0 1 min 1 mth

சிம்சோனின் வாழ்க்கையில் கழுதை

பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தருடைய ஆவி வரும் போது பலசாலியாக மாறி, சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களை செய்தவன் சிம்சோன். இந்த சிம்சோனின் வாழ்க்கையில், பெலிஸ்தரின் மீதான வெற்றிக்கு, ஒரு முறை கழுதை உதவியதை காண முடிகிறது. ஆனால் அது உயிரோடு உள்ள கழுதை அல்ல.

இஸ்ரவேல் மக்களின் பகைஞராக இருந்த பெலிஸ்தியரின் சிம்மசொப்பனமாக இருந்தவன் சிம்சோன். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் சொந்த மக்களால் கட்டப்பட்டு, பெலிஸ்தரிடம் ஒப்படைக்கப்படும் சிம்சோன், அவர்களை முறியடிக்கிறான். அதற்கு உதவும் ஒரு கழுதையின் தாடை எலும்பை குறித்து, நியாயாதிபதிகள்:15.16-ல் வாசிக்கிறோம். இதனால் 1000 பேரை கொன்று குவிக்கிறான் சிம்சோன்.

நம் வாழ்க்கையிலும் சில சந்தர்ப்பங்களில் நமக்கு நெருங்கியவர்களால் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். ஆனால் அந்த சந்தர்ப்பத்திலும் நாம் தேவனுக்காக போராட ஆயத்தமாக இருந்தால், தேவன் தமது ஆவியின் வல்லமையை அனுப்பி நமக்கு உதவுகிறார்.

சிம்சோனுக்கு உதவியது ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு என்று காண்கிறோம். தாடை எலும்பு பொதுவாக கழுதைக்கு உணவை அரைத்து உண்பதற்கு பயன்படுகிறது. இதை ஆவிக்குரிய வகையில் எடுத்துக் கொண்டால், நமது உள்ளான மனிதனுக்கு உணவாக அளிக்கப்படும் தேவனுடைய வசனத்தை, நன்கு ஆராய்ந்து அறிந்து வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணரலாம்.

அந்த கழுதையின் எலும்பு பச்சையாக இருந்தது போல, நமது உள்ளான மனிதனின் வேத தியான பண்புகள், பசுமையாக இருக்க வேண்டும். அது காய்ந்து போன நிலையில் இருந்தால், கஷ்ட நேரத்தில் உதவாது. நம்மிடம் காய்ந்த போன கழுதையின் (மனதின்) எலும்புகள் (வேத உபதேசத்தை பின்பற்றுதல்) இருந்தால், இன்றே அதை தேவனுடைய ஆவியினால் உயிர்ப்பித்து கொள்வோம்.

நம் கையில் இருக்கும் கழுதை எலும்பை பச்சையாக வைத்து கொண்டு, கர்த்தருடைய ஆவியை பெற வேண்டும். அப்போது நம்மை எதிர்த்து நிற்கும் சகல சத்துருவின் வல்லமைகளையும் நிர்மூலமாக்க முடியும்.

பெலிஸ்தரை முறியடித்த பிறகு, அவனுக்குள் களைப்பும், தாகமும் வந்து தேவனிடம் வேண்டுதல் செய்கிறான். அப்போது தேவன் பெரிய பள்ளத்தை பிளந்து தண்ணீர் அளிக்கிறார். பிசாசின் வல்லமைகளோடு எதிர்த்து நின்று, ஒரு பெரிய யுத்தத்தை செய்யும் போது, சரீரத்தில் சோர்வு ஏற்பட கூடும். அந்த நேரத்தில் தேவனை நோக்கி பார்க்கும் போது, ஆவிக்குரிய தாகத்தை மட்டுமல்ல, சரீர தேவைகளையும் தேவன் சந்திக்கிறார்.

இன்று பலரும் காய்ந்து போன எலும்புகளை வைத்து கொண்டு, சத்துருவையும் அவனுடைய வல்லமைகளையும் எதிர்கொண்டு தோல்விகளை சந்திக்கிறார்கள். அந்த தோல்விகளுக்கு பிறகு, தங்களுக்கு தெரிந்த உபதேசமும் சத்தியமும் தங்களை கைவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த சத்தியத்தில் இருந்து தேவனுக்கு உண்மையாக வாழ்ந்து, எனக்கு இழப்புகள் மட்டுமே மிச்சம் என்று புலம்புகிறார்கள்.

மேலும், காய்ந்த போன அதாவது நாம் வாழ்க்கையில் பின்பற்றாத உபதேசங்களையும் சத்தியங்களையும் மற்றவர்களுக்கு அளித்தால், அது எந்த வகையிலும் பிறருக்கு பிரயோஜனப்படாது. மாறாக, நம் மீது அவர்களுக்கு வெறுப்பும், கோபமும் மட்டுமே வரும்.

எடுத்துக்காட்டாக, அதிகளவில் கோபப்பட்டு பிறரின் மனதை புண்படும் வகையில் பேசும் நான், பிறரிடம் கோபப்பட்டு பாவம் செய்யாதிருங்கள் என்று வேத வசனம் கூறுகிறது என்று கூறினால், அது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, கேலிக்கும், கிண்டலுக்கு மட்டும் உதவும்.

எனவே தேவனுடைய சத்தியத்தை பிறருக்கு கூறுகிறவர்களாக மட்டுமில்லாமல், அதை பின்பற்றுகிறார்களாக மாறுவோம். மேலும் நம் அறி்ந்திருக்கும் சத்தியத்திற்கு உண்மையாக இருப்போம். நமக்குள் விசுவாசம், தேவ அன்பு, ஆவியின் நிறைவு ஆகியவை குறைகிறதா என்று அவ்வப்போது சோதித்து கொள்வோம். நமக்குள் இருக்கும் சத்தியம் பச்சையாக இருக்கும் வரை, எந்த சத்துருவின் தந்திரமும் நம்மை மேற்கொள்ள முடியாது.

(பாகம் –11 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *