
…சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. லூக்கா: 18.16
இயேசுவின் ஊழிய நாட்களில், சிறுப் பிள்ளைகளின் மீது அவர் அதிக அன்பு கொண்டவராக இருந்தார். இதனால் இயேசுவின் சீஷர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்த போதும், சிறு பிள்ளையை முன்நிறுத்தியே அதற்கான தீர்வை அளிக்கிறார் (லூக்கா:9.46-48).
ஏனெனில் மனிதனின் சிறு வயதில் தான், எதை பற்றிய கவலையும் இல்லாமல் வாழ முடிகிறது. குழந்தைகளின் எல்லா செயல்களிலும் ஒரு அறியாமை மறைந்திருக்கும். இதனால் சில நேரங்களில் பெரியவர்கள் முட்டாள்தனமான காரியங்களை கூறும் போது, இதென்ன சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறீர்களே? என்று மற்றவர்கள் கேட்பதையும், பார்த்து இருக்கிறோம்.
இந்நிலையில் நமது தியான வசனத்தில், பரலோகத்திற்கு செல்பவர்களை, சிறு பிள்ளைகளோடு இயேசு ஒப்பிடுவதை காண முடிகிறது. இந்த வசனத்தை வைத்து பேசும் பலரும், சிறு பிள்ளைகளுக்கு பரலோகம் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக பிரசங்கம் செய்கிறார்கள்.
ஆனால் இந்த வசனத்தை நாம் கவனித்து வாசிக்கும் போது, தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது அதாவது சிறு பிள்ளைகளை போல இருப்பவர்களுடையது என்று இயேசு கூறியுள்ளாரே தவிர, சிறு பிள்ளைகளுடையது என்று கூறவில்லை என்பதை அறியலாம். எனவே நாமும் சிறு பிள்ளைப் போல மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இதை கூறும் போது, பெரியவர்களாக வளர்ந்துவிட்ட நம்மால் எப்படி, திரும்ப சிறு பிள்ளைகளாக மாற முடியும்? என்ற கேள்வி நமக்குள் எழுந்து வரலாம். அப்படி மாறுவதற்கு, சிறு பிள்ளைகளின் பண்புகளை நாம் பெற்றால் போதுமானது.
எடுத்துக்காட்டாக, சிறு பிள்ளைகளுக்கு என்ன தான் கோபம் வந்தாலும், ஓரிரு வினாடிகளில் அதை மறந்து விடுவார்கள். யார் மீதும் தொடர்ந்து பகை, விரோதம், கசப்பு, வஞ்சனை போன்றவற்றை வைத்து கொண்டிருக்கமாட்டார்கள். மற்றவர்களுடன் எளிதில் பேசி பழகி, தாங்கள் அறிந்த காரியங்களை எல்லாரோடும் பகிர்ந்து கொள்வார்கள்.
மேற்கூறிய காரியங்களை நமது வாழ்க்கையில், செயலில் கொண்டு வரும் போது, நம் பாவங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். ஆனால் வளர்ந்துவிட்ட ஒருவர், குழந்தையை போல இருப்பதை இந்த உலகம் ஏற்காது. நம்மாலும் அப்படி இருக்க முடியாது.
அதற்கு ஒரே வழியாக இயேசு மட்டுமே உள்ளார். அவருக்குள் மேற்கூறிய குழந்தைகளின் பண்புகள் இருந்ததை வேதம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, இயேசுவின் ஊழிய நாட்களில் எத்தனையோ பேர், அவரை கொலை செய்ய பார்த்தார்கள். சிலர் அவரை ஞானத்தில் குறைந்தவர் என்று மக்களுக்கு வெளிப்படுத்த நினைத்தனர். ஆனால் அவர்களை இயேசு, எந்த சூழ்நிலையிலும் பழிவாங்கவில்லை.
பெரியவர்களுக்கு குழந்தைகள் கீழ்படிவது போல, பிதாவான தேவனுக்கு இயேசு எல்லாவற்றிலும் கீழ்படிந்தவராக இருந்தார். எனவே நாம் இயேசுவை போல மாற ஆசைப்பட்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது, நிச்சயம் குழந்தைகளை போன்ற மனம் நமக்குள் உண்டாகும். அப்போது அவரை போல, நாமும் பரலோகத்திற்கு செல்லவும் முடியும்.
ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பான தெய்வமே, குழந்தைகளை முன்நிறுத்தி எங்களோடு பேசிய உமது வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். உம்மைப் போல மாற நாங்கள் வாஞ்சிக்கிறோம். உம்மை போல மாறி, நீர் இருக்கும் பரலோக ராஜ்ஜியத்திற்கு வந்து சேர உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.