
காதலில் திளைத்து அழிந்த ஞானி:
பரிசுத்த வேதாகமத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தவர்கள் மிக அதிகம். அதிலும் ஆயிரக்கணக்கான பெண்களை திருமணம் செய்ததில், சாலொமோன் சாதனை படைத்தவர். இவர் இஸ்ரவேல் பெண்களை தவிர, மற்ற ஜாதிகளைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொண்டதாக, வேதம் கூறுகிறது.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டுவதற்காக பிறந்தவர் சாலொமோன். ஆனால் தான் ஆட்சிக்கு வந்த உடனே, தேவாலயத்தின் கட்டுமானப் பணியை துவக்காமல், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் மகளை திருமணம் செய்தார் என்று 1 ராஜாக்கள்:3.1-ல் காண்கிறோம். அதன்பிறகு தான், தனது ராஜ்ஜியத்தை நடத்துவதற்கான ஞானத்தை, தேவனிடம் கேட்கிறார்.
மேற்கண்ட தவறை, இன்று பல இளம் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் செய்வதை காண முடிகிறது. தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க அழைக்கப்பட்ட பலரும், தங்களின் அழைப்பை மறந்து, இரட்சிக்கப்படாத நபர்களை காதலிப்பதில் காலத்தை வீணாக கழித்து வருகிறார்கள். இது குறித்து கேட்டால், வாலிப வயதில் இதெல்லாம் சகஜம் பிரதர் என்கிறார்கள்.
மேலும் சிலர், நமக்கு பிடித்தவர்களை சும்மா பார்க்கிறோம் அவ்வளவு தான். அவர்களை காதலித்து, திருமணம் செய்துக் கொள்ள போவதில்லை என்கிறார்கள். துவக்கத்தில் இப்படியெல்லாம் கூறும் சிலர், பிற்காலத்தில் காதலித்தவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாகி விடுகிறார்கள்.
துவக்கத்தில், பார்வோனின் மகளை திருமணம் செய்துக் கொண்ட சாலொமோன், இஸ்ரவேலின் தேவனை மட்டுமே ஆராதித்து வந்தார். ஆனால் தேவாலயம் கட்டிய பிறகு, தனக்கு ஒரு சமாதானமான ஆட்சிக்காலம் அமைந்ததால், மோவாபியர், அம்மோனியர், ஏதோனியர், சீதோனியர், ஏத்தியர் உள்ளிட்ட பல ஜாதிகளை சேர்ந்த பெண்களையும் மோகித்து, திருமணம் செய்து கொண்டதாக, 1 ராஜாக்கள்:11.1-2 வசனங்களில் காண்கிறோம்.
இதை குறித்து கூறும் போது, நாங்கள் அப்படியெல்லாம் நிறைய பேரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று நாம் கூறலாம். ஆனால் தேவனை அறியாத, இரட்சிக்கப்படாத பலரையும் கண்டு மனதில் விரும்பி, அவர்களின் மீது காதல் வயப்படுவதே, நமக்கு சிக்கலாக மாறுகிறது. வெளி உலகிற்கு நாம் ஒரு பரிசுத்தமான விசுவாசியாக காட்சி அளித்தாலும், நமது மனதில் பலர் மீதான மோகத்தை வைத்து இருக்கலாம்.
இது குறித்து இயேசு கூறும் போது, மத்தேயு:5.28-ல் ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே, அவளோடு விபச்சாரம் செய்ததற்கு சமம் என்கிறார். அந்த கணக்கில் பார்த்தால், நம்மில் பலரும், சாலொமோனை விட எவ்வளவு பெரிய கில்லாடிகளாக இருப்போம் என்பது விளங்கும்.
பல ஜாதிகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்த சாலொமோனின் இளம் வயதில், தேவனுக்கு பயந்து வாழ்ந்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அவனது மனைவிகளின் பேச்சைக் கேட்டு, உயிரில்லாத பலவற்றையும் தெய்வமாக வணங்கினான். கர்த்தருக்கு தேவாலயம் கட்ட பிறந்த சாலொமோன், பிற்காலத்தில் அவைகளுக்கும் கோவில்களை கட்டினான் என்று வேதம் கூறுகிறது.
இதேபோல, இரட்சிக்கப்படாதவர்களின் மீது நமக்கு காதல் ஏற்படும் போது, அவர்கள் செய்வதெல்லாம் நமக்கு நன்றாக தெரியும். துவக்கத்தில், தேவனுக்கு பயந்து நாம் வாழ்ந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, தேவனை விட்டு விலக நேரிடலாம். நமக்கு பிடித்தவர்கள் கூறும் போது, மதிமயங்கி, அந்நிய தேவர்களை பின்பற்ற நிலையும் ஏற்படலாம்.
துவக்கத்தில் இது போன்ற காதல் எண்ணங்கள், ஒரு சாதாரணமான சம்பவமாக தெரிந்தாலும், பிற்காலத்தில் நம் ஆவிக்குரிய வாழ்க்கையை பெரிய பின்மாற்றத்திற்கு வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சாலொமோனின் நிலையில் தவித்து கொண்டிருப்பதாக உணர்ந்தால், இன்று தேவன் விடுவிக்க விரும்புகிறார். அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், அவரிடம் நம்மை ஒப்புக் கொடுப்பது ஆகும். இதுவரை நம்மில் வந்த தவறான பார்வை, சிந்தனை, பேச்சு வார்த்தைகள், மோகத்தை வெளிப்படுத்தும் செயல்கள் ஆகியவற்றை விட்டு மனம் திருந்துவோம்.
தேவன் அளிப்பது எல்லாமே நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்பதால், நமக்கு தேவையான நல்ல வாழ்க்கை துணையை, ஏற்ற நேரத்தில் தேவன் அளிப்பார் என்பதை விசுவாசிப்போம். காதலித்த பெண்ணை திருமணம் செய்தவராக இருக்கும்பட்சத்தில், எந்த சூழ்நிலையிலும் தேவன் நம் வாழ்க்கையில் செய்த நன்மைகளை மறந்து விடாமல் நம்மையே தேவனுக்குள் காத்து கொள்வோம்.
தேவ சித்தமில்லாத இச்சை, மோகம் ஆகியவற்றை, சிலுவையில் அறைந்து இயேசுவின் ஜெயத்தை பெறுவோம். மீண்டும் இது போன்ற எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்க, எல்லாரையும் விட இயேசுவை அதிகமாக காதலிப்போம்!
(பாகம் – 9 தொடரும்)