
…சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். லூக்கா: 5.6
இயேசுவின் ஊழிய நாட்களின் துவக்கத்தில், கெனேசரேத்துக் கடல் கரையில் அவரை நெருங்கி வந்த மக்களிடம், தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்து பேச, அங்கே நின்ற சீமோன் பேதுருவின் படகை இயேசு பயன்படுத்திக் கொள்கிறார். தமது பிரசங்கத்தை முடித்த பிறகு, பேதுருவின் உதவிக்கு வெறுமனே வாயில் நன்றி தெரிவித்துவிட்டு செல்ல விரும்பாத இயேசு, அவர்களின் துக்கத்தை நீக்க விரும்புகிறார்.
அதற்காக, இராமுழுவதும் வலைவீசி ஒரு மீன் கூட அகப்படாமல் மிகவும் சோகத்துடன் வலைகளை கழுவிக் கொண்டிருந்த பேதுருவிடம், ஆழத்தில் வலைவீச கூறுகிறார் இயேசு.
இங்கே உள்ள பேதுருவும் அவரது கூட்டாளிகளும் மீன் பிடிப்பதில் புதியவர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மீன்பிடிப்புத் தொழில் மட்டுமின்றி, மேற்கூறிய கடலில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழம் இருக்கும் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்.
இந்நிலையில் அவர்களின் அனுபவத்திற்கே சவாலாக அமையும் வகையில், இயேசுவின் வார்த்தைகள் அமைகின்றன. ஆனாலும் பேதுருவோ, அவரது கூட்டாளிகளோ, இயேசுவின் மீது கோபப்படவில்லை.
மாறாக, இராமுழுவதும் எங்களின் சொந்த பலத்தை பயன்படுத்தி உழைத்து, எங்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்ற தங்களின் இயலாமையை அவரிடம் வெளிப்படையாக தெரிவித்தனர். மேலும், இப்போது நீங்கள் (இயேசு) கூறிய வார்த்தைக்கு மரியாதை அளித்து, நீங்கள் கூறுவது போலவே ஆழத்தில் வலை வீசுகிறோம் என்கிறார் பேதுரு.
அனுபவமிக்க பேதுருவிற்கு, தற்போதைய நிலை எவ்வளவு நம்பிக்கையற்றது என்பது நன்றாக தெரியும். ஆனால் அதையும் தாண்டி, இயேசுவின் மீதான நம்பிக்கை, விசுவாசம் ஆகியவை பேதுருவிற்குள் கிரியை செய்கிறது. இந்த விசுவாசத்தை தான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
நமது வாழ்க்கையில் சில நேரங்களில் தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் காண, நமது அனுபவமிக்க மூளையை சற்று விலக்கி வைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் தேவன் செய்யும் காரியங்களை, நமது மனித மூளையில் ஆராய்ந்து அறிய முடியாது. அவர் கூறும் காரியத்திற்கு முற்றிலும் நம்மையே ஒப்புக் கொடுத்து விசுவாசிப்பது தான் சிறந்தது.
அப்போது, நடக்கவே வாய்ப்பு இல்லை என்று நமக்கு தோன்றும் பல காரியங்களையும், தேவன் நம் கண்களுக்கு முன்பாக நடத்தி காட்டுவார். நமது சொந்த பலத்தையும், ஞானத்தையும் பயன்படுத்தி செய்து கிடைக்கும் வெற்றிகளுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தேவனுடைய அதிசயமான கிரியையின் மூலம் கிடைக்கும் வெற்றிகளுக்கு எல்லையே கிடையாது.
எனவே நம் வாழ்க்கையில் ஏற்படும் சரீரத் தேவைகளோ, ஆவிக்குரிய தேவைகளோ எதுவாக இருந்தாலும், தேவனிடம் நமது உண்மை நிலையை அப்படியே கூறி, அவரிடம் நம்முடைய இயலாமையை ஒப்புக் கொடுப்போம்.
நமக்கு இருக்கும் சொந்த ஞானத்தையும், புத்தியையும் பயன்படுத்தி, இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று தேவனுக்கு அறிவுரை கொடுக்காமல், அவரது வார்த்தையின் மேல் நம்பிக்கை வைப்போம். அப்போது பேதுருவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் கிடைத்தது போன்ற ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நம் வாழ்க்கையில் தேவன் அளிப்பார்.
ஜெபம்:
எங்களை அளவில்லாமல் நேசிக்கும் தெய்வமே, நீர் பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். எங்கள் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் சொந்த புத்தியையும், ஞானத்தையும், அனுபவத்தையும் பயன்படுத்தி தோல்விகளைச் சந்தித்து சோர்ந்து போனோம். இப்போதும் உமது வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து, நாங்கள் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாக, ஆச்சரியமான ஆசீர்வாதங்களால் நீர் நிரப்புகிறீர்கள் என்று அறிந்தோம். அதற்காக எங்களையே உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமென்.