0 1 min 6 mths

யாக்கோபு – ராகேல்:

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு காதல் ஜோடியாக யாக்கோபு – ராகேலை கூறலாம். தனது அண்ணனிடம் இருந்து ஆசீர்வாதங்களை மோசடி செய்து பெற்று கொண்ட யாக்கோபை, தாய்மாமன் லாபானின் வீட்டிற்கு செல்லுமாறு பெற்றோர் அறிவுரை கூறுகின்றனர்.

அதற்கு இணங்கி லாபானின் வீட்டிற்கு செல்லும் வழியில் யாக்கோபின் கண்களுக்கு முதலில் தென்படுகிறாள் அவனது காதல் மனைவியான ராகேல். ஆதியாகமம்: 29.10ல் ராகேலை காணும் யாக்கோபு, அவள் மீது காதல் கொள்கிறார்.

ஆனால் அதற்கு அவளது அழகு மட்டுமே காரணமாக இருக்கவில்லை என்பதை மேற்கண்ட வசனத்தை கூர்ந்து படித்தால் அறியலாம். லாபானின் ஆடுகளை மேய்த்து கொண்டு வந்த ராகேலை, அந்த ஆடுகளையும் சேர்ந்து தான் யாக்கோபு விரும்புகிறார்.

இதில் இருந்து யாக்கோபின் காதலின் பின்னணியில் பொருளாசையும் இணைவதை அறிய முடிகிறது. எனவே ராகேல் அழகுள்ளவள் என்பதோடு, அவளை திருமணம் செய்து கொண்டால், இந்த ஆடுகளையும் சொந்தமாக்கி கொள்ளலாம் என்ற எண்ணம் யாக்கோபிற்கு ஏற்பட்டதை காணலாம்.

இந்த நவீன காலத்தில் கூட இது போன்ற பல யாக்கோபுகளை காண முடிகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் அல்லது ஆண், உலக ரீதியாக எல்லா வகையிலும் செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சிலர் அதை திருமணத்திற்கு சம்பந்தம் தேடும் போதே தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் காதல் என்ற காரணத்தை முன்னிறுத்தி, தங்களின் பொருளாசையை சாதித்து கொள்கிறார்கள்.

வெளிப்புறமாக ஒரு காதல் திருமணமாக தெரிந்தாலும், பணம், பொருள், ஆஸ்தி ஆகியவற்றின் பின்னணியில் தான் பல காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக வரதட்சணை பழக்கம் கூட தற்போது வழக்கத்தில் உள்ளது. இதில் கிறிஸ்தவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது ஒரு கசப்பான உண்மை.

உங்க பையன் எங்க வேலை செய்யராரு? எவ்வளவு சம்பாதிக்கிறாரு? சொத்து பத்தெல்லாம் எப்படி? கல்யாணத்துல பொண்ணுக்கு என்ன செய்வீங்க? கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணு வேலைக்கு போகுமா? என்ற கேள்விகள், திருமணத்தின் முன் நம்மில் பலரும் சாதாரணமாக காதில் கேட்ட கேள்விகள் தான்.

ஆனால் பொருளாசையை குறித்து வேதம் கூறுகையில், அது எல்லா தீமைக்கும் வேராக உள்ளது என்கிறது. எனவே ஒரு பெண்ணை அல்லது ஆண் மகனை திருமணம் செய்து கொண்டால், குறிப்பிட்ட ஆஸ்தி கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஏற்படும் காதலும், அதனை அடுத்து நடைபெறும் திருமணமும், பல தீமைகளுக்கு காரணமாக அமையும் என்பதை எளிதாக விளங்கி கொள்ளலாம்.

இதை யாக்கோபின் காதல் திருமணத்திலும் நாம் காண முடிகிறது. ராகேலை பொருளாசையின் அடிப்படையில் காதலிக்கும் யாக்கோபு, அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, ஆதியாகமம்:29.18-ல் லாபானிடம் கூறுகிறார்.

இதற்காக 7 ஆண்டுகள் லாபானின் ஆடுகளை மேய்ப்பதாக யாக்கோபு ஒப்புக் கொள்கிறார். ஒரு வகையில் யாக்கோபு இந்த காரியத்தை தந்திரமாக கூறினாலும், அந்த திட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார் லாபான்.

ஒப்பந்தப்படி 7 ஆண்டுகள் பணியாற்றிய யாக்கோபிற்கு, அது கொஞ்ச நாட்களாக தெரிந்ததாம். அந்த அளவிற்கு ராகேலை யாக்கோபு விரும்பினார். ஆனால் ராகேலின் அக்காள் லேயாளை தந்திரமான முறையில் யாக்கோபிற்கு திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. இதனால் தனது காதலிக்காக திரும்ப 7 ஆண்டுகள் ஆடுகளை மேய்கிறார் யாக்கோபு.

மேற்கண்ட இரு சகோதரிகளையும் திருமணம் செய்த பிறகும், யாக்கோபு எதிர்பார்த்த ஆஸ்தி, தன் கைக்கு வந்து சேரவில்லை. எனவே அதை சம்பாதிக்க திரும்ப லோபானிடம் வேலை செய்ய வேண்டிய நிலை யாக்கோபிற்கு ஏற்பட்டது.

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்த யாக்கோபிற்கு, ராகேல் மூலம் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிற்காலத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது (ஆதியாகமம்:30.1-2).

அப்போதும் கூட யாக்கோபு – ராகேல் ஜோடி குறுக்கு வழியை பின்பற்றுகிறார்களே தவிர, தேவனிடம் விண்ணப்பிக்கவில்லை என்று வேதம் கூறுகிறது. இதில் இருந்து திருமணத்தில் தேவ சித்தம் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை விளங்கி கொள்ளலாம்.

யாக்கோபு அவ்வளவு நேசித்த ராகேல் மூலம் 2 மகன்களை மட்டுமே பெற்றார். அதேபோல தனது சொந்த ஊரான கானானுக்கு திரும்பும் போது, தந்தையின் விக்கிரகங்களை ராகேல் திருடிக் கொண்டு வந்ததாகவும் (ஆதியாகமம்:31.34-35), வழியிலேயே மரித்து அடக்கம் செய்யப்பட்டதாக (ஆதியாகமம்:35.19) வேதம் கூறுகிறது.

நமது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உண்டு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை தேவ சித்தத்தின்படி அமைய வேண்டும் என்று காத்திருப்பது சாலச் சிறந்தது. இல்லையெனில் யாக்கோபு – ராகேல் காதல் ஜோடிக்கு ஏற்பட்டது போல பல தேவையில்லாத பிரச்சனைகள் நம் வாழ்க்கையிலும் ஏற்படலாம்.

ஏனெனில் காதல் திருமணங்கள் பொதுவாக அழகு, ஆஸ்தி, பணம், படிப்பு, திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமைகின்றன. இதனால் நாம் காதலிக்கும் பெண் அல்லது ஆண், தேவ சித்தத்தின்படி அளிக்கப்பட்ட வாழ்க்கை துணையா? என்று யோசிப்பவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

தேவ சித்தம் அறிந்து செய்யப்படும் திருமணம் என்றும் கசப்பான உறவாக மாறுவதில்லை என்பதை யாக்கோபின் தந்தையான ஈசாக்கின் வாழ்க்கையில் காண முடிகிறது. எனவே யாக்கோபை போல நாமாக மேற்கூறிய ஏதாவது காரணத்தை முன்நிறுத்தி, ஒருவரை காதலித்து பிறகு அதனால் வரும் பிரச்சனைகளை எதற்காக வருவித்து கொள்ள வேண்டும்?

(பாகம் – 3 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *