
இயேசுவும், அவரது காதலியும்:
பரிசுத்த வேதாகத்தின் ஒட்டுமொத்த சம்பவங்களின் பின்னணியில் இயேசு கிறிஸ்துவும் அவரது மணவாட்டி அல்லது காதலியும் மறைந்து காணப்படுவதை காணலாம். இது குறித்து ஆதியாகத்தில்.3.15 இருந்தே தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
ஆதியில் இருந்தே மனிதனைத் தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பிய தேவனின் நோக்கத்தை கெடுத்த பிசாசை, சிலுவையில் தனது மரணத்தின் மூலம் இயேசு ஜெயமெடுத்தார். ஏசாயா:53.10-ல் வாசிக்கும் போது, தமது சந்ததியைக் கண்டு நீடித்த நாளாயிருப்பார் என்று காண்கிறோம்.
இந்தச் சந்ததியில் இரட்சிக்கப்பட்ட நாம் எல்லாரும் இணைக்கப்படுகிறோம். இயேசுவின் இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்பட்டு, பரலோகத்திற்கு செல்ல எப்போதும் ஆயத்தமாக இருப்பவர்களே அவரது மணவாட்டியாக அறியப்படுகிறார்கள். இதை யோவான்:3.29-ல் தனது மணவாட்டியை கண்ட மணவாளனுடைய சந்தோஷம் சம்பூரணமானதாக இயேசு குறிப்பிடுகிறார்.
நமது பாவங்களுக்காக, இயேசு சிலுவையில் மரித்த போது, நம்மை (மணவாட்டி) கண்டார். உலகில் காதலிப்பவர்கள், தமது காதல் துணைக்காக உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் பெரிய பிரச்சனைகள் வரும் போது, பலரும் பின்வாங்கி பிரிந்து போகிறார்கள். ஆனால் தான் நேசித்த மணவாட்டியை தன்னோடு வைத்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக, இயேசு கிறிஸ்து தன் சொந்த உயிரையே அளித்தார்.
இந்நிலையில் இன்று பல சபைகளும், தாங்கள் தான் இயேசுவின் மணவாட்டி சபை என்று அறிவித்து வருகிறார்கள். ஆனால் இயேசு எந்த சபையையும் நிறுவ வரவில்லை என்பதோடு, எந்த குறிப்பிட்ட சபையையும், தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கவில்லை.
அப்போஸ்தர் நடபடிகளை கவனமாக வாசித்தால், ஆங்காங்கே இரட்சிக்கப்பட்டவர்கள் சபையோடு சேர்ந்தார்கள் என்று வரியைக் காணலாம். அவர்கள் பின்னாட்களில் கிறிஸ்தவர்கள் என்று அறியப்பட்டார்கள்.
எனவே கிறிஸ்துவின் மணவாட்டி என்பவர், எந்த சபையை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் அவருக்குள் தெய்வீகமான குணநலன்கள் இருந்தால் மட்டுமே, அந்த நிலையை எட்ட முடியும்.
கிறிஸ்துவின் மணவாட்டிக்கு இருக்க வேண்டிய குணநலன்களைக் குறித்து பவுலடியார், தனது நிருபங்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். அதில் முக்கியமாக அந்த சபை கற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் (2 கொரிந்தியர்:11.2). கற்பு என்பது உலகத்தின் வேஷத்தை தனக்குள் ஏற்றுக் கொள்ளாத அனுபவத்தை குறிக்கிறது.
கறை திரை முதலானவைகள் ஒன்றும் இருக்கக் கூடாது (எபேசியர்:5.27). கறை திரை என்பது உலக பழக்க வழக்கங்கள், பாவ இச்சைகள், சுயவிருப்பங்கள் ஆகியவற்றால் வரும் பாவங்களைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டிக்கு, இவைகள் இருக்கக் கூடாது.
மேலும் கிறிஸ்துவை தரித்தவர்களாக, அவரது சுபாவத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. மேற்கூறிய காரியங்களை ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில், தேவனோடு உள்ள ஐக்கியத்தில் தான் வளர்த்து கொள்ள முடியும். நாம் சார்ந்துள்ள சபைகள், ஐக்கியங்கள் மூலம் அதற்கு ஊக்கத்தையும், தேவ வசன ஆதரவையும் பெறலாமே தவிர, மணவாட்டியாக மாறுவதற்கு, நமக்குள்ளே மாற்றங்களை நாமே செய்ய வேண்டியுள்ளது.
இயேசு பரமேறி சென்ற பிறகு, கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கிறிஸ்துவின் மணவாட்டி ஆயத்தப்பட்டு கொண்டே இருக்கிறார். இந்த ஆயத்தப் பணிகள் முடிந்த பிறகு, கிறிஸ்துவோடு சேர்ந்து வாழ போகிறோம்.
இந்த மணவாட்டியின் ஆயத்த நிலைக் குறித்து இயேசு, 10 கன்னிகைகளின் உவமையில் (மத்தேயு:25.2-12) கூறுகிறார். அதில் மணவாளின் வருகை என்பதாக, இயேசுவின் இரண்டாம் வருகையையும், மணவாட்டியின் ஆயத்தம் என்பதை, சபையின் ஆயத்த நிலையையும் குறிக்கிறார். அந்த உவமையில், 10 கன்னிகைகள் மணவாளனின் வருகைக்காக காத்திருந்தனர்.
மணவாளனின் வருகை தாமதித்த போது, எல்லாரும் தூக்க கலக்கத்தை அடைந்ததாக வாசிக்கிறோம். ஆனாலும் மணவாளனின் வருகையின் சத்தத்தைக் கேட்ட போது, புத்தியுள்ள 5 பேர் விழித்து கொண்டு, அணைந்து போன தீபங்களைத் திரும்பும் ஒளியேற்றி, அவரை தகுந்த முறையில் வரவேற்றதாக வாசிக்கிறோம்.
இன்றும் மணவாட்டியாகிய சபையில் உள்ள பலருக்குள்ளும் தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. உலக தேவைகள், குடும்ப கலக்கங்கள், சபையில் ஏற்படும் பிரச்சனைகள், ஆவிக்குரிய வாழ்க்கையைச் சோர்ந்து போக பண்ணும் சம்பவங்கள் போன்றவை, இதற்கு காரணமாக அமைகின்றன. ஆனாலும் நாம் புத்தியுள்ள கன்னிகைகளாக எப்போதும் எண்ணெய்யை வைத்து தயாராக வைத்திருந்தால் மட்டுமே இயேசுவின் வருகையில் செல்ல முடியும்.
எண்ணெய் என்பது பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் நிறைவைக் காட்டுகிறது என்பது நாம் அறிந்ததே. எந்த மாதிரியான சூழ்நிலையின் வழியாக நாம் கடந்து சென்றாலும், தேவ அன்பினால் நிரப்பப்பட்டு, பரிசுத்தாவியின் வல்லமையில் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருந்தால் மட்டுமே, கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்பட முடியும்.
இரட்சிக்கப்பட்ட காலத்தில் பெற்ற பரிசுத்தாவியின் அபிஷேகம் அல்லது அந்நியப் பாஷையை மட்டுமே நம்பி வாழ்ந்தால், புத்தியில்லாத கன்னிகைகளைப் போல கைவிடப்பட்டு போக வாய்ப்புள்ளது. ஏனெனில் நமது பாத்திரங்களில் (சரீர என்ற மண் பாண்டங்களில்), எண்ணெய்யை (பரிசுத்தாவியின் அபிஷேகம்) கருதி வைக்க வேண்டியுள்ளது.
முடிவாக, இந்த சபையாகிய மணவாட்டிக்கு பரிசுத்தமான மெல்லிய வஸ்திரம் அளிக்கப்படும் என்று வெளிப்படுத்திய விசேஷம்:19.8-ல் வாசிக்கிறோம். அதன்பிறகு யுகயுகமாக இயேசுவோடு, நாம் நித்தியத்தில் வாழ முடியும்.
எனவே நாமும் அந்த இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாக மாறுவதற்கு, தேவனோடு உள்ள ஐக்கியத்தை அனுதினமும் புதுப்பித்து கொள்வோம். தினமும் பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் நிரப்பப்பட்டு, ஆவிக்குரிய மனிதனைப் புதுப்பிக்கப்பட்ட நிலையில் வைத்து கொள்வோம்.
நம்மை தேவனுடைய அன்பில் இருந்து திசைத் திருப்பக் கூடிய உலக காரியங்களைக் குறித்து ஜாக்கிரத்தையாக செயல்படுவோம். உலகில் எந்த மாதிரியான காரியங்களை இழந்தாலும் பரவாயில்லை, இயேசுவின் வருகையில் நாம் கைவிடப்பட்டு போவதற்கு வாய்ப்பு ஏற்படாத வகையில் எப்போதும் விழிப்புடன் செயல்படுவோம்.
– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.