0 1 min 11 mths

அகிதோப்பேலும் கழுதையும்:

தாவீதின் முக்கிய ஆலோசகராக இருந்தவர் அகிதோப்பேல். அவர் கூறுவது அனைத்தும் தேவனுடைய ஆலோசனையாக எண்ணப்பட்டது என்று 2 சாமுவேல்:16.23ல் வாசிக்கிறோம். ஆனாலும் தாவீதிற்கு எதிராக துரோகம் செய்து, அப்சலோமின் ஆலோசகராக மாறினதால் அந்த மதிப்பை இழக்கிறார். இந்த அகிதோப்பேலின் வாழ்க்கையின் இறுதியில் ஒரு கழுதை எட்டி பார்ப்பதை காணலாம்.

தேவ மனிதனாகிய தாவீதை எதிர்த்து அகிதோப்பேல் ஆலோசனை கூறியது போல, இன்றும் தேவ ஆலோசனை என்ற பெயரில் பலரும் கூறும் காரியங்கள் மற்றவர்களுக்கு விரோதமாகவும், அழிப்பதாகவும் அமைகிறது.

சிலர் கூறும் குறிப்பிட்ட ஆலோசனைகளை நாம் கேட்க தவறினாலோ அல்லது மறுத்தாலோ, தேவன் உங்களை இதற்காக கட்டாயம் நியாயம் தீர்க்காமல் விடமாட்டார். நான் சொன்னதை கேட்காம நீங்க இதை எப்படி செய்ய போறீங்கன்னு பாக்கறேன் என்று சாபம் கொடுப்பவர்கள் உள்ளார்கள்

சில சிக்கல்களில் சிக்கி தவிக்கும் போது, இதெல்லாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தான். என் ஜெபம் சும்மா போகுமா? இப்ப நல்ல அனுபவி என்று கூறி நம் மனதை மேலும் கஷ்டப்படுத்தும் ஆலோசனைகளும் உள்ளன. இது போன்ற ஆலோசனைகளை தேவன் அளிப்பதும் இல்லை; அவர் விரும்புவதும் இல்லை.

அகிதோப்பேலின் ஆலோசனையின் சிறப்பை அறிந்த தாவீது, அதை பயித்தியமாக்கிவிடும் என்று தேவனிடம் ஜெபிக்கிறார் (2 சாமுவேல்:15.31). எந்த அநியாயத்தையும் செய்யாத தாவீதின் ஜெபத்தை, தேவன் கேட்கிறார். அப்சலோமிற்கு, அகிதோப்பேல் சொன்ன ஆலோசனை நல்லதாக இருந்தபோதும், அது ஏற்கப்படாமல் போனது.

தனது ஆலோசனை ஏற்காமல் போனதை சகிக்க முடியாமல், அகிதோப்பேல் கழுதையின் மேல் ஏறி சென்று தன்னைத் தானே மாய்த்து கொண்டார். (2 சாமுவேல்:17.23)

தேவனுக்கும், தேவனுடைய ஊழியருக்கும் விரோதமாக ஆலோசனை கூறிய அகிதோப்பேல், தனது தவறை உணர்ந்து கொள்ளவில்லை. இன்றைய கிறிஸ்துவ உலகில் உள்ள பலரும், இந்த தவறை செய்கிறார்கள். தேவ ஊழியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் எதிராக, தவறான ஆலோசனைகளை அளிக்கிறார்கள். ஆனால் தேவன் அதை நடக்காமல் செய்யும் போது, வெறுத்து போய் தவறான முடிவை எடுக்கிறார்கள்.

அகிதோப்பேலின் தோல்விக்கு பிறகு, தனது கழுதையை சரியான திசையில் அழைத்து செல்லவில்லை. தனது கழுதையில் ஏறி, தாவீதிடம் திரும்ப சென்று மன்னிப்புக் கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு தனது கழுதையை வீட்டிற்கு நேராக நடத்தி சென்று தற்கொலை செய்து கொள்கிறார்.

இது ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றத்தை குறிக்கிறது. அதாவது எந்த மாதிரியான பாவ வாழ்க்கையில் இருந்து தேவன் நம்மை அழைத்து வந்தாரோ, அதே அனுபவத்திற்கு திரும்ப செல்லும் செயல். தங்களின் தவறான போக்கினால் தோல்வி அடையும் போது, அதற்கு என்ன காரணம் என்பதை அறிய தேவனிடம் செல்ல வேண்டும். அப்போது அதற்கான தீர்வை பெறலாம்.

மாறாக தங்களின் பழைய பாவ பழக்கத்திற்கோ, தவறான ஆலோசனைகளை தரும் நண்பர்களிடமோ செல்வதன் மூலம் அந்த தோல்வி ஜெயமாக மாறாது. மாறாக, அவர்களின் ஆலோசனைகள் நம் மனதை அழிவுக்கு நேராக திருப்பும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் தற்கொலை என்பது, ஜீவனை அளிக்கும் இயேசு, என் வாழ்க்கையில் தேவையில்லை என்ற முடிவை குறிக்கிறது. நாம் மனமாகிய கழுதையை தவறான திசைக்கு திருப்பினால், இந்த தவறான முடிவை தான் கிடைக்கும்.

எனவே நம் வாழ்க்கையில் ஒரு தோல்வி ஏற்பட்டால், அதற்காக காரணத்தை கண்டறிய தேவனிடம் வர வேண்டும். தேவ சமூகத்தில் அந்த காரியத்தை வைத்து ஆராய்ந்தால், அதற்கான தீர்வை எளிதில் பெறலாம். எல்லா தோல்விகளையும் ஜெயமாக மாற்றும் இயேசுவிடம் நம்மையே ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். இல்லாவிட்டால் நமக்கும் அகிதோப்பேலின் நிலை தான் ஏற்படும்.

(பாகம் – 8 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *