0 1 min 4 mths

தீனாளை காதலித்த சீகேம்:

யாக்கோபின் வாழ்க்கையில் வந்த ஒரு காதல் சம்பவத்தை நாம் ஏற்கனவே ஆராய்ந்த நிலையில், அவரது மகளை ஒரு பிரபு காதலித்த சம்பவத்தை குறித்து இந்த செய்தியில் காண்போம்.

முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபின் முதல் மனைவியான லேயாளுக்கு பிறந்த பெண் பிள்ளை தீனாள். 12 சகோதரருக்கு இருந்த ஒரே சகோதரி என்பதால், வீட்டில் தீனாள் செல்லப் பிள்ளையாக வளர்ந்திருக்க கூடும். இந்நிலையில் எமோரின் புத்திரர் கையில் வாங்கிய இடத்தில் யாக்கோபு கூடாரம் அமைத்து வசிக்க துவங்கினார்.

அப்போது அந்த தேசத்தை சேர்ந்த பெண்களை பார்க்க சென்ற தீனாளின் அழகில் மயங்கிய ஏவியனான ஏமோரின் மகன் சீகேம், அவளோடு நயமாக பேசி கெடுத்து விடுகிறான். அதன்பிறகு அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.

ஆனால் திருமணத்திற்கு என்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும், அது அந்த முழு பட்டணத்தில் உள்ள ஆண் பிள்ளைகளின் சாவுக்கும் காரணமாக அமைகிறது.
மேற்கண்ட தீனாளை போல, நமக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகளையும் மீறி நாம் வாழும் போது, இது போன்ற பல தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

அந்த தேசத்தில் இருந்த பெண்கள் தேவனை அறிந்தவர்களாக இருக்கவில்லை என்பதை ஆதியாகமம்:34 அதிகாரத்தை கூர்ந்து வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். இதனால் தீனாளை திருமணம் செய்து கொள்ள சீகேமின் மக்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டிய தேவை உண்டானது.

இந்நிலையில் அந்த தேசத்தில் இருந்த பெண்களுடன், தீனாள் ஐக்கியம் கொள்ள சென்றது ஒரு தவறான நடவடிக்கை எனலாம். அங்குள்ள பெண்களை காண சென்றாள் என்ற வரியில் இருந்து, அந்நிய நாட்டு பெண்களின் உடை அணியும் விதம், பேச்சு வழக்கம், உணவு முறைகள், அலங்காரம் ஆகியவற்றை கண்டறியவே தீனாள் சென்றிருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதே பழக்கம் இன்று அநேக கிறிஸ்தவர்கள் இடையே உள்ளதை காணலாம். தங்களுடன் பணியாற்றும் நபர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வழக்கமாக செயல்படும் முறைகளை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் நமக்கும், அந்த பாவ பழக்கத்தை ஒரு முறை சோதித்து பார்த்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, நமது நண்பர் ஒருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருடன் பேசும் போது, மது அருந்துவது தொடர்பான காரியங்களை குறித்து, நாம் கேட்டுக் கொண்டே இருந்தால், ஒரு முறையாவது மதுவை ருசித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தானாக நம் மனதில் தோன்றிவிடும்.

அந்த துவக்கமே பிற்காலத்தில் நாம் அந்த பாவத்திற்கு அடிமையாகி போகவும் வழிவகுக்கலாம். எனவே இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக வாழும் நாம், இரட்சிக்கப்படாதவர்களுடன் பேசும் போது, மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டியுள்ளது.

அவர்களோடு பேசுவதில் தவறில்லை. ஆனால் பாவங்களின் மீதான விருப்பத்தை ஏற்படுத்தும் தகவல்களை நாம் கேட்டு அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நண்பர்களிடம், இரட்சிக்கப்பட்ட பிறகு நாம் அடைந்திருக்கும் மாற்றங்களை குறித்து பேசலாம்.

இரட்சிப்பின் சந்தோஷத்தை எடுத்துக் கூறலாமே தவிர, அவர்களின் பாவ சந்தோஷங்களை குறித்து விளக்கமாக கேட்டு அறிவது, நமது ஆவிக்குரிய மனிதனுக்கு ஆபத்தாக முடியலாம்.

அந்த தேசத்தில் உள்ள பெண்களை காண தீனாள் சென்றதால், அவள் கேவலப்பட்டதோடு, தன்னை சுற்றிலும் இருக்கும் பலருக்கும் பெரும் பிரச்சனையாக மாறுகிறாள். எனவே மேற்கண்ட காரியத்தில் நாம் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
தேவனை அறியாத சீகேம், தீனாளை கெடுத்துவிட்டு திருமணம் செய்து கொள்ள விரும்புவதை காணலாம். தனது காதலுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் (ஆதியாகமம்:34.9-12).

ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக தீனாள் எந்தொரு வார்த்தையையும் பேசியதாக வேதம் குறிப்பிடவே இல்லை. இதிலிருந்து நடந்த சம்பவத்தில் அவளுக்கு எந்த விதமான எதிர்ப்பும் உண்டாகவில்லை என்பதை அறியலாம்.

திருமணத்திற்கு முன்பு காதலிக்கும் பலரும், தீனாள் செய்த இதே தவறை செய்கிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு, பெற்றோர், தேவ ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் என்று மற்றவர்களை அணுகி ஆலோசனை கேட்கிறார்கள்.

அப்போது தாங்கள் செய்ததில் எந்த தவறும் இல்லை என்ற வகையில் மவுனம் சாதிக்கிறார்கள். காதலித்த நபரையே திருமணம் செய்து கொடுத்தாலும், சில நேரங்களில் பெரிய பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள்.

சிலர் இரட்சிக்கப்படாதவர்களை காதலித்து விட்டு, அவர்களை திருமணம் செய்வதற்காக ஞானஸ்நானம் எடுக்க வைப்பது, சபையில் ஐக்கியப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சபைக்கு வந்துவிட்டால், ஞானஸ்நானம் எடுத்துவிட்டால் போதும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

இதனால் உண்மையான இரட்சிப்பு என்ன என்பதே தெரியாமல், பலரும் இன்று சபைகளில் தேவ அன்பு ருசிக்காத சிலைகளாக இருக்கிறார்கள். மேலும் பலருக்கும் இடறலாகவும் செயல்படுகிறார்கள்.

இது குறித்து கேட்டால், அப்படியாவது ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுமே என்கிறார்கள். இது போல திருமணத்திற்காக, இரட்சிக்கப்படும் ஆட்களுக்குள் எந்த அளவிற்கு தேவ பயந்து இருக்கும் என்பதை அவர்களின் செயல்பாடுகளில் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

எனவே தீனாளை போல, நம்முடன் பழகும் மற்றவர்களின் உலக வழக்கங்களையும், ஆடம்பரங்களையும் அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வதை தவிர்ப்போம். முடிந்த வரை நமக்கு இருக்கும் ஆவிக்குரிய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

நாம் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அது குறிப்பிட்ட எல்லைகளையும் கடந்து செல்ல அனுமதிப்பது நல்லதல்ல. மேலும் திருமணத்திற்கு முன்பே, பெற்றோர், தேவ ஊழியர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் தகுந்த ஆலோசனைகளை பெற்று, தேவ சித்தத்தின்படி சரியான நபரை திருமணம் செய்தால், அது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

(பாகம் – 7 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *