0 1 min 4 weeks

இயேசுவின் வாழ்க்கையில் கழுதை:

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையில் கழுதை, மிக முக்கியமான பகுதியில் வருகிறது. இதுவரை யாரும் ஏறாத கழுதை குட்டியில் இயேசு ஏறி, சென்றார் என்று லூக்கா:19.30-40 வசனங்களில் வாசிக்கிறோம்.

இயேசு தனது இரண்டு சீஷர்களை அழைத்து, எதிரே உள்ள கிராமத்திற்கு சென்று, அங்கு கட்டப்பட்ட நிலையில் இருக்கும் கழுதைக் குட்டியை அவிழ்த்து வரும்படி கூறுகிறார். இது சுவிஷேசம் கூற தேவனால் அனுப்பப்படுவதை குறிக்கிறது.

இயேசு தனது சீஷர்களை தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்லுமாறு கூறவில்லை. எதிரே உள்ள கிராமத்திற்குள் செல்லுமாறு கூறுகிறார். இதிலிருந்து சுவிஷேசம் சொல்ல நீண்டதூரம் பயணித்து அலைந்து திரியாமல், நம்மை சுற்றிலும் உள்ள பகுதிகளில் முதலில் தேவனை குறித்து அறிவிப்போம்.

சுவிஷேசம் கூறுவது என்றவுடனே, பலரும் பல கிலோ மீட்டர்கள் கடந்து சென்று, இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு கிராமத்தில் சொல்வது என்று நினைக்கிறார்கள். ஆனால் முதலில் நம்மை சுற்றிலும் இருப்பவர்களுக்கு, இயேசுவை குறித்து தெரியுமா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இயேசுவின் சீஷர்கள் அந்த கழுதை குட்டியை அவிழ்த்த போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விசாரிக்கிறார்கள். அதேபோல மற்றவர்களுக்கு நாம் சுவிஷேசம் கூறினால், அதற்கு எதிரான கேள்விகள் நிச்சயம் வரும். இவை பாவ கட்டில் இருந்து விடுதலை பெறுவதை தடுக்கும் பிசாசின் வல்லமைகள் ஆகும்.

ஆனால் இது ஆண்டவருக்கு தேவை என்று கூறிய போது, அவர்கள் மவுனமாகிவிட்டதாக வாசிக்கிறோம். இதேபோல நாம் சுவிஷேசம் கூறிவிட்டு, அவர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். அப்போது அவர்களை சூழ்ந்திருக்கும் பிசாசின் வல்லமைகள் விலகும்.

மேலும் இயேசுவிற்கான கழுதை கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக காண்கிறோம். எனவே நாம் சுவிஷேசம் கூறும் நபர்கள், பாவ கட்டுகளில் கட்டப்பட்டிருப்பார்கள். அவைகளை நாம் அவிழ்க்க வேண்டியுள்ளது.

நீங்கள் பூமியில் அவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் அவிழ்க்கப்பட்டிருக்கும் என்று தேவன் அதிகாரம் கொடுத்துள்ளதாக மத்தேயு.18.18ல் காண்கிறோம். எனவே பூமியில் பிசாசின் பிடியில் உள்ள சிக்கி தவிக்கும் மக்களை விடுவிக்க நாம் கட்டு அவிழ்த்து இயேசுவின் பயணத்திற்காக ஆயத்தப்படுத்த வேண்டியுள்ளது.

கழுதைக் குட்டியின் மீது தங்களின் துணிகளைப் போட்டு, இயேசுவை ஏற்றினார்கள் என்று லூக்கா.19.35ல் காண்கிறோம். துணிகள் என்பது நம் ஜீவியம் அல்லது வாழ்க்கை முறையை காட்டுகிறது. அதாவது மற்றவர்களை இயேசுவிற்கு தகுதியானவர்களாக மாற்ற நம்முடைய சாட்சியுள்ள வாழ்க்கை பயன்பட வேண்டும்.

நமக்குள் சாட்சியுள்ள வாழ்க்கை இல்லாமல், மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வந்தால், அதன் மீது இயேசு ஏற முடியாது. இயேசு ஏறாத கழுதை, மக்கள் இடையே மதிப்பையும் பெறாது. இன்று பலரிடமும் சுவிசேஷம் கூறுகிறோம். ஆனால் நம் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு சிறந்த மாதிரியாக அவர்களுக்கு அமைகிறதா? என்று யோசிக்க வேண்டியுள்ளது. அப்படி இல்லாத பட்சத்தில் நாம் செய்யும் ஊழியங்கள் வீணாகிவிடும்.

இயேசுவை கழுதையின் மீது ஏற்றினார்கள் என்று காண்கிறோம். நான் என் ஊழியத்தை செய்துவிட்டேன். இனி கர்த்தர் பார்த்து கொள்வார் என்றோ, தேவன் அவர்களை சந்திக்கட்டும் என்றோ நாம் ஒரு புதிய ஆத்துமாவை கைவிடக்கூடாது.

இன்று பல சபைகளிலும் முதல் முறையாக வரும் ஆத்துமாக்கள், அடுத்த முறை வராததற்கு முக்கிய காரணமே இது தான். நான் சபையை காட்டிவிட்டேன். என் வேலை முடிந்தது என்று அழைத்து வந்தவர்கள் விலகி செல்கிறார்கள். இதனால் மேற்கொண்டு, புதிய ஆத்துமாக்கள் வராமல், அப்படியே பின்மாறி போகிறார்கள்.

எனவே கழுதை போல இந்த உலகில் யாருக்கும் வேண்டாதவர்களாக, கைவிடப்பட்டு கட்டப்பட்டவர்களாக இருக்கும் நம் பகுதியில் இருக்கும் மக்களை சந்திப்போம். அவர்களை ஜெபத்தில் வைத்து, அவர்களின் கட்டுகளை அவிழ்ப்போம். இந்த நபர் இயேசுவிற்கு தேவை என்று பிசாசிடம் உரிமை கோருவோம்.

இயேசுவின் நாமத்தில் விடுவிக்கப்படும் மக்களுக்கு மாதிரியாக வாழ்ந்து, இயேசுவை அவர்கள் மீது ஏற்றி பயணிக்க செய்வோம். அப்போது பலருக்கும் தேவனுடைய ஆசீர்வாதமும், நன்மையும் கிடைக்கும்.

(பாகம் –12 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *