
தாவீதின் வாழ்க்கையில் கழுதை:
தாவீதின் வாழ்க்கையில் பல இடங்களில் கழுதை நுழைவதை காண முடிகிறது. அதில் ஒரு சந்தர்ப்பத்தில் சவுலுக்கு தேவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி பிடிக்கும் போது, அதிலிருந்து தப்ப தாவீது அழைப்பிக்கப்படுகிறார். இந்த அழைப்பை ஏற்று சவுலிடம் வரும் போது தாவீது கழுதையின் மீது தன் தந்தை அளிக்கும் பொருட்களை எடுத்து வருகிறான்.
1 சாமுவேல்.16.2 வசனத்தில் வாசிக்கும் போது, அங்கு கழுதையின் மீது, அப்பம், திராட்சை ரசம், ஆட்டுக்குட்டி ஆகியவற்றை ஈசாய் கொடுத்து அனுப்புவதை காணலாம்.
என்ன தான் தன் மகனாகிய தாவீது, இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டாலும், தற்போதைய ராஜாவாக இருக்கும் சவுலுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தாவீதின் தந்தையாகிய ஈசாய் அளிப்பதை நாம் இங்கே காண முடிகிறது.
இதேபோல நாம் எவ்வளவு தான் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்தாலும், நம்மை தேவனிடத்திற்கு வழி நடத்தியவர்களை நாம் மறந்து போகக் கூடாது. அவர்கள் ஒரு வேளை தேவனிடமிருந்து விலகி சென்றிருக்கலாம். அதற்காக அவர்களை குற்றப்படுத்தி, மற்றவர்களிடம் இழிவாக பேசாமல், பின்மாற்றத்தில் இருந்து அவர்களை தேவன் மீட்கும்படி ஜெபிக்க வேண்டும்.
சவுலை சந்திக்க செல்லும், தாவீது கொண்டு வந்த ஒவ்வொரு பொருட்களுக்கும், ஆவிக்குரிய அர்த்தங்கள் உண்டு. அப்பம் என்பது வேத வசனத்தையும், திரட்சை ரசம் என்பது பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும் குறிக்கிறது. வெள்ளாட்டு குட்டி பலியிட பயன்படும் மிருகம். எனவே இதை தாழ்மைக்கு ஒப்பிடலாம்.
சவுல் போன்ற பொல்லாத ஆவி பிடித்த ஒரு மனிதனை சந்திக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்றும் தாவீதிற்கு கட்டாயம் தேவை. கர்த்தராகிய இயேசுவை சோதிக்க வந்த பிசாசை, வேத வசனத்தை கொண்டே இயேசு ஜெயித்தார். நமக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய ஆயுதங்களில் வேத வசனம், எதிரியை தாக்கும் ‘பட்டயம்’ என்று வேதத்தில் காண்கிறோம்.
அடுத்தப்படியாக திராட்சை ரசம் என்ற நம்மை பெலப்படுத்துகிற பரிசுத்தாவியின் வல்லமை இருந்தால் மட்டுமே பிசாசின் வல்லமைகளோடு எதிர்த்து நிற்க முடியும். ஆவிக்குரிய போராட்டங்களில் சொந்த பலத்தையோ, அனுபவத்தையோ கொண்டு நம்மால் எதுவும் செய்ய முடியாது.
அதே வேளையில் நாம் ஏதோ சாதித்துவிட்டோம் என்ற பெருமையும் நமக்குள் ஏற்படாதவாறு கர்த்தருக்குள் தாழ்மையுடன் இருக்க பழகி கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த உலகில் இருந்த போது, இயேசுவும் தாழ்மையாகவே நடந்து கொண்டார்.
இந்நிலையில் நமக்குள் ஆவிக்குரிய பெருமை ஏற்பட்டால், தேவன் நமக்கு எதிர்த்து நிற்க இதுவே காரணமாக அமைந்துவிடலாம். விசுவாச வாழ்க்கையில் பல ஆண்டுகளை கடந்த உடன், பலருக்கும் பிறரை சாதாரணமாக நினைக்க தோன்றுகிறது. மேலும் அவர்களை மதிக்கவும் மறந்துவிடுகிறார்கள்.
தேவனால் எந்த அளவிற்கு நாம் உயர்த்தப்படுகிறோமோ, அந்த அளவிற்கு நாம் தாழ்ந்தவர்களாக இருந்திருக்கிறோம் என்பதை அவ்வப்போது நினைத்து பார்க்க வேண்டும். அப்போது ஆவிக்குரிய பெருமை நமக்குள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
எனவே நமது கழுதையாகிய மனதின் மீது பயணம் செய்யும் போது, அதை எதிர்த்து வரும் பிசாசின் வல்லமைகளை மேற்கொள்ள, வேத வசனமாகிய பட்டயத்தையும், பரிசுத்தாவியின் பெலத்தையும், தாழ்மையையும் எடுத்துச் செல்லுவோம். அப்போது சவுலை போன்ற பொல்லாத ஆவி பிடித்தவர்களை சந்திக்க வேண்டிய நிலை வந்தாலும், அவர்களால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது.
(பாகம் – 6 தொடரும்)