம், மாம்சீகமான மனிதர் கூட்டம், பாவிகள் என குற்றப்படுத்திக் கொண்டிருந்தால், நம்மை கொண்டு தேவன் செய்ய நினைக்கும் காரியங்கள் எப்படி நிறைவேறும்?

நமது தியானத்திற்கான வசனத்திற்கு அடுத்த வசனத்தை பாருங்கள். லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனின் சாட்சியை கேட்டு, அந்த ஊர் மக்கள் பிற்பாடு இயேசுவின் வருகைக்காக காத்திருந்தார்களாம். இதை போல நம் வாழ்க்கை சூழ்நிலைகளிலும் தேவனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்.

எனவே தேவன் நம்மை நடத்தும் சோதனைகள், வேதனைகள், கஷ்டங்கள், நெருக்கங்கள் மிகுந்த பாதைகளுக்கு, கிறிஸ்துவை மறுதலிக்காமல் நம்மையே ஒப்புக் கொடுப்போம். கர்த்தர் தாமே நமக்கு உதவிச் செய்வாராக.

ஜெபம்:

அன்புள்ள இயேசுவே, எங்களோடு பேசிய நல்ல வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். நீர் எங்கள் வாழ்க்கையில் செய்கிற எல்லா காரியங்களுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அதன் மூலமாக உமது நாமத்தை மகிமைப்படுத்தவே விரும்புகிறீர். எனவே அந்த சிந்தையோடு, சூழ்நிலைகளை குற்றப்படுத்தாமல், எங்களை இரட்சித்த தேவனின் நாமத்தை உயர்த்த, மகிமைப்படுத்த கிருபை தாரும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறோம். நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel