0 1 min 4 mths

தாமாரை காதலித்த அம்னோன்:

தாவீதின் மகனாகிய அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை, தாவீதின் மற்றொரு மகனாகிய அம்னோன் காதலிக்கிறான். அவள், அவனுக்கு சகோதரி முறையில் அமைந்தவள் என்பது தெரிகிறது.

2 சாமுவேல்: 13.1-ல் வாசிக்கும் போது, அம்னோனுக்கு, தாமாரின் மீது மோகம் ஏற்பட்டதாக வாசிக்கிறோம். காதலுக்கும், மோகத்திற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இன்று பலரும், இவ்விரண்டும் ஒன்றே என்று நினைப்பதால், பல தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அதாவது காதல் என்பது ஒருவர் மீது அன்பு ஏற்பட்டு, அது எந்த சந்தர்ப்பத்திலும் மாறுவதில்லை. ஆனால் மோகம் அப்படி அல்ல. ஒருவர் மீது அல்லது ஒரு பொருள் மீது ஏற்படும் அதிக ஆசை, வெறியாக மாறுகிறது. அதை அடைவதற்காக, எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு அது கொண்டு செல்கிறது.

ஆனால் அது கிடைத்த பிறகு, இவ்வளவு தானா என்று அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதே பிரச்சனைத் தான் அம்னோனுக்கும் ஏற்பட்டது. தாமாரின் மீதான மோகத்தில், உணவு, உறக்கம் ஆகியவை வெறுப்பாயின. இதனால் அவனது உடல் மெலிந்தது.

ஆனால் அதை குறித்து தகப்பன் தாவீதிற்கோ, ஆசை வைத்த தாமாருக்கோ தெரிவிக்கவில்லை. தனது நண்பனும், மகா தந்திரசாலியுமான யோனதாப்பிடம் கூறுகிறான். இதனால் தாமாருக்கு தீங்கு செய்ய வேண்டாம் என்ற எண்ணம் கொண்டிருந்த அம்னோனுக்கு, தவறான ஆலோசனை கிடைக்கிறது.

இன்றைய பல கிறிஸ்தவ குடும்பங்களிலும், இந்த நிலையை காண முடிகிறது. அழகு, சொத்து, ஆடம்பரம் என்று ஏதாவது ஒன்றை கண்டு, அவர்களின் மீது மோகம் கொண்டு விடுகிறார்கள். அதை குறித்து, பெற்றோர், தேவ ஊழியர்கள் என்று நல்ல ஆலோசனை கூறுபவர்களிடம் கூறாமல், தந்திரமான ஆலோசனையை கூறும் நபர்களிடம் கூறி விடுகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு, யோனதாப் போன்றவர்கள் மூலம் தவறான மதிக்கெட்ட ஆலோசனைகள் கிடைக்கிறது. அதன்பிறகு, எல்லாருக்கும் முன்பாக, அம்மோனை போல நன்றாக நடிக்கிறார்கள். நடிப்பின் மூலம் தாங்கள் மோகித்த நபரின் வாழ்க்கையை கெடுத்து விடுகிறார்கள்.

இன்னும் சிலர் திருமணம் கூட செய்து கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, தாங்கள் வெறித்தனமாக காதலிப்பதாக கூறிய நபரை, அடியோடு வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் கேட்டால், நான் காதலித்த போது, இருந்தது போல அவர் இப்போது இல்லை என்கிறார்கள்.

இன்று தேவாலயங்களில், காதல் என்பதன் அடிப்படையில் நடைபெறும் பல திருமணங்களும், விவாகரத்தில் முடிவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள யாரும் முன்வருவதில்லை. இதனால் குடும்பங்கள், சபையில் பெரும் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

அம்னோனின் செயலில், அவன் அம்சலோமின் கோபத்திற்கு இரையாகி கொலைச் செய்யப்பட நேர்ந்தது. தாமாரின் வாழ்க்கை சீரழிந்தது. தாவீதிற்கு கடும் கோபம் பற்றியெறிந்தது என்று காண்கிறோம்.

இதேபோல, பார்க்கும் நபரின் மீது மோகம் கொண்டு, அதை காதல் என்ற பெயரில் வளர்க்கும் பலரால், இன்று சபைகளில் பெரிய குழப்பங்கள் தான் ஏற்படுகின்றன. ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படுத்துவதை விட, இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைப்பதே, தேவ ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறிவிடுகிறது.

எனவே இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல், நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நாம் காணும் பெண் அல்லது ஆண் அழகாக இருக்கக் கூடும். ஆனால் அவர் மீது மோகம் கொள்வது சரியானதா? அல்லது அது தேவனுடைய பார்வையில் சரியானதா? என்று ஆராய வேண்டியுள்ளது.

அந்த குறிப்பிட்ட நபரின் மீதான விருப்பத்தை தேவனிடமும் பெற்றோரிடமும் தெரியப்படுத்தி, சரியான முறையில் அணுகலாம். தேவ சித்தமானால், அதற்கான தகுந்த சந்தர்ப்பத்தை, அவரே ஏற்படுத்துவார்.

நம்மோடு இருக்கும் சில தந்திரசாலிகளின் பேச்சை கேட்டு கொண்டு, அம்னோன் செய்தது போன்ற முட்டாள்தனமான காரியங்களை செய்வதால், நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றிலும் உள்ள எல்லோருக்கும் பெரிய பிரச்சனையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

(பாகம் – 8 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *