0 1 min 1 mth

பெயரில்லாத தீர்க்கத்தரிசியும் கழுதையும்

1 ராஜாக்கள் 13-வது அதிகாரத்தில், தேவனை விட்டு விலகி விக்கிரங்களை வணங்க இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்திய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் ராஜாவை எச்சரிக்க, ஒரு தீர்க்கத்தரிசியை தேவன் அனுப்புகிறார். ஆனால் அவருக்கு தேவனுடைய மனுஷன் என்றே பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையிலும் ஒரு கழுதை குறுக்கிடுவதை காணலாம்.

யெரோபெயாமிற்கு எச்சரிக்கை விடுத்த பிறகு, வந்த வழியே திரும்ப வரவோ, சாப்பிடவோ கூடாது என்று தேவனால் கட்டளை பெற்றிருந்தார். ஆனால் தேவனுடைய மனிதனால் அங்கு செய்யப்பட்டதை அறிந்த ஒரு கிழட்டு தீர்க்கத்தரிசி, அவரை குழப்பி விடுகிறார்.

இன்றும் பல சபைகளில் இது போன்ற கிழட்டு தீர்க்கத்தரிசிகளை காண முடிகிறது. அதாவது ஒரு காலத்தில் அவர்கள் எழும்பி பிரகாசித்தவர்கள். அதன்பிறகு தீர்க்கத்தரிசிகளை போல தொடர்ந்து நடித்து கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர்களுக்குள் எந்தொரு தேவ சத்தமும் கேட்பதும் இல்லை. அவர்களுக்கு ஆவிக்குரிய உணர்வும் இருப்பது இல்லை.

தேவனால் மற்றவர்கள் எடுத்து பயன்படுத்தப்படும் போது, அதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. இதனால் அவர்களிடம் தேவன் பேசாவிட்டாலும், தங்களின் பெயரும் பெருமையும் போய்விடுமே என்பதற்காக பொய்யாக கூட தீர்க்கதரிசனம் என்ற பெயரில் ஏதாவது கூறுவார்கள்.

இது போன்ற ஆட்களின் வார்த்தைகள், தேவனிடம் இருந்து வருவது போலவே இருக்கும். ஆனால் நமக்கு அளிக்கப்பட்ட அழைப்பிற்கும், ஊழியத்திற்கும் எதிரானதாக இருக்கும்.
தேவனால் அருளப்பட்ட வார்த்தையை கூறிவிட்டு சென்ற அந்த தேவனுடைய மனிதனை, அந்த கிழட்டு தீர்க்கத்தரிசி கழுதையில் ஏறி பின்தொடர்ந்து சென்றதாக (1 ராஜாக்கள்:13.14) வாசிக்கிறோம்.

இது போன்ற ஆட்கள், கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்பவர்களை துரத்தி சென்று கெடுக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

மேலும் கிழட்டு தீர்க்கத்தரிசிகளை போன்ற ஆட்கள் கூறும் காரியங்களை கேட்டு, தேவன் மீதான விசுவாசத்தை நாம் இழந்துவிட கூடாது. தேவனுடைய மனிதனுக்கு, தேவனால் தனக்கு கூறப்பட்ட காரியங்களின் மீது அவருக்கு விசுவாசம் குறைந்த போது, கிழட்டு தீர்க்கத்தரிசியின் வார்த்தை சரியானதாக தெரிந்தது.

இஸ்ரவேல் முழுவதையும் அதிர செய்யும் வகையில், தீர்க்கத்தரிசனம் கூறிய அந்த தேவனுடைய மனிதனுக்கு வெளிப்படாத காரியங்களை, இந்த கிழட்டு தீர்க்கத்தரிசிக்கு தேவன் வெளிப்படுத்துவாரா?. இதை தேவனுடைய மனிதன் யோசிக்கவில்லை.

கிழட்டு தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, அவரது வீட்டிற்கு சென்று சாப்பிட்ட பிறகு, அதே கிழட்டு தீர்க்கத்தரிசியின் மூலம் தேவனால் நியாயதீர்ப்பை பெறுகிறார் அந்த தேவனுடைய மனிதன். இதேபோல எழும்பி பிரகாசிக்கும் மனிதர்களை வீழ்த்தும், கிழட்டு தீர்க்கத்தரிசியின் ஆவியை கொண்டவர்களே, நம்முடைய ஆவிக்குரிய வீழ்ச்சியை குறித்தும் மற்றவர்களுக்கு கூறி நம்மை கேவலப்படுத்துவார்கள்.

கிழட்டு தீர்க்கத்தரிசியின் வீட்டிற்கு சென்று சாபத்தை வாங்கி, துக்கத்தோடு வீடு திரும்ப கழுதையின் மீது சென்ற தேவனுடைய மனிதனை, சிங்கம் கொன்றது என்று 1 ராஜாக்கள்: 13.24 வசனத்தில் வாசிக்கிறோம். ஆனால் அவன் பயணித்து வந்த கழுதையை, சிங்கம் கொல்லவில்லை.

நமக்கு அளிக்கப்பட்டுள்ள தேவ அழைப்பை சரியாக புரிந்து கொண்டு நடந்தால், இது போன்ற தேவனுடைய நியாயதீர்ப்புகள் நம் மீது வராமல் தவிர்க்கலாம். தேவனுடைய மனிதன் பயணித்து வந்த கழுதை அனாதையாக நிற்கிறது. இதன்மூலம் அவர் பயணிக்க வேண்டிய பாதை இன்னும் பாக்கி இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

தேவனுடைய மனிதன் தன் சொந்த கழுதையின் மீது பயணிக்காமல், கிழட்டு தீர்க்கத்தரிசியின் கழுதையின் மேல் பயணித்தான். இது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் தரிசனத்தை குறிக்கிறது. நமக்கு தேவன் அளித்திருக்கும் தரிசனத்தில் ஓடாமல், அடுத்தவர்களின் சொற்களுக்கு கீழ்படிந்து அவர்களின் தரிசனத்தில் ஓடினால், அது நீண்டநாட்களுக்கு நீடிக்காது.

மேலும் நமக்காக வைக்கப்பட்டிருக்கிற தேவ ஊழியத்தை முழுமையாக முடிக்கவும் முடியாது. எனவே கிழட்டு தீர்க்கத்தரிசிகளின் ஆவிகளுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

(பாகம் – 10 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *