
அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி என்றார். லூக்கா:9.60
இந்த உலகில் இயேசுவால் செய்யப்பட்ட அற்புதங்களை கண்டு, பலரும் அவரை பின்பற்ற விரும்பினர். பலருக்கு தம்மை பின்பற்றி வர இயேசுவிடம் இருந்து அழைப்பு கிடைத்தது. நம் தியான வசனத்தில் வரும் நபருக்கு, இயேசுவின் அழைப்பு கிடைத்தது.
ஆனால் மரித்து போன தகப்பனை விட்டுவிட்டு, இயேசுவின் அழைப்பை உடனே அவரால் ஏற்க முடியவில்லை. தனது குடும்ப கடமைகளை முடித்துவிட்டு வர இயேசுவிடம் அனுமதி கேட்கிறார். அதற்கான இயேசுவின் பதிலை குறித்தே இன்று தியானிக்க உள்ளோம்.
இயேசு கூறிய பதிலில் கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல, இன்று வேதம் வாசிக்கும் பலரும் குழப்பம் ஏற்படுகிறது. மரித்தோரை மரித்தோர் எப்படி அடக்கம் செய்ய முடியும்? என்பதே அந்த குழப்பத்திற்கான காரணம்.
இங்கே இயேசு இரு வேறு காரியங்களை சேர்த்து, ஒரே வரியில் பதிலாக கூறுகிறார். தியான வசனத்தில் முதல் மரித்தோர் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்தோரை குறிக்கிறது. இரண்டாவது மரித்தோர் என்பது சரீர மரணத்தை குறிக்கிறது. எனவே ஆவிக்குரிய வாழ்க்கையில் மரித்தோர், சரீரத்தில் மரித்தோரை அடக்கம் செய்யட்டும் என்பதே இயேசு கூறியதன் பொருளாகும்.
அந்த நபரை போல, இயேசுவின் அழைப்பை பெற்ற நாம் இன்று அவரை எப்படி பின்பற்றுகிறோம்? நம் வாழ்க்கையில் இயேசுவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சில சூழ்நிலைகளில் நம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் நாம் பகைவர்களாக மாற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதை சந்தோஷத்தோடு நாம் ஏற்றுக் கொள்ளும் போது, தேவன் சகலத்தையும் மகிமையாக மாற்றி தருவார்.
இயேசுவால் அழைக்கப்பட்ட அந்த நபருக்கு, அழைப்போடு கூட பணியும் அளிக்கப்பட்டது. அழைப்பை ஏற்று இயேசுவை பின்பற்றினால் மட்டும் போதாது. தேவனுடைய ராஜ்ஜியத்தை குறித்து பிரசங்கிக்கவும் வேண்டும்.
அதாவது நாம் இயேசுவோடு ஐக்கியம் பாராட்டினால் மட்டும் போதாது. இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் (சுவிசேஷம் அறிவித்தல்) வேண்டும். மேற்கூறிய இரண்டையும் செய்தால் மட்டுமே, நாம் முழுமையாக இயேசுவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக அமையும்.
எனவே நமக்கு அருளப்பட்ட இயேசுவின் அழைப்பை இன்றே புதுபித்து கொள்வோம். இயேசுவின் அழைப்பை ஏற்று, தடையாக நிற்கிற எல்லா காரியங்களையும், நபர்களையும் விட்டு முழு மனதோடு, அவரை பின்பற்றுவோம். இயேசுவை குறித்து அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து, அவரது சீஷர்களாக மாறுவோமாக.
ஜெபம்:
எங்களை நேசிக்கும் அன்புள்ள ஆண்டவரே, நீர் எங்களை அழைத்த அழைப்பின் மேன்மையை அறிந்து கொள்ள செய்ததற்காக ஸ்தோத்திரம். உமது அழைப்பை ஏற்று, சுவிசேஷம் அறிவித்து நீர் விரும்பும் சீஷனாக வாழ உதவி செய்யும். நீர் வரும் போது எங்களையும் மகிமையில் சேர்த்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.