0 1 min 6 mths

மாவீரன் சிம்சோன்:

வேதத்தில் உள்ள காதல் சம்பவங்களின் வரிசையில் அடுத்ததாக, தேவனுடைய ஆவியினால் மிகவும் பலம் மிகுந்த மனிதனாக மாறி செயலாற்றி வந்த சிம்சோனை குறித்து காண்போம்.

நியாயாதிபதிகள்:14.1-3 ஆகிய வசனங்களை படிக்கும் போது, சிம்சோனின் வாழ்க்கையில் வந்த காதல் சம்பவத்தை குறித்து காணலாம். ஒரு பெலிஸ்திய பெண்ணை காதலிக்கும் சிம்சோன், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இஸ்ரவேல் மக்களுக்கான ஒரு இரட்சகனாக, நியாயாதிபதியாக, நசரேயனாக நியமிக்கப்பட்ட சிம்சோன், ஒரு அந்நிய ஜாதியை சேர்ந்த பெண்ணை விரும்புவது ஒரு தவறான செய்கை ஆகும்.

மேலும் அதை தவறு என்று நல்வழி காட்டிய பெற்றோரின் வார்த்தைகளுக்கு கீழ்படியவும் சிம்சோனுக்கு மனம் வரவில்லை. இதனால் பெலிஸ்தர் உடன் பகை ஏற்பட காரணம் உண்டாகிறது. ஆனாலும் அது ஒரு தேவனுடைய செயலாக இருந்தது என்று வேதம் கூறுகிறது.

எனவே நம் வாழ்க்கையில் கூட சில நேரங்களில் எதிர்பாராத வகையில், யாராவது மீது நமக்கு விருப்பம் ஏற்படலாம். அதை கடந்த வாரம் நாம் கண்டது போல, தேவ சித்தம் உடன் கூடியதா? என்பதை ஆராய வேண்டும்.

சிம்சோன் விரும்பிய பெலிஸ்திய பெண்ணை பார்ப்பதற்காக சென்ற வழியில், அவனுக்கு எதிராக ஒரு சிங்கம் வருகிறது. ஆனால் தேவ ஆவியினால் பலமிகுந்தவானாக மாறும் சிம்சோன், அதை கொன்று போட்டாலும், பெற்றோருக்கு அதை மறைத்து விடுகிறார் என்று வேதம் குறிப்பிடுகிறது.

இதேபோல நம் வாழ்க்கையில் கூட பல தேவ சித்தம் கொண்ட காரியங்களுக்கு செல்லும் போது, தடைகள் ஏற்பட்டு பிசாசின் வல்லமைகள் உடன் நாம் போராட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் அதை பரிசுத்தாவியின் வல்லமையை கொண்டே நாம் ஜெயிக்க முடியும்.

நமது சுயபலத்துடன் போராடி, அவற்றை மேற்கொள்ள முடியாது. இந்த போராட்டங்களை நமக்கு நல்வழி காட்டும் மக்களோடு பகிர்ந்து கொள்ள தவறக் கூடாது. ஏனெனில் எதிர்காலத்தில் அதன் மூலமாக நமக்கு ஏதாவது பிரச்சனைகள் வராமல் அவர்கள் நமக்கு உறுதுணையாக இருக்கக் கூடும்.

மேலும் மறுமுறை அதே வழியில் வந்த போது, அந்த கொல்லப்பட்ட சிங்கத்திற்கு என்ன ஆயிற்று என்று பார்க்க சிம்சோன் வழி விலகி சென்றாக வேதத்தில் வாசிக்கிறோம். அதேபோல நாம் ஏற்கனவே தேவனுடைய நாமத்தில் ஜெயமெடுத்த போராட்டங்கள் அல்லது பாவ வல்லமைகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க, நாம் வழி விலகி செல்லக் கூடாது.

இது நமது பழைய பாவ வழிகளுக்கு திரும்பியது போன்ற நிலையை ஏற்படுத்திவிடும். நமக்காக தேவன் நியமித்துள்ள வேத வசனத்தின் அடிப்படையில் அமைந்த வழிகளை பார்த்து நடக்க வேண்டியுள்ளது.

பெற்றோருடன் வரும் சிம்சோன், அவர்களிடம் இருந்து பிரிந்து வழி விலகி சென்ற போது, கொல்லப்பட்ட சிங்கத்தின் எலும்புக்கூட்டிற்குள் தேன்கூட்டை கண்டான். அதை எடுத்து தானும் தின்று, பெற்றோருக்கும் அளிக்கிறான். ஆனால் வேத பிரமாணப்படி நசரேய விரதம் இருக்கும் மனிதன், பிணங்களின் அருகில் செல்லவோ, பிணத்தை தொடவோ கூடாது (எண்ணாகமம்:6.6-7). அப்படியிருக்க சிம்சோன் அந்த கற்பனையை இங்கே மீறியதாக காண்கிறோம்.

எனவே தேவனால் அளிக்கப்பட்ட வேத கற்பனைகளை நாம் மீறி நடக்கும் போது, அது தேவையில்லாத பிரச்சனைகளை நம் வாழ்க்கைக்கு கொண்டு வரும் என்று காண்கிறோம்.

சிம்சோனின் இந்த வழி விலகி செல்லும் பாணி இதோடு முடியவில்லை. பிற்காலத்தில் தவறான பெண்களுடன் கூடிய தொடர்பிற்கு வழி வகுத்தது. மேலும் அதற்கு பிறகு தனி மனிதனாகவே செயல்படுகிறார் சிம்சோன். இதனால் யாரும் அவனுக்கு ஆலோசனை கூற இருக்கவில்லை.

இஸ்ரவேலில் அவ்வளவு பெண்கள் இருந்தும், அவர்களில் யார் மீது விருப்பம் ஏற்படாமல், அந்நிய ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்த சிம்சோனின் தேவ பலம், ஒரு இழிவான பெண்ணினால் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேவ மக்களின் பாதுகாவலனாக ஏற்படுத்தப்பட்ட சிம்சோன், 20 ஆண்டுகள் மட்டுமே அந்த பணியில் ஈடுபட்டு, மரணத்தை தழுவினான்.

இதே நிலை நம் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க, நமது செயல்பாடுகள் தேவ சித்தத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பதை அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டியுள்ளது. நமக்கு அளிக்கப்பட்டுள்ள விலையேறப்பட்ட இரட்சிப்பு, தேவ வல்லமை, வரங்கள், ஊழியங்கள் ஆகியவற்றை பாதிக்க கூடியதாக அமையும், எந்த உறவுகளாலும் (அது காதல் ஆனாலும்) துவக்கத்திலேயே தவிர்ப்பது நல்லது.

அதில் ஒரு முறை இறங்கிய பிறகு, மீண்டும் வெளியே வந்து, பழைய வல்லமையோடு தேவ காரியங்களில் செயலாற்றுவது என்பது மிகவும் அரிதான ஒரு காரியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

(பாகம் – 4 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *