
அவர் அங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். லூக்கா:24.6
உலக மக்களின் பாவங்களுக்கான ஒரே தீர்வாக, தனது முழு இரத்தத்தையும் சிந்தின இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். இதனால் அவ்வளவு நாட்களாக அவரைப் பின்பற்றிய சீஷர்களுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு வெறுமையான நிலை உருவானது.
இதற்கு பிறகு நாம் என்ன செய்வது? இனி யார் நம்மை வழிநடத்துவார்கள்? அவர் பேசிய வார்த்தைகள் உண்மையானதா? அவர் தான் மேசியாவா? என்று பல சந்தேகங்கள் மனதைக் குடைந்து கொண்டிருக்க, கல்லறைக்கு சென்றவர்களுக்கு, கிடைத்த செய்தி மேலும் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்தது.
கடந்த மூன்று நாட்களாக, மரித்த இயேசுவின் உடல் கல்லறையில் பத்திரமாக இருப்பதாக நினைத்து சென்றவர்களுக்கு, கல்லறை திறக்கப்பட்டு அவர் இன்று உயிர்ந்தெழுந்ததாக கேட்ட செய்தியை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக, கல்லறைக்குச் சென்று தாங்கள் கேட்ட காரியங்களின் உண்மை நிலையைச் சோதித்ததாக வேதம் குறிப்பிடுகிறது.
அதுவரை இயேசுவை ஒரு மனித பிறவியாக மட்டும் கண்ட சீஷர்களுக்கு, அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்த தருணம் அது. ஈஸ்டர் தினமான இன்று நாமும், இயேசுவின் தெய்வீகத் தன்மையை நமக்குள் உணர வேண்டியுள்ளது.
நமது சரீரத்திற்குரிய வளர்ச்சியையும் நடமாட்டத்தையும் வெளியோட்டமாக எல்லா மனிதர்களாலும் அறிய முடியும். ஆனால் நமது ஆவிக்குரிய மனிதனுக்கு ஒரு தெய்வீகத் தன்மை இருக்கிறது. நாம் இரட்சிக்கப்பட்டு, பாவங்களை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் எடுத்த போது, பாவங்களுக்கு மரித்து, நீதிக்கு பிழைத்தோம் அல்லது உயிர்ந்தெழுந்தோம் என்று வேதம் கூறுகிறது.
எனவே இயேசு மரணத்தில் இருந்து உயிர்ந்தெழுந்தது போல, நாமும் பாவத்தின் மரணப் பிடியில் இருந்து ஞானஸ்நானம் மூலம் உயிர்ந்தெழுகிறோம். எனவே அதுவரை எல்லாருக்கும் சாதாரண மனிதனாக தெரிந்த நமக்குள், அதன்பிறகு ஒரு தெய்வீகத் தன்மை வெளிப்பட வேண்டும்.
உயிர்ந்தெழுந்த இயேசுவை, கல்லறையில் தேடியவர்களுக்கான பதிலை தான் தியான வசனமாக நாம் வாசிக்கிறோம். அதேபோல நாம் பாவங்களுக்கு மரித்த பிறகும், வழக்கம் போல நம்மை மரித்தவர்கள் இடையில் தேடும் உலக மனிதர்களுக்கு, நமக்குள் உண்டாகி இருக்கும் தெய்வீகத் தன்மை வெளிப்பட வேண்டும்.
இந்த ஈஸ்டர் நாளில் நமக்குள், இயேசுவின் உயிர்ந்தெழுந்த வல்லமை உள்ளதா? இரட்சிக்கப்பட்ட நமக்குள், இயேசுவின் தெய்வீகத் தன்மை வெளிப்படுகிறதா? என்று ஆராய்ந்து பார்ப்போம். இரட்சிக்கப்பட்ட பிறகும், நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களுக்கு, நம்மில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை எனில், இயேசுவின் உயிர்ந்தெழுந்த தெய்வீக வல்லமை நமக்குள் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.
அப்படியில்லாத பட்சத்தில், இன்றே அந்த உயிர்ந்தெழுந்த வல்லமையை தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வோம். ஏற்கனவே நமக்குள் இருந்தால், அதை இன்று புதுப்பித்துக் கொள்வோம். ஆவிக்குரிய மரித்த அனுபவங்களுக்கு இடையே நம்மை தேடுபவர்களுக்கு, இனியும் நாம் தென்படக் கூடாது.
ஏனெனில் நாம் சேவிக்கும் இயேசு, மரணத்தை ஜெயித்து உயிர்ந்தெழுந்தவர். அவரைப் போல நாமும் உயிர்ந்தெழுந்து, பாவத்தையும், மரணத்தையும், உலகத்தையும் ஜெயம் பெற்றவர்களாக வாழ்வோம்.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் பரலோக பிதாவே, இயேசுவின் உயிர்ந்தெழுந்த வல்லமையினால், இன்று எங்களை நிரப்பும். எங்கள் பாவத்தால் மரித்து போயிருக்கும் எல்லா ஆவிக்குரிய அனுபவங்களில் இருந்தும் எங்களை உயிர்பித்து, ஜெயம் கொண்டவர்களாக மாற்றும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.