0 1 min 3 mths

ரூத்தும் போவாஸூம்:

வேதத்தில் பல காதலர்களைக் காண்கிறோம். அவர்களில் ரூத்தும், போவாஸூம் ஒரு மறைமுக காதல் ஜோடி என்று கூறலாம். ஏனெனில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக, வேதம் குறிப்பிடவில்லை என்றாலும், மிக கவனமாக படித்தால் இரு தரப்பிலும் விருப்பம் இருந்தது என்பதைக் காணலாம்.

ஒரு அந்நிய ஜாதியைச் சேர்ந்த ரூத், சொந்த தேசத்தில் விதவையாகி, மற்றொரு விதவையான தனது மாமியாருடன் பெத்லகேமிற்கு வருகிறார். தனது தேசத்தின் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும் பெத்லகேமிற்கு வந்த பிறகு, உணவிற்காக தேடி செல்லும் போது, போவாஸை சந்திக்கிறார். அங்கே ரூத்தை விசாரிக்கும் போவாஸிற்கு ரூத்தின் மீது விருப்பம் ஏற்படுகிறது. போவாஸின் கனிவான பேச்சு, ரூத்தை கவர்கிறது.

ஆனால் இருவரும் தங்களின் விருப்பத்தை நேரடியாக கூறாமல், அதை தகுந்த நேரத்தில், தகுந்த இடத்தில் வெளியிடுகிறார்கள். இன்று நம்மில் பலருக்கும் இது போன்ற விருப்பங்கள் ஏற்படாமல் இல்லை. தேவாலயத்தில் மட்டுமின்றி, தேவ பயம் உள்ள எதிர்பாலாரை வேறு இடங்களில் காணும் போதும், நாம் கவரப்படுகிறோம். அதை சிறிது சிறிதாக வளர்க்க சுயமாக முயற்சி செய்யும் போது, சில நேரங்களில் தவறான முடிவுகளுக்கு வழி நடத்தப்படலாம்.

ஆனால் ரூத்தின் விஷயத்தில், அவர் சொந்தமாக முடிவு எடுக்கவில்லை. போவாஸின் மீது விருப்பம் இருந்தாலும், நடந்த எல்லா காரியங்களையும் மாமியார் நவோமிடம் கூறுகிறார். அவரது ஆலோசனைகளுக்கு ஏற்ப செயல்பட்ட போது, தேவன் ஏற்ற நேரத்தில் போவாஸை மணக்க வழிவாசலை ஏற்படுத்தி கொடுத்தார்.

அதேபோல போவாஸும் தனது விருப்பத்திற்கு ஏற்ப, உடனடியாக ரூத்தை திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல், தன்னை விட நெருங்கிய உறவு முறையில் உள்ளவரிடம் அனுமதி பெற்ற பிறகே, ரூத்தை மணந்து கொள்கிறார்.

இதேபோல நமக்குள் ஏற்படும் இது போன்ற விருப்பங்களை பெற்றோரிடம் அல்லது தேவ ஊழியர்களிடம் கூறி, தகுந்த ஆலோசனைகளை முதலில் பெற வேண்டும். ஏனெனில் நமது தேவைகளை அறிந்த தேவன், தகுந்த நேரத்தில் நமக்கு ஒரு வாழ்க்கைத் துணையை தரவும் அறிந்திருக்கிறார்.

எனவே அவர் ரூத்தையும் போவாஸூம் சந்திக்க வைத்தது போல, நமக்கும் நிகழ செய்யலாம். அதை நமது சொந்த புத்தியை பயன்படுத்தி செயல்படுத்த முயற்சிக்கும் போது, தோல்வியை சந்திக்கிறோம். அவசரப்பட்டு விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளும் பலரின் பெற்றோரும், சொல்லியிருந்தா நாங்களே விசாரிச்சு கல்யாணம் பண்ணி வைச்சிருப்போமோ? என்று துக்கப்படுவதை காண முடிகிறது.

தேவன் முன்குறித்து வைத்துள்ள நேரத்திற்காக காத்திருக்காமல், அவசரப்படும் போது, பெற்றோர், விசுவாசிகள், தேவ ஊழியர்கள் என்று பல தரப்பினருக்கும் வருத்தத்தை உண்டாக்கும். இதனால் நமது மண வாழ்க்கையின் மூலம் தேவன் வைத்துள்ள ஆசீர்வாதத்தை முழுவதுமாக பெறவும் தடை ஏற்படலாம்.

போவாஸூம், ரூத்தும் எல்லா காரியங்களையும் தேவ சித்தத்திற்காக ஒப்புக் கொடுத்து, தேவன் நியமித்துள்ள காலம் வரை காத்திருந்து மணந்து கொண்டனர். இதனால் அவர்களின் சந்ததி கூட ஆசீர்வாதமாக இருந்தது.

ஒரு அந்நிய ஜாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், தேவ சித்தம் போல நிகழ காத்திருந்த போது, ரூத்தின் வாயிலாக, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர் என்ற சாட்சியை பெற்ற தாவீதையும், மனுக்குலத்திற்கு மீட்பு அளிக்க தன் உயிரையே தந்த இயேசு கிறிஸ்துவையும் கொண்ட சந்ததியைப் பெற்றெடுக்க முடிந்தது.

எனவே நம் மனதில் ஏற்படும் மற்றவர்களின் மீதான விருப்பங்களை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுத்து, ஒரு தெய்வீகமான ஆலோசனை அளிக்க கூடிய நபர்களிடம் அதைக் குறித்து கூறுவோம். சங்கீதம்:37.5-ல் உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாய் இருந்தால், அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் என்று வாசிக்கிறோம். எனவே எல்லாவற்றையும் நன்மைக்காக செய்யும் தேவன், ஏற்ற நேரத்தில் நம் மனவிருப்பத்தையும் நிறைவேற்றுவார் என்று விசுவாசிப்போம்.

(பாகம் – 10 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *