0 1 min 12 mths

பிலயாமின் வாழ்க்கையில் கழுதை:

எகிப்தில் அடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களின் வருகையை கண்டு பயந்தான் மோவாபின் ராஜாவாகிய பாலாக். இதனால் இஸ்ரவேல் மக்களை சபிக்க, வெகுமதிகளை அளிப்பதாக கூறி வரவழைக்கப்பட்டவர் பிலயாம் (எண்ணாகமம்.22).

தேவனுடைய தீர்க்கத்தரிசியாக காணப்பட்ட பிலயாம், தேவ வழியை விட்டு பாதை மாறி சென்று தனது வாழ்க்கையை அழித்து கொண்டார். பிலயாமின் தவறான பாதையில் இருந்த ஆபத்தை அறிந்து அவரை மரணத்தில் இருந்து காப்பாற்றியது அவரது வாகனமாக செயல்பட்ட கழுதை என்பதை நினைவு கூறத்தக்கது.

நாமும் தேவ வழியை விட்டு தவறான வழியை தேர்ந்தெடுக்கும் போது நமது கழுதை என்ற உள்மனம், நம்மை எச்சரிக்கும். ஆனால் அந்த எச்சரிப்பை கண்டு கொள்ளாமல் விடும் போது, ஆபத்தில் சென்று சிக்கி கொள்ள நேரிடுகிறது.

மேலும் நமது பாவ வழிகளை குறித்து மனம் கூறும் ஆலோசனையை பொருட்படுத்தாமல் விட்டால், அதன்பின் மனம் மவுனமாகி விடுகிறது. மேற்கொண்டு எச்சரிக்கை செய்வதையும் நிறுத்தி கொள்கிறது. எனவே நமது பாவ வழிகளை குறித்து மனம் முதல் முறை எச்சரிக்கும் போதே, நமது வழிகளை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பாலாக்கிடம் இருந்து முதல் முறை அழைப்பு வந்த போது, பிலயாம் கர்த்தரிடம் அனுமதி கேட்கிறார். ஆனால் அவர்களுடன் போக வேண்டாம் என்று தேவன் கூறிவிட்டார். அதற்கு பிலயாம் கீழ்படிந்தாலும், அவரது உள்மனதில் அவர்களுடன் போக வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்தது. ஏனெனில் அவர்கள் தருவதாக கூறிய வெகுமதியை விரும்பினார் பிலயாம்.

இதனால் பாலாக்கிடம் இருந்து 2வது முறையாக கனவான்களான பிரபுகள் வந்து, தகுந்த முறையில் கனம் செய்வதாக கூறிய போது, பிலயாம் மீண்டும் அந்த காரியத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்து விடுகிறார்.

இன்றைய உலகிலும் இதே போன்ற பிலயாம்களை, நாம் காண முடிகிறது. ஜெபத்திற்கு செல்லும் நேரத்தை தியாகம் செய்து அலுவலக பணியை செய்தால் பணமும், புகழும் கிடைக்கும் என்ற ஆலோசனையை பிசாசு மற்றவர்களின் மூலம் அளிக்கலாம். அதற்கு கீழ்படிய தயங்கும் போது, மேலதிகாரிகளின் மூலம் அதை பிசாசு உறுதிப்படுத்துவான்.

அப்போது ஜெபமா? பணமா? என்ற யோசனையில் பலரும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து தேவனிடமிருந்து விலகி செல்ல ஆரம்பிக்கிறார்கள்.
உலக வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான ஒன்று தான். ஆனால் அதற்கு மேற்பட்ட சர்வ வல்லவரான தேவன் நமக்கு உண்டு என்பதை மறந்துவிட கூடாது.

தேவனை விட்டு விலகி வாழ்வதன் மூலம் எத்தனை கோடி ரூபாய்களை சம்பாதித்தாலும் அதில் சமாதானம் இருக்காது என்பதை கவனிக்க வேண்டும்.
பணம், புகழ், ஆஸ்தி போன்ற உலக காரியங்களை பெறுவதற்காக தேவனின் கட்டளைகளையும், உபதேசங்களையும் விட்டு பலரும் விலகி விடுகிறார்கள்.

இது குறித்து கேட்டால், தேவன் தரும் ஆசீர்வாதங்களை கண்டு கொள்ளாமல் விடக் கூடாது என்று விளக்கம் கூறுகிறார்களும் உண்டு. தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் பலரையும் பிசாசு இந்த தந்திரத்தை பயன்படுத்தி எளிதில் வீழ்த்தி விடுகிறான்.

இன்னும் சிலர் பணத்தையும், புகழையும் விரும்பி தேவ ஊழியங்களை செய்கிறார்கள். இந்த வகையில் ஊழியங்களை செய்வது உண்மையில் ஆவிக்குரிய மரணத்தை மட்டுமே அளிக்கும். தேவனை விட பணத்திற்கோ, வெகுமதிகளுக்கோ, புகழுக்கோ நாம் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.

தேவன் ஒரு முறை கூறியதை மீண்டும் மாற்றி கூறுவதில்லை (எண்ணாகமம்.23:19) என்பதை அறிந்த பிலயாம், அதை தீர்க்கத்தரிசனமாக கூறினாரே தவிர தன் வாழ்க்கையில் பின்பற்றவில்லை. இதனாலேயே தேவன் ஒரு முறை போக வேண்டாம் என்று கூறியும், திரும்பவும் போக பிலயாம் அனுமதி கேட்கிறார்.

நாம் ஜெபிக்கும் சில காரியங்களில் தேவன் கிரியை செய்யாமல் இருக்கலாம். அதற்காக நமது விருப்பத்தை பிடிவாதமாக கேட்கும் போது, தேவன் தனது சித்தமில்லாமல் அதை நமக்கு அளிக்கிறார். ஆனால் அது பிலயாமின் வாழ்க்கையில் நடந்தது போல ஆசீர்வாதமாக அல்ல, சாபமாகவே முடியும். நமக்கு எது தேவை என்பதை நம்மை விட தேவனுக்கு நன்றாகவே தெரியும்.

பிலயாமிற்கு பொருளாசை வந்த போது, அவனது ஆவிக்குரிய கண்கள் பார்வை இழந்தது. இதனால் எதிரே நின்ற தேவ தூதனை கூட அவனால் காண முடியவில்லை. ஆனால் அவனது கழுதைக்கு பண ஆசை இல்லாததால், தேவ தூதனை காண முடிந்தது.

எனவே பணம், புகழ் பெற வேண்டும் என்ற ஆசைக்கு இடம் கொடுத்தால் நமது ஆவிக்குரிய கண்கள் பார்வையை இழந்து, தேவனோடுள்ள தொடர்பை இழந்து விடுவோம்.

தனது தரிசனத்தை இழந்த பிலயாமினால் கழுதையின் செயலை சகித்து கொள்ள முடியவில்லை. இதனால் கழுதை மீது கோபப்பட்டு தேவையில்லாமல் அடிக்கிறார். இதேபோல சில நேரங்களில் நமது தவறான பாதைகளை சுட்டு காட்டும் மனதின் (கழுதை) ஆலோசனைகளை நாம் வெறுக்க கூடாது. அதை நிதானித்து சரியான வழிக்கு திரும்ப வேண்டும்.

கழுதையின் வாய் திறக்கப்பட்டு பேசிய போது கூட, பிலயாமினால் தனது தவறை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனோடு சண்டை போடுகிறார். இதேபோல நாம் தேவ வழிகளில் இருந்து விலகி பாவ வழிகளில் செல்லும் போது, நாம் கழுதையை போல கேவலமாக நினைக்கும் ரட்சிக்கப்படாத ஆட்கள் (உதாரணத்திற்கு நமது வீட்டிற்கு பிச்சை கேட்க வரும் பிச்சைக்காரன்) மூலமாக கூட தேவன் நமது தவறான வழிகளை சுட்டி காட்டுவார். அது போன்ற சூழ்நிலைகளில் பிலயாமை போல நாம் கோபமடைய கூடாது. நமது வழிகளை சோதித்து பார்க்க வேண்டும்.

கழுதை பேசிய பிறகும் எந்த மாற்றமும் இல்லை என்று கண்ட தேவ தூதன், பிலயாமின் கண்களை திறந்து நடந்த சம்பவத்தை கூறுகிறார். அந்த சந்தர்ப்பத்திலும் பிலயாம் அறை மனதுடன் தனது பயணத்திற்கு அனுமதி கேட்கிறாரே தவிர, தனது பயணத்தில் தேவ சித்தம் இல்லை என்பதை உணரவில்லை. தேவ சித்தமில்லாத காரியத்தை பல முறை உணர்த்திய பிறகும், திரும்ப அதை பெற்று கொள்ள அரை மனதுடன் ஜெபிப்பது நமக்கு நாமே தோண்டி கொள்ளும் குழிக்கு சமமாகும்.

இஸ்ரவேல் மக்களை சபிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிலயாம் அழைக்கப்பட்டாலும், அதை தேவன் ஆசீர்வாதமாகவே மாற்றினார். எனவே மற்றவர்கள் நாசமடைந்து துன்பத்தில் சிக்கி கொள்ள வேண்டும் என்று நாம் ஜெபிக்க கூடாது. அது போன்ற ஜெபங்களை தேவன் விரும்புவதும் இல்லை. அதற்கு பதில் கொடுப்பதும் இல்லை.

இஸ்ரவேலை ஆசீர்வாதிக்கும் பிலயாம், அவர்களை போல சாக வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக தீர்க்கத்தரிசனம் கூறினாலும் (எண்ணாகமம்.23:10), அந்த ஆசை நிறைவேறவில்லை (எண்ணாகமம்.31:8). இதேபோல நாம் தேவ வழிகளில் இருந்து விலகி ஓடினாலும், சில சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியும். ஆனால் தேவன் தனது மக்களுக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கிற பரலோகத்திற்கு சென்று சேர முடியாது.

எனவே பிலயாமை போல பணம், புகழ், ஆஸ்தி போன்றவற்றை நாடி ஓடும் பழக்கத்தை கைவிடுவோம். தேவனுக்காக நாம் செய்யும் ஊழியத்தில் நமக்கு பணம், பெயர், புகழ் ஆகியவை கிடைக்கவில்லையே என்று வருத்தப்படாமல், அந்த ஊழியங்கள் தேவனால் அங்கீகரிக்கப்படுகிறதா? என்பதை கவனித்தால் போதும். பிலயாமை போல தேவனுடைய வார்த்தைகளுக்கு விலகி செல்லாமல், தேவனுக்கு கீழ்படிந்து அவரது வழிகளில் நடந்து பரலோக ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோமாக.

(பாகம் – 4 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *