லூக்கா.8:46

அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். லூக்கா.8:46

12 ஆண்டுகளாக பெரும்பாடு அனுபவித்து வந்த ஒரு பெண்ணிற்கு, இயேசு சுகத்தை அளித்த பிறகு இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இயேசு இந்த பெண்ணை சந்திக்கவோ, குணப்படுத்தவோ எண்ணம் கொண்டவராக அந்த வழியாக சென்றதாக இந்த சம்பவத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த பெண்ணும், தனது விடுதலை குறித்து மற்றவர்களுக்கு அறிவிக்கவும் விரும்பவில்லை என்று பார்க்கிறோம்.

அந்த பெண் விசுவாசத்தினால் இயேசுவினிடம் இருந்து விடுதலையை பெற்று கொள்கிறாள். ஆனால் அதை எல்லாருக்கும் முன்பாக அறிவிக்காமல், ஏன் இயேசுவிற்கு கூட தெரிவிக்காமல் சென்றுவிடலாம் என்று முயற்சி செய்கிறாள். ஆனால் சகலத்தையும் அறிந்த இயேசு அவளையும், அவளின் எண்ணத்தையும் அறிந்து அதை வெளிப்படையாக அறிவிக்க செய்கிறார்.

இந்த சம்பவத்தில் இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும். 1.தேவன் தனது மகிமையும், புகழ்ச்சியையும் யாருக்கும் விட்டு கொடுப்பது இல்லை. 2. அதை மறைந்திருக்கவும் அனுமதிப்பது இல்லை.

பாருங்கள், அவளுக்கு இருந்த தேவையை தேவனிடமிருந்து பெற்று கொள்ள விசுவாசம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் அவளது விசுவாசத்தை பார்த்து, தேவன் தனக்கு அளித்த நன்மையை வெளியே கூற தயக்கம், பயம், வெட்கம் என ஒரு பெரிய பட்டியலே அவளுக்குள் இருந்தது.

இதேபோல தேவன் நம் வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்கிறார். சில நேரங்களில் நமது ஜெபத்தையோ, மற்றவர்களின் ஜெபத்தையோ கேட்டும், விசுவாசத்தை பார்த்தும் அப்படி செய்கிறார்.

ஆனால் அதற்கு தகுந்த துதியையும், ஸ்தோத்திரத்தையும் அவருக்கு செலுத்துகிறாமா? நம் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை குறித்து மற்றவர்களுக்கு சாட்சியாக அறிவிக்கிறோமா? ஏனெனில் நாம் கடந்து சென்ற அதே பாதையில் செல்லும் பலருக்கும், நமது சாட்சி ஆவிக்குரிய ஜீவனை அளிக்கும் அல்லவா?

நாம் தியான வசனத்தின் சம்பவத்தில், அந்த பெண்ணை போல, இயேசுவும் அதை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால், நிச்சயம் அவளுக்கு செய்யப்பட்ட அற்புதம் குறித்து அந்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் தெரிந்து இருக்காது. இன்று வேதம் வாசிக்கும் நமக்கும் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு இது குறித்து வெளியே கூறும் வரை, இயேசுவையும், அந்த பெண்ணையும் தவிர, மற்ற யாருக்கும் அந்த அற்புதம் குறித்து தெரியவில்லை என்று பார்க்கிறோம்.

எனவே தேவன் நம் வாழ்க்கையில் செய்யும் நன்மைகள், அற்புதங்கள், அதிசயங்களை குறித்தும், தேவன் நம்மை நடத்தின பாதைகளில் நாம் கற்றுக் கொண்ட காரியங்களைக் குறித்தும் மற்றவர்களுக்கு அறிவிக்க தயங்க கூடாது. ஏனெனில் இதுவும் தேவனை மகிமைப்படுத்தும் ஒரு வழியாகும். அதற்கு வெட்கப்படவோ, பெருமை வந்துவிடும் என்று யோசிக்கவே தேவையில்லை. இன்று முதல் அதற்காக நம்மையே தேவ கரங்களில் ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்:

எங்களை நேசிக்கும் நல்ல தெய்வமே, தந்த ஆலோசனைக்காக ஸ்தோத்திரம். ஆண்டவரே, எங்கள் வாழ்க்கையில் நீர் செய்த அற்புதங்கள், அதிசயங்கள், நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு சொல்லாமல் மறைத்து வைத்திருந்தால் எங்களை மன்னியும். மற்றவர்களின் வாழ்க்கையில் விசுவாசத்தையும், நம்பிக்கையும், தேவ அன்பையும் ஏற்படுத்தும் வகையில் எங்களில் செய்யப்பட்ட தேவ கிரியைகளை அறிவிக்க இன்று முதல் எங்களை ஒப்புக் கொடுக்கிறோம். நீரே எங்களுக்கு இதற்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.

Spread the Gospel